Last Updated : 25 Jun, 2017 03:30 PM

 

Published : 25 Jun 2017 03:30 PM
Last Updated : 25 Jun 2017 03:30 PM

பெண் அரசியல் 10: அமைதியைத் தருவாரா பெண் முதல்வர்?

இயற்கையின் எழில் கொஞ்சும் எல்லா மாநிலங்களுமே அழகுதான். அதிலும் இயற்கையின் பேரழகாய்த் திகழ்வது ஜம்முகாஷ்மீர்.

“இது நாம் வாழும் பூமியின் சொர்க்கம்” என்று நம் முன்னோர்கள் மிகச் சரியாகவே குறிப்பிட்டுள்ளார்கள். ஜம்பு என்ற மன்னன் ஆற்றங்கரையோரம் வேட்டைக்குச் சென்றபோது அங்கு ஆடும் சிங்கமும் ஒன்றாகத் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து வியந்து நின்றாராம். அதன் நினைவாக தன் பெயரையே அந்த இடத்தின் பெயராக வைக்கும்படி உத்தரவிட்டாராம். பின்னாளில் அந்தப் பெயர் ஜம்முவாக மருவிவிட்டதாகக் கதை ஒன்றையும் சொல்கிறார்கள்.

பெண்ணுக்குத் தேவையில்லையா சொத்து?

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது மதச்சார்பற்ற இந்தியாவோடு இருக்கச் சம்மதித்த காஷ்மீர் மக்களுக்கு 370-வது சிறப்பு சட்டப்பிரிவு சுயேச்சையான கூடுதல் அதிகாரத்தை வழங்கியுள்ளது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல் அங்கு சென்று நிலம் உள்ளிட்ட அசையாச் சொத்துகளை வாங்கவோ விற்கவோ முடியாது. மற்ற மாநிலத்து ஆண்களைத் திருமணம் செய்துகொள்ளும் ஜம்மு காஷ்மீரத்துப் பெண்களுக்கும் அங்கு நிலம் வாங்கும் உரிமை மறுக்கப்படுகிறது. ஆனால், பிற மாநிலத்துப் பெண்ணைத் திருமணம் செய்யும் ஆண்களுக்கு அதுபோன்ற தடை எதுவும் இல்லை. பெண் என்ற பாரபட்சம் சட்டத்தில் இருக்கும் அங்கே தற்போது பெண்தான் முதலமைச்சர்!

2015-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற மக்கள் ஜனநாயகக் கட்சி, பா.ஜ.க.வின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சர் முப்தி முகமது காலமாகிவிட அவருடைய மகள் மெஹபூபா முப்தி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற வரலாற்றுப் பெருமையோடு அரியணையேறியுள்ளார். மற்ற மாநில அரசியல் நிலைமைகளோடு ஒப்பிட்டால் இங்கு நிலவும் சூழல் வித்தியாசமானது மட்டுமல்ல; சிக்கலானதும்கூட.

இந்தியா, பாகிஸ்தானுக்கிடையிலான எல்லைத் தகராறுகளும் பாகிஸ்தானின் அத்துமீறல்களும் பதிலடித் தாக்குதல்களும் நாம் அறிந்தவையே.

தொடரும் போராட்டம்

உள்நாட்டுப் பிரச்சினைகளோ வேறுவிதமானவை. மத்திய எல்லைப் பாதுகாப்புப் படைக்கும் மக்களுக்குமான மோதல் வெடித்து வளர்கிறது. அது பல கலவரங்கள் உருவாகக் காரணமாகவும் அமைந்துவிடுகிறது.

அண்மையில் புர்கான் வானி என்ற இளைஞர் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. அதனால் கோபமடைந்த மக்கள் கடுமையான எதிர்ப்பைப் போராட்டங்களின் மூலம் வெளிப்படுத்தினார்கள். நகர் சார்ந்த மக்கள் மட்டுமல்லாது கிராமங்கள்வரை அந்தப் போராட்டம் பரவத் தொடங்கியது. அதைக் கட்டுப்படுத்துவதற்காகப் பாதுகாப்புப் படையினர் பெல்லட் குண்டுகளால் சுட்டதில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வை இழந்தனர். இதில் அப்பாவி சிறுவர்களும் சிறுமிகளும் அடங்குவர்.

இரு மாத காலமாக ஊரடங்கு உத்தரவும் அமலில் இருந்தது. இணையம் உள்ளிட்ட தகவல் தொடர்பு முற்றிலுமாக முடக்கப்பட்டிருந்தது. பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்டிருந்தவர்களை ஸ்ரீநகர் மருத்துவமனை சென்று பார்வையிட்ட முன்னாள் எம்.பி. பிருந்தா காரத், அங்கிருந்தபடியே நண்பர்கள் மூலமாக ஒரு லட்சம் ரூபாய் திரட்டி பாதிக்கப்பட்ட ஒரு ஏழைச் சிறுமியின் குடும்பத்துக்குக் கொடுத்தார்.

ராணுவத்தின் இன்னொரு முகம்

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனத்தில் இளைஞர் ஒருவரைக் கயிற்றால் பிணைத்து வாகனத்தை ஓட்டிச்சென்ற காட்சியும், ராணுவத்தின் மீது கல்லெறிந்து தாக்கினால் இனி இதுதான் தண்டனை என எச்சரிக்கும் ஆடியோவும் வலைத்தளங்களில் பதிவாகி மக்களை வெகுவாக அச்சுறுத்தின. இது குறித்த கண்டனத்தை முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா வலைத்தளைத்தில் பதிவிட்டுள்ளார்.

பதற்றமான பகுதிகள், சம்பவங்களிலிருந்து பொதுமக்கள் விலகி நிற்க வேண்டுமென முதலமைச்சர் மெஹபூபாவும் தெரிவித்துள்ளார். எனினும், ஒவ்வொரு கிலோமீட்டர் தூர இடைவெளியில், அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளும், சந்தேகப்படும் நபர் மீது கண்டதும் சுடலாம் என ஆயுதப்படைக்கு அளித்துள்ள சிறப்பு அதிகாரமும் இஸ்லாமிய மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெருமளவு பாதித்துள்ளன.

தீவிரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவோர் தேசத்துரோகிகளாகக் கருதப்பட்டுக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவத் தளபதி பிபின் ராவத் அறிவித்திருக்கிறார். உள்நாட்டில் ஒரு அரசு செயல்படுகிறது என்பதைக் கவனத்தில் கொண்டுதான் இதுபோன்ற எச்சரிக்கைகளை விடுக்கிறார்களா என்ற கேள்வி ஜனநாயக ரீதியாக எழுகிறது.

துப்பாக்கிச் சூட்டிலோ கலவரத்திலோ பலியான இளைஞர்களின் குடும்பங்கள் அநாதரவாக இருக்கின்றன. கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருப்பதாகவும் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் காணாமல்போனவர்களின் பட்டியலில் கணிசமாக இடம்பெற்றுள்ளனர். இதுபோன்ற உண்மை நிலைகளை இந்திய ஊடகங்களும் நாளேடுகளும் வெளிப்படுத்தாத இருள்மூடிய நிலை நீடிப்பதாகவும் பல ஜனநாயக அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காஷ்மீரின் காயங்கள் ஆறுமா?

மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., இந்த மாநிலத்தின் சிறப்புச் சட்டப் பிரிவான 370-ஐ ரத்து செய்வோம் எனப் பகிரங்கமாகத் தெரிவித்துவருகிறார்கள்.

மேலும், பள்ளத்தாக்குப் பகுதியில் பாதுகாப்புப் படைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஸ்ரீநகரில் இருந்த அனைத்துப் பெரிய மசூதிகளும் ஈகைப் பெருவிழாவன்று மூடப்பட்ட செயல் அங்குள்ள சிறுபான்மை மக்களைப் புண்படுத்தியுள்ளது.

புகழ்பெற்ற ஸ்ரீநகர் ஜமியா மசூதிக்கும் அதே நிலைதான் ஏற்பட்டது. இவை யாவும் மத்திய, மாநில ஆட்சிகள் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளன. பெல்லட் குண்டு பிரயோகத்தைக் கைவிடுதல், ஆயுதப் படைக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தைத் திரும்பப் பெறுதல், தேவைக்கேற்ற திருத்தம் வழங்கி 370 சட்டப்பிரிவை மேலும் பலப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மாநில அரசிடம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

காஷ்மீர் மக்களின் காயங்களை ஆற்றுவதும் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதும்தான் பெண் முதலமைச்சரின் தலையாய கடமையாக இருக்க முடியும். வெளிநாட்டு உள்நாட்டு அரசியல் நெருக்கடிக்கு இடையில் வீரம்செறிந்த ஒரு பெண்ணாக ஜம்மு காஷ்மீரின் உரிமைகளை அவர் முன்னெடுப்பாரா? இல்லை, ஆட்சி அதிகாரத்துக்காக மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுப்பாரா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனாலும் ஆடும் சிங்கமும் ஒன்றாக நீரருந்தும் காட்சி அப்போது கதையாகவும் இப்போது நிஜமாகவும் தொடர்வதை என்னவென்பது?

(முழக்கம் தொடரும்)
கட்டுரையாளர், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்
தொடர்புக்கு: balabharathi.ka@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x