Last Updated : 28 Feb, 2014 12:00 AM

 

Published : 28 Feb 2014 12:00 AM
Last Updated : 28 Feb 2014 12:00 AM

ஆஸ்கர் கனவுகள்: ஓர் ஆரூடம்

உலகமெங்கும் உள்ள திரைப்பட ரசிகர்கள், ஆர்வலர்களின் கவனத்தை மார்ச் 2ஆம் தேதி லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் டால்பி திரையரங்கில் நடைபெற உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி ஈர்த் துள்ளது. 1929இலிருந்து நடக்கும் நிகழ்ச்சிதான் என்றாலும், 86ஆவது ஆஸ்கர் விருது நிகழ்ச்சி கவனம் பெறக் காரணம், கடந்த ஆண்டு வெளியான சிறந்த படங்கள்தான். குறிப்பாக சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இருக்கும் படங்கள் அனைத்துமே ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் ஒருசேரப் பாராட்டப்பட்டவை. ’தி வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’, ’டல்லாஸ் பையர்ஸ் கிளப்’, ‘க்ரேவிட்டி’,’12 இயர்ஸ் எ ஸ்லேவ்’ உள்ளிட்ட 9 படங்கள் சிறந்த படத்துக்கான போட்டியில் உள்ளன. சிறந்த நடிகர்கள் பிரிவிலும் கடுமையான போட்டி தான்.

மார்ச் 2 அன்று நடக்கவுள்ள ஆஸ்கர் விருதுப் போட்டியில் வெல்லப்போகும் படைப்புகள், கலைஞர்கள் பற்றி பார்ப்போம்.

க்ரேவிட்டி - 12 இயர்ஸ் எ ஸ்லேவ்

'ஸ்பீட்' புகழ் சாண்ட்ரா புல்லக், ஜார்ஜ் க்ளூனி நடித்த ‘க்ரேவிட்டி’ படம் மொத்தம் 10 பிரிவுகளில் போட்டியிடுகிறது. விண்வெளிக் கழிவுகள் மோதியதால் பழுதடையும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நாயகி சாண்ட்ரா புல்லக் தப்பித்து பூமியை வந்தடைகிறார் என்ற ஒரு வரிக் கதையை, தொழில்நுட்ப சாத்தியங்களுடன் விறு விறுப்பாகப் படமாக்கியிருந்தார் அல்போன்ஸோ கோரான். இந்தப் படத்துக்கு சவால் விடுகிறது, ஸ்டீவ் மெக்குயின் இயக்கிய ‘12 இயர்ஸ் எ ஸ்லேவ்’. சுதந்திர வாழ்க்கை வாழ்ந்த சாலமன் நார்தப் என்ற கருப்பின மனிதர், அமெரிக்கப் பண்ணை முதலாளிகளிடம் கொத்தடிமையாகச் சிக்கிக்கொண்டு சித்திரவதைப்பட்ட உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது.

இப்படங்களுக்குப் போட்டியாக ‘அமெரிக்கன் ஹஸில்’ களத்தில் இருக்கிறது. 1970களில் அரசியல் மட்டத்தில் நடக்கும் ஊழல்களைக் கண்டறிய இரண்டு மோசடிப் பேர்வழிகளின் உதவியுடன் எப்.பி.ஐ. விரிக்கும் மர்ம வலைதான் படத்தின் பின்னணி. இவை போக, 'நெப்ராஸ்கா' (Nebraska), 'கேப்டன் பிலிப்ஸ்', 'ஹர்’ (Her) போன்ற படங்களும் பட்டியலில் உள்ளன.

காத்திருக்கும் டி காப்ரியோ

லியானார்டோ டி காப்ரியோவுக்கு ஒரு ராசி உண்டு. மனிதர் கடுமையாக உழைத்து நடிப்பார். ஆஸ்கர் பரிந்துரை வரைக்கும் வந்துவிடுவார். கடைசியில் வேறு யாராவது சிறந்த நடிகருக்கான விருதைத் தட்டிப் பறித்துவிடுவார். இதற்கு முன் ’ப்ளட் டயமண்ட்', 'த ஏவியேட்டர்' உள்பட மூன்று படங்களுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர், தற்போது ’தி வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’ படத்துக்காக ஆஸ்கர் கிடைக்குமா என்று பரிதவித்துக்கொண்டிருக்கிறார். இந்த முறையும் அவர் ஏமாற்றமடையக் கூடும். ஏனெனில், அவருக்குக் கடும் போட்டியாக நிற்பவர் ‘டல்லாஸ் பையர்ஸ் கிளப்’ படத்தில் எய்ட்ஸ் நோயாளியாக நடித்து ரசிகர்களின் மனதைக் கனக்க வைத்த மேத்யூ மெக்கானகி. விமர்சகர்களும் இவருக்குத்தான் கிடைக்கும் என்று கூறுகின்றனர். இவர்களுக்குப் போட்டியாக சிவெட்டெல் எஜியோபோர் (12 இயர்ஸ் எ ஸ்லேவ்), புரூஸ் டெர்ன்(நெப்ராஸ்கா), கிறிஸ்டியன் பேல்(அமெரிக்கன் ஹஸில்) உள்ளனர்.

பிளாங்கெட்டுக்கு ரெட் கார்பெட்

இந்த முறை சிறந்த இயக்குநர் போட்டியில் வூடி ஆலன் இல்லை. ஆனால் அவர் இயக்கிய ‘ப்ளூ ஜாஸ்மின்’ படத்தின் நாயகி கேட் பிளாங்கெட் சிறந்த நடிகைக்கான விருதைத் தட்டிச் சென்றுவிடுவார் என்று தெரிகிறது. படத்தில் ஜாஸ்மின் என்ற பில்லியனர் பெண்மணி பாத்திரத்தில் கேட் நடித்திருக்கிறார். பல பெண்களுடன் தொடர்பு, மோசடிகள் என்று இருண்ட பக்கங்கள் கொண்ட அவளது கணவனால் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகிறாள். கடைசியில் மனநலம் பாதிக்கப்படும் பாத்திரத்தில் அற்புதமாக நடித்த கேட்டுக்குத்தான் விருது என்று ஹாலிவுட் பட்சி சொல்கிறது. மெரீல் ஸ்ட்ரீப் (ஆகஸ்ட்: ஓஸேஜ் கவுன்டி), ஆமி ஆடம்ஸ் (அமெரிக்கன் ஹஸில்) போன்றோருக்கும் வாய்ப்புள்ளது.

வரலாறு படைக்க வாய்ப்பு

மார்ட்டின் ஸ்கார்சஸிக்கு வயது 71தான் ஆகிறது. இந்த இளம் வயதில் மனிதர் ’தி வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’ என்ற ஆர்ப்பாட்டமான படத்துடன் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் களத்தில் நிற்கிறார். படு ஸ்டைலிஷாகப் படத்தை இயக்கியிருப்பதாக விமர்சகர்கள் கொண்டாடினர். ஆனால், ‘க்ரேவிட்டி’ படத்தை இயக்கிய அல்போன்ஸோ கோரான்தான் பந்தயத்தில் முன்னணியில் ஓடிக் கொண்டிருக்கிறார். ’12 இயர்ஸ் எ ஸ்லேவ்’ படத்தில் கருப்பின மனிதர்களின் வலியைச் சொன்ன ஸ்டீவ் மெக்குயின், ’அமெரிக்கன் ஹஸில்’ படத்தை இயக்கிய டேவிட்.ஓ.ரஸ்ஸல் போன்றோரும் போட்டியில் உண்டு.

ஸ்டீவ் மெக்குயினுக்கு ஆஸ்கர் கிடைத்தால் அது வரலாறு. ஏனெனில் கருப்பினத்தைச் சேர்ந்த யாரும் சிறந்த இயக்குநர் விருதை இதுவரை வென்றதில்லை.

உறையவைக்குமா ‘ஃப்ரோஸன்’?

அனிமேஷன் திரைப்படங்களைப் பொறுத்தவரை எளிமையான கதை, விறுவிறுப்பான திரைக்கதை, மெல்லிய நகைச்சுவை மற்றும் மிகச் சிறந்த இசையுடன் வெளியான ‘ஃப்ரோஸன்’ (Frozen) முப்பரிமாணப் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. வரமே சாபமானதால் ஒரு இளம் அரசிக்கு ஏற்படும் சிக்கல்கள், அதைத் தீர்க்க அவளது தங்கை மேற்கொள்ளும் சாகசப் பயணம் என்று ரசிகர்களைக் குதூகலப் படுத்திய இப்படம் வசூலையும் வாரிக் குவித்தது. இந்தப் படத்துக்குப் போட்டியாக ஜப்பான் தயாரிப்பான ‘தி விண்ட் ரைஸஸ்’ என்ற இரு பரிமாணப் படம் உள்ளது. இரண்டாம் உலகப்போர் பின்னணியில் அமைந்த இப்படம் ஜப்பானிய ‘மாங்கா’ காமிக்ஸ் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் பின்னணியில் அமைந்த ஜாலியான ‘க்ரூட்ஸ்’ படமும் களத்தில் உள்ளது.

கடற்கொள்ளையருக்கு வாய்ப்பு

துணை நடிகர்களுக்கான விருதும் ஹாலிவுட் உலகில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ’கேப்டன் பிலிப்ஸ்’ படத்தில் சோமாலியக் கடற்கொள்ளையனாக டாம் ஹாங்ஸை மிரட்டிய பர்காத் அப்திக்கும் ‘டல்லாஸ் பையர்ஸ் கிளப்’ படத்தில் திருநங்கையாக நடித்த ஜாரெட் லெட்டோவுக்கும் இடையில் இப்பிரிவில் பலத்த போட்டி.

துணை நடிகை பிரிவில் ’12 இயர்ஸ் எ ஸ்லேவ்’ படத்தில் கருப்பின அடிமைப் பெண்ணாக நடித்த லுபித்தா நியோங்கோவுக்கும் ‘அமெரிக்கன் ஹஸில்’ படத்தில் கவர்ச்சியில் கலக்கிய ஜெனிஃபர் லாரன்ஸுக்கும் இடையில் தான் போட்டி.

சிறந்த வெளிநாட்டுத் திரைப் படத்துக்காக ’தி க்ரேட் பியூட்டி’ என்ற இத்தாலித் திரைப்படமும் ’ப்ரோக்கன் சர்க்கிள் ப்ரேக்டவுன்’ என்ற பெல்ஜியம் நாட்டுத் திரைப்படமும் உள்ளன. பாலஸ்தீனியப் படமான ‘ஓமர்’ படத்துக்கும் வாய்ப்பு உள்ளது.

இசையைப் பொறுத்தவரை ’கிரேவிட்டி’ படத்துக்காக ஸ்டீவன் பிரைசுக்கும் ’பிலோமினா’ படத்துக்காக அலெக்ஸாண்ட்ரே டெஸ்ப்ளாட்டுக்கும் வாய்ப்பு அதிகம். எனினும், பின்னணி இசைக்கு உலக அளவில் முன் னோடியான ஹான் வில்லியம்ஸ் ‘தி புக் தீஃப்’ படத்துக்கு அமைத்திருக்கும் இசை விருதைத் தட்டிச் செல்லலாம்.

இன்னும் இரண்டு நாட்களில் முடிவுகள் தெரிந்துவிடும். முடிவு எதுவாக இருந்தாலும் நல்ல படங்களுக்கும் கலைஞர்களுக்கும் கௌரவம் கிட்டும் என்பதில் மாற்றம் இருக்காது. ஏனென்றால் களத்தில் நிற்கும் படங்களும் கலைஞர்களும் அப்படிப்பட்டவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x