அரசு நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பாரபட்சம்

அரசு நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பாரபட்சம்
Updated on
1 min read

அரசு நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பாரபட்சம் நிலவுகிறது. அறிவியல், ஆங்கிலம், கணித ஆசிரியர்கள் நேரடியாக நியமிக்கப்படும் நிலையில், தமிழ், வரலாறு ஆசிரியர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

பட்டதாரி ஆசிரியர்கள்

அரசு ஆரம்பப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களும், நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.

6 முதல் 8-ம் வகுப்பு வரை முன்பு இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களுக்கு அனுமதி அளிக் கப்பட்டு இருந்தாலும் அதில் காலியிடங்கள் ஏற்படும் பட்சத்தில் அவை பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களாக மாற்றப்படுகின்றன. இதே நடைமுறைதான் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பின்பற்றப்படுகின்றன.

பணி நியமனத்தில் பாரபட்சம்

நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தின்போது 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.

ஏற்கெனவே பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியருக்கான கல்வித் தகுதியை பெறும்போது அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. அறிவியல், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் பட்டதாரி ஆசிரியர்கள் நேரடியாக (50 சதவீதம்) நிரப்பப்படும் நிலையில், தமிழ், வரலாறு பாட ஆசிரியர்கள் மட்டும் நேரடியாக நியமிக்கப்படுவதில்லை.

தமிழ், வரலாறு ஆசிரியர்களுக்கு பாதிப்பு

இந்த காலி இடங்கள் முழுக்க முழுக்க பதவி உயர்வு மூலம் மட்டுமே நிரப்பப்படுகின்றன. இதன் காரணமாக பி.எட். படித்த பி.ஏ. தமிழ், பி.லிட். தமிழ் இலக்கியம், பி.ஏ. வரலாறு பட்டதாரிகள் நேரடி பட்டதாரி ஆசிரியர் பணி பெற முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

'அனைத்து பட்டதாரிகளுமே 3 ஆண்டு படித்துத்தான் பட்டம் பெறுகிறார்கள். அதைத்தொடர்ந்து பி.எட். முடிக்கிறார்கள். ஆனால், அறிவியல், கணிதம், ஆங்கிலம் படித்தவர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கப்படும்போது தங்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு மறுக்கப்படுவது எந்த வகையில் நியாயம்?’ என்பது பி.எட். படித்த தமிழ், வரலாறு பட்டதாரிகளின் கேள்வி.

வாய்ப்பு இல்லாமல் தவிப்பு

அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு உயர்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் மட்டுமே. முதுகலை பட்டம் பெற்றால் மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பணிக்கு முயற்சி செய்யலாம்.

தமிழ், வரலாறு பாடங்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவதை இனிமேலாவது கைவிட்டுவிட்டு மற்ற பாடங்களைப் போல நேரடி நியமனத்தை கொண்டுவர வேண்டும் என்று பி.எட். முடித்த தமிழ், வரலாறு பட்டதாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த கல்வித் தகுதியுடன் பல்லாயிரக்கணக்கானோர் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் 45 வயது, 50 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in