Last Updated : 04 Mar, 2017 11:52 AM

 

Published : 04 Mar 2017 11:52 AM
Last Updated : 04 Mar 2017 11:52 AM

உயிர் வளர்த்தேனே 25: ‘பரோட்டா சூரி’ கணக்கை மறந்துவிட்டோம்

நாம் என்னதான் சமவிகித சரியுணவு குறித்துப் பேசிக் கொண்டிருந்தாலும், உண்ணுவதென்னவோ அதிகபட்சம் அரிசி, பேருக்கு ஒன்றிரண்டு காய்களை ஒவ்வொரு வேளையும் எடுத்துக்கொள்கிறோம்.

அதிலும் வளரிளம் பருவத்தினர், குறிப்பாகப் பள்ளி செல்லும் குழந்தைகளின் உணவில் போதிய கவனம் செலுத்துவதில்லை. வாரத்தில் ஒருநாள் விடுமுறை நாளன்று மரக்கறி உண்போர் எனில் வறுத்த - பொரித்த கிழங்கு காய், ஒரு வடை, பாயச இனிப்புடனும் மணக்க மணக்கச் செய்கிறோம்.

ஊண் உண்பவர்கள் என்றால் கோழி, பிரியாணி, செவிட்டில் அறைகிறாற் போன்ற சிவப்புச் சாயத்தில் முக்கிய இறைச்சித் துண்டங்களை எண்ணெயில் பொரித்துச் சிக்கன் 65 என்று குழந்தைகளுக்குப் படைத்தருள்கிறோம்.

நிறமிகள் எதற்கு?

இந்தச் சிவப்புச் சாயத்தைப் பற்றி ஒரு பாட்டம் சொல்லியாக வேண்டும். இத்தனை அழுத்தமும், அடர்த்தியும் நிறைந்த செயற்கை நிறமியை நம் உடல் ஏற்கவே ஏற்காது. அவ்வளவு ஏன், உடலுக்கு நன்மை செய்யும் கீரையைத்தான் உண்கிறோம். உயிர்ச்சத்து மிகுந்த பச்சையை நம் உடல் முழுமையாக ஏற்கிறதா? இல்லையே!

அடுத்த நாள் மலத்தில் பச்சையத்தை வெளியேற்றி விடுகிறதே. அல்லது பலருக்குக் கீரையை உண்ட அடுத்த இரண்டு மணி நேரத்தில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுப் பச்சையாகச் சென்றுவிடுகிறதே. இதேபோலத்தான் அடர் சிவப்பு நிறத்திலான பீட்ரூட் பொரியல் உண்டால், அடுத்த வேளை சிறு நீரும் மெலிதான பீட்ரூட் நிறத்தில் வெளியேறுவதைக் காண முடியும்.

நம் உடலுக்கு ஆறு சுவை தேவை என்பதுபோல, வண்ணத்திலும் வெள்ளை, மஞ்சள் நிறத்தில் மட்டுமல்ல, ஏழு வண்ணங்களிலும் உணவு தேவைப்படுகிறது. ஆனால் அது இயற்கையான வண்ணமாக இருந்தாலும்கூட அடர்த்தியை மட்டுப்படுத்தியே உண்ண வேண்டும். அதனால்தான் கீரையுடன் பருப்பு, தேங்காய் ஆகியவற்றைச் சேர்த்து நிறத்தின் அடர்த்தியைத் தணியச் செய்து உண்கிறோம்.

தவிர்ப்பது நலம்

தற்கால உணவில் செயற்கை நிறமிப் பயன்பாடு கடுமையாக அதிகரித்துவிட்டது. எவ்வித அச்ச உணர்வும் இன்றி வீட்டுச் சமையலிலும் நிறமிகளைத் தாராளமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். வெளியில் உண்கிறபோதும் செயற்கை நிறமிகள் குறித்த எச்சரிக்கை உணர்வு நம்மிடம் அறவே இல்லை.

உடலுக்கு அந்நியமான எந்தப் பொருளாக இருந்தாலும் உடல் நிராகரிக்கவே செய்யும். உடலுக்கு நன்மை பயப்பதற்காகப் பொருத்துகிற இதய வால்வையே நூறு யோசனைக்குப் பின்னரே மருத்துவர்கள் பொருத்துகின்றனர். அதிலும் பல நேரங்களில் உடல் அதை நிராகரித்துப் பெரும் தொல்லைக்குள்ளாகிறது.

அப்படியிருக்க ரசாயன நிறமிகளை உடல் ஏற்குமா? உடனடியாக வெளியேற்றத் தவிக்கும். அவ்வாறு வெளியேற்றும் முயற்சியில், நமது சிறுநீரகத்துக்கும் கல்லீரலுக்கும் பணிச்சுமையை அதிகமாக்கும்.

தோல் பிரச்சினைக்குக் காரணம்

உணவின் வழியாக உடலில் செலுத்தப்பட்ட செயற்கை நிறமியைக் கழிவு நீக்க உறுப்புகள் தமது வழக்கமான பணிச் சுமைகளுக்கு இடையே மலம், சிறுநீர் வழியாக வெளியேற்ற முடியாவிட்டால், உடலின் மிகப்பெரிய உறுப்பாகிய தோல் மூலம் வெளியேற்றுவதற்காகத் தோலின் ஓர் அடுக்குக்கு அனுப்பி விடுகிறது அல்லது நுரையீரலுக்கு அனுப்பி விடுகிறது.

அதனால்தான் நம் காலத்தில் பலருக்கும் மிக இளம் வயதிலேயே சுவாச ஒவ்வாமையும், தோலரிப்பு போன்ற தோல் ஒவ்வாமையும் ஏற்படுகின்றன.

இன்றைய வணிக உணவுப் பண்டங்கள் எதுவுமே நிறமி கலக்காமல் இல்லை. குழம்புகளுக்குக்கூட நிறமி ஏற்றுகிறார்கள். நாம் வீட்டில் நல்லது தானே என நினைத்து மஞ்சள் பொடியைப் பயன்படுத்துகிறோம். கடையில் விற்கப்படும் மஞ்சள் தூள், மஞ்சளை அரைத்துத் தயாரித்தது என்று நம்பினால் நம்மை அப்பாவிகள் என்றுகூடச் சொல்ல முடியாது. அதற்கும் மேலான வார்த்தையில்தான் அழைத்துக்கொள்ள வேண்டும்.

நிறமிகள், சிக்கன் 65, மஞ்சள் தூள் ஆகியவை பற்றிப் பிறிதொரு நேரத்தில் பார்க்கலாம். இப்போது பள்ளி போகும் குழந்தைகளுக்கான மதிய உணவு குறித்துப் பார்த்துவிடுவோம்.

பரோட்டா சூரி கணக்கு

குழந்தைகள் ஓடியாடி விளையாடினால், இப்போது அவர்கள் உண்ணும் மூன்று நான்கு இட்லிகளும், தோசைகளும் போதாது. பத்துப் பன்னிரண்டு இட்லிகளாவது தேவை. இது கூடக் குறைவுதான். என் பருவத்தில் வீட்டு இட்லியே 24 சாப்பிட்டிருக்கிறேன். பரோட்டா சூரி, `கணக்கை முதலில் இருந்து சாப்பிடத் தொடங்கியபோது’ எனக்குச் சிரிப்பு வரவில்லை. அட, நம்மைப் போல ஒருவர் அடுத்த தலைமுறையிலும் இருக்கிறாரே என்று புளகாங்கிதம்தான் அடைந்தேன்.

விளையாட்டை மறந்த குழந்தைகள்

குழந்தைகளின் உடல் கட்டுமானம் உறுதி பெற நன்றாக விளையாட வேண்டும். விளையாட்டில் ஆர்வம் உடைய குழந்தைகளை இப்போதெல்லாம் மிகவும் அபூர்வமாகவே பார்க்க நேர்கிறது. அதிலும் பெண் குழந்தைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

முந்தைய தலைமுறையில் பதின்ம வயதின் நடுப்பகுதிவரை ஆண்களும் பெண்களும் சேர்ந்தே விளையாடுவார்கள். பருவ வயதில் பெண்களுக்கு இருக்கும் பாலின ஈர்ப்பை மறந்து ஆண் குழந்தைகளுடன் சரிக்குச் சமமாக விளையாடுவார்கள். மரங்களில் ஏறுவது, ஓடிப் பிடித்து விளையாடுவது எனச் சகலமும் உண்டு.

தாய்மார்கள்தான் அவர்களை விளையாட்டுக்கு மத்தியில் இழுத்துக்கொண்டு வந்து தலையில் அடித்துப் பெண் என்பவள் ஒரு தனியினம் என்று போதிப்பார்கள். அப்போதும் உடலின் ஊக்கம் உள்ளுக்குள் போதனையைப் பதிய விடாது. மறுநாளும் வழக்கமான நேரத்தில் வீட்டுக்கு வந்து, அவளது விளையாட்டுத் தோழன் அப்பாவித்தனமாக அழைப்பான்.

சில அம்மாக்கள் ‘அவளுக்கு வீட்டு வேலை இருக்கு’ போன்ற ஏதேனும் சாக்குப்போக்குகளைச் சொல்வார்கள். சிலரோ ‘ஏய்… வயசுக் குழந்தையோட என்னடா இன்னமும் கூடி விளையாடிட்டுத் திரியறீங்க. வெக்கமாயில்ல…’ என்று பட்டவர்த்தனமாகப் பேசிவிடுவார்கள்.

பையன்களிலும் பெரும்பாலோருக்குப் பெண்ணின் தாய் சொன்ன சொல் முழுமையாகப் புரிந்துவிடாது. பதின்ம பருவத்தில் விளையாட்டாலும் உழைப்பாலும் உடல் முறுக்கிப் பிழியப்படும்வரை பாலுணர்வுக் கிளர்ச்சி தலைதூக்குவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புரதச் சத்து சாதம்

கடந்த வாரம் உயிர்ச்சத்து மிகுந்த ஒரு சோறு வகையைப் பார்த்தோம். இந்த வாரம் உடலின் கட்டுறுதிக்கு வலுசேர்க்கும் சோறு வகை ஒன்றைப் பார்க்கலாம். கேரட், பச்சைப் பட்டாணிக்குப் பதிலாகப் புரதச் சத்து மிகுந்த சிலவற்றை இந்த முறை சேர்த்துக்கொள்வோம்.

ஐம்பது கிராம் வேர்க்கடலை, அதே அளவு கிட்னி பீன்ஸ், நான்கைந்து பாதாம் பருப்பு, நான்கைந்து முந்திரிப் பருப்பு. இதில் பாதாம் பருப்புதான் வேண்டும் என்பதில்லை. பலாக்கொட்டையைக்கூட எடுத்துக்கொள்ளலாம். இவற்றை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்துவிட வேண்டும். தேங்காய்ப் பாலில் அரிசியை ஊற வைக்க வேண்டும்.

பழைய மாதிரியே வெண்ணெய் அல்லது நெய் இரண்டு தேக்கரண்டி விட்டுப் பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, நசுக்கிய இஞ்சி, பூண்டு தாளிப்பு போட்டு, அவை நிறம் மாறும் தருணத்தில் ஊற வைத்த கொட்டை வகைகளைத் தாளிதத்தில் போட வேண்டும். அவற்றில் இருந்து வாசம் கிளம்பும்வரை ஒயிலாகப் புரட்ட வேண்டும். கொட்டை வகைகள் நிறம் மாறினால், அவற்றிலுள்ள சத்துகள் சிதைக்கப்பட்டு விடும். எனவே, கவனமாக நிறம் மாறும் முன்னரே பொருத்தமான அளவு நீர் விட்டு, அரிசியைப் போட்டு மூடி விட வேண்டும். சாதத்தை இறக்கியதும் பொடியாக அரிந்து வைத்த மல்லிப் புதினா தழைகளை மேலாகத் தூவிக் கிண்டி விட்டால் கவர்ச்சியாக இருக்கும்.

அழுத்தமும், அடர்த்தியும் நிறைந்த செயற்கை நிறமியை நம் உடல் ஏற்கவே ஏற்காது. அவ்வளவு ஏன், உடலுக்கு நன்மை செய்யும் கீரையைத்தான் உண்கிறோம். உயிர்ச்சத்து மிகுந்த பச்சையை நம் உடல் முழுமையாக ஏற்கிறதா? இல்லையே!

(அடுத்த வாரம்: சருமத்தின் மென்மையைப் பாதுகாக்கும் சோறு)
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x