Published : 08 Nov 2014 03:30 PM
Last Updated : 08 Nov 2014 03:30 PM

என் வீட்டின் ‘பெரிய’ கதை

“வீட்டு ஓனரின் சம்சாரம் பேசும் குத்தல் பேச்சுகளை கேட்டுகிட்டு என்னால சும்மா இருக்க முடியாது.சும்மாவா இருக்கிறோம்? வாடகை குடுக்கிறோம்ல. பைப்பை மூடு, லைட்டை அமத்து, வாசலைக் கூட்டு, டிவி சவுண்ட குறை- சேச்சே ... இனி ஒரு நிமிஷம் இந்த வீட்டிலே என்னால காலந்தள்ள முடியாது. ஒவ்வொரு வாடகை வீடா என்னால காவடி எடுக்க முடியாது”

மனைவியின் பேச்சைக் கேட்கச் சங்கடமாகவும் கவலையாகவும் இருந்தது. அந்தக் கணத்தில் சொந்த வீடு கட்டியே தீர வேண்டும் என முடிவு எடுத்தேன். நான் சொல்வது 1999-ம் ஆண்டு நடந்த கதை. அதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே சென்ட் ஐயாயிரம் ரூபாய் என நாலரை சென்ட் நிலத்தை வாங்கிப் போட்டிருந்தோம். அதை எப்போதாவது போய் எட்டிப் பார்த்துவிட்டு வருவோம்.கொழுஞ்சிச் செடிகளும் முட்செடிகளுமாகக் கிடக்கும். நாலைந்து பனை மரங்கள் உயரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும்.

இதில் எப்படி வீடு கட்டி, குடியேறப் போகிறோம்? என நினைத்தோம். கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.அலுவலகத்தில் என் மீது அன்பு காட்டிய உதவி இயக்குநரிடம் வீடு கட்டும் ஆசையை வெளியிட்டேன், “பணம் எவ்வளவு வெச்சிருக்கீங்க?” எனக் கேட்டார். “பணமா ?” என விழி பிதுங்கிக் கேட்டேன். “குறைந்தது மூணு லட்சமாவது தேவைப்படும்” என்றார்.

“சம்பளத்தைத் தவிர வேறு சேமிப்பு இல்லை.வேறு சொத்துகளோ, நகைகளோ ஏதுவுமில்லை” எனக் கசந்த சிரிப்புடன் சொன்னேன். “பைத்தியக்காரா” எனச் சொல்லி நகைப்பார் என நினைத்தேன். ஆனால், “கவலைப்படாதீங்க. எனக்கு ஒரு வங்கி மேலாளரைத் தெரியும். வீட்டுக் கடன் கேட்டு விண்ணப்பம் எழுதிக்கொண்டு அவரைப் போய்ப் பாருங்கள்” என்றார்.

வங்கிக் கடன்

அடுத்த நாள் வங்கிக்குச் சென்றேன். மேலாளர் விண்ணப்பத்தைப் பார்த்தார். என்னைப் பார்த்தார். உதவி இயக்குநரின் கடிதத்தையும் பார்த்தார். பீல்டு ஆபீசரிடம் அனுப்பி வைத்தார். வீட்டுமனைப் பத்திரத்தைக் காட்டி சப் ரிஜிஸ்திரார் ஆபீசில் வில்லங்கச் சான்றிதழ் வாங்கச் சொன்னார். அந்த வில்லங்கச் சான்றிதழை வங்கி வழக்கறிஞரிடம் காட்டி சர்டிபை செய்யச் சொன்னார்.

இவை எல்லாவற்றை செய்து முடித்துவிட்டேன். ஓரளவு திருப்தியும் வந்தது. ஆனால் அதன் பிறகு “உங்க பேங்க் அக்கௌண்டில் அம்பதாயிரம் டெபாசிட் செய்யணும். கட்டிட பிளானை பஞ்சாயத்தில் அப்ரூவ் வாங்கிக் கொடுக்கணும். அதுக்கு முன்னால நானும் மேலாளரும் உங்க வீட்டு மனையைப் பார்வையிட வருவோம்” என்று அடுக்கிக்கொண்டே போனார்.

அந்தக் காலத்தில் எனக்கு சுகரோ, பிபியோ இல்லாத காரணத்தால் தலைசுற்றல் வரவில்லை.கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல் இருந்தது. “என்னாச்சு ? பேயறைஞ்ச மாதிரி இருக்கீங்க” என்ற மனைவியின் குரலால் திடுக்கிட்ட நான், எப்படி வங்கியிலிருந்து பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தேன் என்பது இந்த நிமிடம்வரை புரியாத புதிர்.

ஏற்கனவே வீடு கட்டிய அனுபவசாலி நண்பர் களைத் தேடிப் பிடித்து வில்லங்கச் சான்றிதழ் என்றால் என்ன? சப் ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ் எங்குள்ளது? வங்கியின் லாயரை எங்கே, எப்போது சந்திப்பது ?

கட்டிட பிளான் யார் போடுவா ? பஞ்சாயத்து ஆபீசில் யாரை அணுக வேண்டும் ? எப்படி அனுமதி வாங்குவது ? என ஓராயிரம் கேள்விகள் கேட்டேன். அவர்களின் ஆலோசனைகளை, வழிகாட்டல்களை, சமயத்தில் அலட்சியங்களையும் ஏளனங்களையும் சகித்துக்கொண்டு ஓயாமல் அலைந்து திரிந்தேன். இடையில் வங்கியிலிருந்து தகவல் வந்தது. அன்று பார்த்து மழை பெய்தது. நாங்கள் போக வேண்டிய பஸ் நேரத்திற்கு வரவில்லை.குறிப்பிட்ட நேரத்திற்கு முக்கால் மணி நேரம் தாமதமாகப் போனோம். பீல்டு ஆபீசர் முகம் கொடுக்கவில்லை.

முன்பணம்

ஒரு மணி நேர காத்திருப்பிற்கு பிறகு மேலாளர் கூப்பிட்டு அனுப்பினார். இரண்டு கைகளையும் குவித்து வணங்கி, “மன்னித்துக் கொள்ளுங்கள். இனி இது போல் தாமதிக்க மாட்டோம்” என்றேன். அவரும் பெரிய மனது பண்ணி மன்னித்தனர்.

அந்த நிகழ்ச்சி நீண்ட நாட்களுக்கு மனதில் வலி ஏற்படுத்தியது. டெபாசிட் அம்பதாயிரத்துக்கு எங்கே போவது ?

- உங்க அப்பாகிட்டே கேளுங்க.

- இப்படி செஞ்சா எப்படி ? நமக்கு நெருங்கிய நண்பர்கள் 50 பேரிடம் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கேட்டால் என்ன ?

- அப்படியெல்லாம் பிச்சை எடுக்க வேண்டாம். அது ரொம்பக் கேவலம். ஏன் உங்க ஆபீசில் கேளுங்களேன்.இத்தனை வருஷம் நாயா பேயா வேலை செய்யறீங்க. இதுகூடச் செய்ய

மாட்டாங்களா ?

- அதெல்லாம் மாட்டாங்க. மாதாமாதம் சம்பளம் கொடுக்கிறதே பெருசு. மிஞ்சிப் போனா பத்தாயிரம் ரூபாய் கடன் கொடுப்பாங்க.

- அதை மொதல்ல வாங்குங்க. அப்புறம் உங்க வீட்டில் கேளுங்க. நானும் கேக்கிறேன்.

தூக்கம் வராமல் இரவு முழுவதும் நானும் மனைவியும் ஆலோசனையிலேயே கழித்தோம். கடைசியில் அவரவர் சொந்த பந்தங்களிலிருந்து முப்பதாயிரம்தான் கிடைத்தது. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்குக் கடிதம் எழுதினேன், “இருபதாயிரம் கொடுங்கள், மாதம் ஐநூறு ரூபாயாகத் திருப்பித் தருகிறேன்” என்றேன். ஒரு வாரம் கழித்து போனில் நண்பரின் குரல். “யார் பேருக்கு செக் அனுப்பட்டும் ?” மனைவியின் காதில், கையில் கிடந்ததை வைத்துக் கொஞ்சம் தேற்றினோம்.

கட்டிட வேலை

ஒரு நல்ல நாளில் வாஸ்து செய்து ஆழ்துளை கிணறு போட்டு வாணம் தோண்டப்பட்டது. தற்காலிகக் குடிசை அமைத்து வேலைகள் தொடங்கின. மணல் மூன்று யூனிட் ரூபாய் 2,100. கல்லு ஜல்லிக்கு ரூபாய் 9 ஆயிரம். கொத்தனாருக்குக் கூலி வகையில் ரூபாய் 2,500. சிமெண்ட் 32 மூடை ரூபாய் 4,600. வாட்ச்மேன் சம்பளம் ரூபாய் 500. இவை எல்லாவற்றையும் ஒரு குயர் நோட்டில் மனைவி எழுதி வைத்திருந்த புள்ளிவிபரங்களைப் பார்த்துப் பாராட்டினேன். எங்களுக்குள் அப்போது சமாதானம் வந்திருந்தது.

ஒரு நாள் அலுவலகத்திலிருந்து நேரே கட்டிட வேலை நடக்குமிடத்திற்குச் சென்றேன்.வேலை ஜரூராக நடந்து கொண்டிருந்தது. கொத்தனார், நிமிர்ந்தாள்களுடன் ஒரு சித்தாளாக வேலை செய்து கொண்டிருந்த மனைவியைப் பார்த்ததும் அடக்க முடியாதபடி எனக்குக் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்ததை இப்போது நினைத்தாலும் மனம் கனக்கிறது.

ஒவ்வொரு நாளும் புதுப்புது சிக்கல்கள் முளைத்தன. மணல் லாரி வரவில்லை. செங்கல் போதவில்லை. போர்வெல்லில் தண்ணீர் குறைந்து விட்டது. தண்ணீர் லாரி வராமல் டிமிக்கி கொடுக்கிறான். வங்கியிலிருந்து இரண்டாவது தவணை கொடுக்கத் தாமதமாகிறது. ஈபி கனெக்சன் கிடைப்பது தள்ளிப் போகிறது. ஒவ்வொன்றையும் கணவன் மனைவியும் கலந்து பேசித் தீர்வு கண்டோம். பூமிக்குள்ளிருந்து வீடு எழும்பி வருவதுபோல ஒவ்வொரு நாளும் வேலையில் முன்னேற்றம் தெரிந்தது.

வீ ட்டின் கூரையில் கான்கீரீட் போட நாள் முடிவாயிற்று. அன்றைக்கு மதியம், வேலை ஆட்களுக்குச் சாப்பாடு போடுவது வழக்கம். அதற்கு முதல் நாள் வெளியூர் போகவேண்டிய வேலை எனக்கு. திக்கு முக்காடினோம். “நான் பார்த்துக் கொள்கிறேன்” என்ற மனைவியை வெறுமையாகப் பார்த்தேன். வெளியூரிலிருந்து திரும்பி வந்தபோது வீட்டின் கூரை மீது நின்று தண்ணீர் பீய்ச்சிக் கொண்டிருந்த மனைவி மக்களைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தேன்.

யாரைப் பார்த்தாலும் வீட்டுவேலை எப்படிப் போகுது என்பார்கள். கிண்டிக் கிளறிவிட்டுப் போகிற போக்கில் ஒரு கமெண்டோடு முடிப்பார்கள்; ‘நாய் படாத பாடுபட்டுத்தான் வீடு கட்டி முடிக்க முடியும்’.

அந்த கமென்ட் மட்டும் அசரீரி போல காதில் ஒலித்த வண்ணம் இருக்கும்.

தரைகளுக்கு தட்டு ஓடு பதித்தால் போதும். மொசைக் வேண்டாம். குளியலறை, கழிவறை யெல்லாம் சிமெண்ட் தரை போதும் என்பதில் உறுதியாக இருந்தோம். ( இதில் என்ன உறுதி? காசில்லாத குறைதான்).

ஒரு வரவேற்பறை, ஒரு ஹால், ஒரு படுக்கையறை, சமையலறை, கழிவறை, குளியலறை அடங்கிய 640 சதுர அடியில் வீடு கட்டி முடித்தபோது கணக்குப் பார்த்தோம். இரண்டு லட்சத்து இருபத்தேழாயிரம் ரூபாய் ஆயிற்று. இதில் சிமெண்ட் செலவுதான் முதலிடம் - 38 ஆயிரம் ரூபாய். அடுத்து கொத்தனார் கூலி - 30 ஆயிரம் ரூபாய். குறைந்த செலவு கழிவறைக்கு - 1,300 ரூபாய் ஆனது.

வங்கிக் கடன் ரூபாய் ஒரு லட்சத்து எழுபதாயிரம் மட்டும்தான். அதற்கு மாதம் ரூபாய் இரண்டாயிரத்து நூறு திருப்பிச் செலுத்தினோம்.15 வருடங்கள் கட்டுவதாகத் திட்டம். ஆனால், 12 வருடங்களில் திருப்பிச் செலுத்தி விட்டோம். போன மாதத்தில் குடும்ப நண்பர் ஒருவர், “வீடு எப்பக் கட்டினீங்க” எனச் சாதாரணமாகக் கேட்டார். நான் மேற்கண்ட பெரிய கதையைச் சொன்னேன். “இப்போது வீடும் இடமும் சேர்த்து இதன் மதிப்பு 25 லட்சம் ரூபாய் இருக்கும்” என்றார்.

“அப்படியா ?” என வாயைப் பிளந்தேன் நான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x