

இந்தியா முழுவதும் 137 ராணுவ பொதுப் பள்ளிகள் (Army Public School) உள்ளன. இந்த ராணுவ பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் ஆண்டு தோறும் மேற்கொள்ளப்படுகிறது. 2017-2018-ம் கல்வி ஆண்டில் பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணிகளில் 8 ஆயிரம் காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் இளங்கலை பட்டத்துடன் பி.எட். முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள், சி.பி.எஸ்.இ. சி-டெட் தகுதித்தேர்வு அல்லது மாநில அளவில் நடத்தப்படும் ‘டெட்’ தகுதித்தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டமும், பி.எட். பட்டமும் அவசியம்.
புதிதாக ஆசிரியர் பணிக்கு வருவோர் எனில் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி அனுபவம் இருப்பின் 57 வயது வரை இருக்கலாம். இதற்கு கடந்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் தேவை. மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். எழுத்துத்தேர்வு, நேர்காணல், பாடம் கற்பிக்கும் திறன் அடிப்படையில் தகுதியானோர் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள்.
என்ன கேட்பார்கள்?
எழுத்துத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். இதில், பொது அறிவு, நுண்ணறிவுத்திறன் கல்வியியல் மற்றும் சம்பந்தப்பட்ட பாடத்திலிருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். தவறான விடைகளுக்கு மைனஸ் மதிப்பெண் போடப்படும். எழுத்துத் தேர்வு நவம்பர் இறுதி வாரத்தில் தமிழகம் முழுவதும் தேர்வு நடைபெறும். >www.aps-csb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் செப்டம்பர் மாதம் 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.