Last Updated : 09 Dec, 2013 12:00 AM

 

Published : 09 Dec 2013 12:00 AM
Last Updated : 09 Dec 2013 12:00 AM

“ஒல்லியான ஹன்ஸிகா, ப்ளேபாய் கார்த்தி”

கோலிவுட்டின் வெற்றிகரமான இயக்குநராக விஸ்வரூபமெடுத்து வருகிறார் வெங்கட் பிரபு. ‘சென்னை 28’ல் ஆரம்பித்த இவரது வெற்றிப்பயணம் ‘சரோஜா’, ‘கோவா’, ‘மங்காத்தா’, என்று தொடர்ந்து மின்னல் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. இப்போது அடுத்ததாக கார்த்தியை வைத்து சுடச்சுட ‘பிரியாணி’,யை தயார் செய்து கொண்டிருக்கிறார். படத்தின் ரிலீஸ் பரபரப்பில் இருந்த வெங்கட் பிரபுவை ‘தி இந்து’வுக்காக சந்தித்தோம்.

கோலிவுட்டில் ஒரு புதிய ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரமெடுத்து வருகிறார் கார்த்தி. அந்த வரிசையில் ‘பிரியாணி’யும் அவருக்கு ஒரு ஆக்‌ஷன் படமாக இருக்குமா?

கண்டிப்பாக இல்லை. கார்த்தின்னா கிண்டல், நக்கல், ஆக்‌ஷன், புயல் அப்படின்னு தொடர்ந்து படங்கள்ல காட்டிட்டு இருக்கோம். ஆனால் நான் அவரை ஒரு அட்டகாசமான பிளேபாயா இதுல காட்டியிருக்கேன். பிளே பாய்ன்னு சொன்னதும் ஏதோ ஏடாகூடமான இளைஞரோன்னு நினைச்சுடாதீங்க. இந்தப் படத்துல அவரை ஒரு ஸ்டைலான ஹீரோவா காட்டியிருக்கோம். மாஸ் ஹீரோ கார்த்திய நீங்க கண்ணுல விளக்கெண்ணய் விட்டுகிட்டு தேடினாலும் இதுல கிடைக்கமாட்டார்.

படத்தின் கதை என்ன?

இது ஒரு த்ரில்லர். ஆனா ரியலிஸ்டிக் பாணியில கதை நகரும். கார்த்தி, ‘சுகன்’கிற கேரக்டர் பன்ணியிருக்கிறார். இவர்தான் படத்தோட முதல் ஹீரோ. இரண்டாவது ஹீரோ கதை, அதுல சட்டுபுட்டுன்னு நடக்குற சம்பவங்கள். பிரேம்ஜி, ‘பரசு’ங்கிற கேரக்டர் பண்ணியிருக்கிறார். ஹன்ஸிகா, கார்த்தியோட கேர்ள் ஃப்ரெண்டா ‘பிரியங்கா’ன்ற கேரக்டர் பண்ணியிருக்காங்க. கார்த்தியும் பிரேம்ஜியும் நாலாவது வகுப்பில் இருந்து நண்பர்கள். ஒரே கம்பெனியில வேலை செய்றாங்க. பார்ட்டி, பப்புன்னு போனா நல்லா தண்ணியடிச்சுட்டு பினிஷிங் டச் கொடுக்க, பிரியாணி சாப்பிடப் போவாங்க. இப்படி ஒருமுறை பிரியாணி சாப்பிட்டே ஆகணும்னு ஆம்பூர் பக்கத்துல இருக்க வாணியம்பாடிக்கு போறாங்க. பிரியாணி சாப்பிடப்போன இடத்துல எதிர்பாராம ஒரு சிக்கல்ல மாட்டிகிறாங்க. அதில் இருந்து மீள கார்த்தி என்ன பண்றாருங்கிறதுதான் கதை.

ஹன்ஸிகா கொஞ்சம் புஷ்டியா இருப்பாங்களே, இந்தப் படத்தில் கார்த்திக்கு எப்படி செட்டானார்?

படம் ஆரம்பிக்கும்போது அவங்களை 8 கிலோ எடையை குறைச்சே ஆகணும்னு கொடுமைப்படுத்தி குறைக்க வெச்சோம். வெயிட் லாஸ் பன்ணிட்டு வந்து நின்னப்போ எல்லோருக்கும் ஷாக்! கார்த்திய விட ஒல்லியாயிட்டாங்க. கார்த்திக்கு ‘பையா’ல தமன்னா எப்படி செம கெமிஸ்ட்ட்ரி கொடுத்தாங்களோ, அதைவிட அட்டகாசமா ஹன்ஸிகா செட் ஆயிட்டாங்க.

உங்க படத்துல சாதாரணமா காமெடிக்குதான் முக்கியத்துவம் இருக்கும். இதுல எப்படி?

இதுல கார்த்தியும் -பிரேம்ஜியும் அடிக்கிற லூட்டி காட்சிகள் அதிகம். முதல்முறையா ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறாங்களே கெமிஸ்ட்ரி எப்படி இருக்குமோன்னு ஒரு சந்தேகம் இருந்துச்சு. ஆனா கார்த்தி - ஹன்ஸிகா கெமிஸ்ட்ரி எப்படி பேசப்படுமோ... அதே அளவுக்கு ‘பிரியாணி’யில் கார்த்தி - பிரேம்ஜி கூட்டணியும் சூப்பரா இருக்கும்.

கார்த்தியை இயக்கி முடிச்ச கையோட அடுத்து அண்ணன் சூர்யாவை பிடிச்சுட்டிங்களே?

ரொம்ப த்ரில்லிங்கா இருக்கு பாஸ். ‘சிங்கம்’ சீரிஸ் வெற்றி எனக்கு முன்னால நிக்குது. அதை விட சிறந்த வெற்றியை கொடுக்கறதுதான் என் லட்சியம்.

ஒரு இடைவெளிக்குப் பிறகு நடிக்கவும் வந்துட்டீங்களே?

‘விழித்திரு’ படத்தில் நடிச்சு கொடுத்ததைக் கேட்குறீங்கன்னு நினைக்கிறேன். அது ஒரு சின்ன கேரக்டர். ஆனா ரொம்ப நிறைவான படம் அது. ‘அவள் பெயர் தமிழரசி ’ படம் கொடுத்த இயக்குனர் மீரா கதிரவன் படம். பிஸியான இயக்குநரா இருக்கும்போது நடிக்க வேண்டாமேன்னு மறுத்தேன். ஆனா, அவர் என்னை துரத்திகிட்டு வந்து சொன்ன கதை அபாரம். ஒரே இரவுல நடக்கிற கதை. விதவிதமான கதாபாத்திரங்களை அவர் இணைச்ச விதம் சூப்பர். அவருக்காக நடிச்சுக் கொடுத்தேன். மத்தபடி நமக்கு டைரக்‌ஷன் வேலைகள் டைட்டா இருக்கு. அதை ஒழுங்க செஞ்சா போதும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x