Last Updated : 27 Jan, 2014 12:00 AM

 

Published : 27 Jan 2014 12:00 AM
Last Updated : 27 Jan 2014 12:00 AM

50 கோடி இளைஞர்கள் இலக்கு: திறன் வளர்ப்புப் பயிற்சி

இந்தியா போன்ற வளரும் பொருளாதார நாட்டுக்கு அதிக எண்ணிக்கையில் திறன்மிக்க பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். அத்தகைய திறன்மிக்க பணியாளர்களால்தான் நாடு நீடித்த வளர்ச்சியைப் பெற முடியும்.

திறன் பெற்ற, நன்கு பயிற்சி பெற்ற பணியாளர்களின் பற்றாக்குறை பெரிய அச்சுறுத்தலாக இருந்துவருகிறது. இதை மாற்ற உரியவர்களுக்குச் சரியான பயிற்சியை அளிக்க வேண்டும். பயிற்சி பெற்ற, திறன்மிக்க பணியாளர்களை உருவாக்குவதற்கெனப் பொதுத்துறை, தனியார் ஒருங்கிணைப்புடன் இந்திய அரசு, தேசியத் திறன் வளர்ப்புக் கழகத்தை (National Skill Development Corporation (NSDC)) உருவாக்கியுள்ளது.

மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசியத் திறன் வளர்ப்புக் கழகம், சமுதாயத்தின் அடித்தட்டில் உள்ள வாய்ப்பு-வசதியற்ற இளைஞர்களுக்குக் குறிப்பிட்ட திறன் வளர்ப்புப் பயிற்சிகளை அளித்து வருகிறது.

தொழில் துறைகளின் வளர்ச்சிக்குத் தேவையான தர நிர்ணயம், தகவல் அமைப்புகள், பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றை நேரடியாகவோ, கூட்டிணைப்பின் மூலமோ செயல்படுத்துவது திறன் வளர்ப்புக் கழகத்தின் முக்கியப் பணிகளாகும்.

2022ஆம் ஆண்டு வாக்கில் இந்தியா முழுவதும் 50 கோடி இளைஞர்களிடையே திறன்களை உருவாக்குதல், அவர்களது திறன்களை மேம்படுத்துதல் ஆகியவை இதன் இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தமிழக நிலை

தேசியத் திறன் வளர்ப்புக் கழகத்தின் அறிக்கைப்படி, நிலஅமைப்பு முறைப்படி பார்த்தால், தமிழ்நாட்டில்தான் ஏறத்தாழ 66 விழுக்காடு மக்கள் பணியில் ஈடுபடும் வயது வரம்பில் உள்ளதால், தமிழ்நாடு இந்த வகையில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. 2022ஆம் ஆண்டில், தமிழகத்தில் ஓரளவு திறன் (Semi skilled) பெற்ற 3.6 லட்சம் பணியாளர்களுக்கும், முழு திறன் (Skilled) பெற்ற 2.25 லட்சம் பணியாளர்களுக்கும் பற்றாக்குறை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசியத் திறன் வளர்ப்புக் கழகம் தமிழ்நாட்டில் சேலம், திண்டுக்கல், காரைக்குடி, திருநெல்வேலி போன்ற பல மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட திறன் வளர்ப்புப் பயிற்சிகளை அளித்து வருகிறது. இவற்றில் ஷீல்ட் மெட்டல் ஆர்க் வெல்டிங், அழகு நிலைய மேலாண்மை, மின்சாதனங்கள், கணினி பழுதுபார்ப்பின் அடிப்படைப் பயிற்சி, ஒயர் மேன், ஃபிட்டர் உள்ளிட்ட தொழிற்பயிற்சிகள் அடங்கும்.

10ஆம் வகுப்பு தேறியவர்கள் அல்லது பள்ளிப் படிப்பில் இடைநின்றவர்கள் திறன் மேம்பாட்டுக் கழகம் அளிக்கும் இந்தப் பயிற்சிகளில் சேரலாம். 1 மாதம் முதல் 3 மாதங்கள் வரையிலான கால அளவுள்ள படிப்புகளுக்கு ரூ. 1,500 முதல் ரூ. 10,000 வரை கட்டணம். அதேபோன்று, ஓராண்டுப் பயிற்சிகளுக்கு ரூ. 15,000 முதல் ரூ. 20,000 வரை கட்டணம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி யாகச் சிறப்புப் படிப்புகள் உள்ளன. ஆண்களுக்கான பயிற்சிகளில் செல்பேசி பழுதுபார்ப்பு, ஆட்டோ மொபைல் பழுதுபார்ப்பு, எலக்ட்ரீசியன், வெல்டர் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பெண் களுக்குத் தையல் பயிற்சி, கணினி தட்டச்சு, சிகை அலங்காரம் உள்ளிட்ட அழகுக் கலைப் பயிற்சி, செவிலியர் பயிற்சி ஆகியவை அளிக்கப்படுகின்றன.

தற்போதைய நிலையில் இப்பயிற்சிகளை முடித்தவர்களில் 50 சதவீதத்தினர் வேலை பெற் றுள்ளனர். மார்ச் 2014 முடிவுக்குள் 70 சத வீதம் அளவுக்கு வேலை பெறுவோர் நிலை உயர்த்தப் படும். இப்பயிற்சி பெற்றுப் புதிதாக வேலைக்குச் செல்வோருக்கு மாதம் ரூ. 4,500 முதல் ரூ. 6,000 வரை படிப்புக்கும் துறைக்கும் தக்கவாறு சம்பளம் கிடைக்கிறது.

பயிற்சி நிறுவனங்கள்

பயிற்சி கொடுக்கும் நிறுவனங்களான லாரஸ் எஜூடெக், எவரான், இ-பாம்லீஃப் போன்ற திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு அளித்து, அனைவருக்கும் பயிற்சிகள் சென்று சேரத் தேசியத் திறன் வளர்ப்புக் கழகம் வழிவகுக்கிறது.

இப்படிப்பட்ட நிறுவனங்களில் ஒன்றுதான் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, சென்னையில் இயங்கி வரும் லாரஸ் எஜூடெக் நிறுவனம். தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், புதுடெல்லி, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா மற்றும் பிற மாநிலங்களில் 191 மையங்களைக் கொண்டு தொழில் சார்ந்த பயிற்சிகள், உழைப்பு சார்ந்த பயிற்சிகளை இந்நிறுவனம் அளித்து வருகிறது.

அரசுத் திட்டப்படியான தொழில் பயிற்சிகள் தவிர, தனியாகக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான மென்பொருள் பயிற்சிகள் மற்றும் படைப்பாக்கப் பயிற்சிகளையும் லாரஸ் எஜூடெக் அளித்து வருகிறது. இதுவரை நாடெங்கிலும் உள்ள 40,000 இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து வேலை பெற்றுத் தந்துள்ளது.

தமிழ்நாட்டில், குறிப்பாக எலக்ட்ரானிக் பேசிக் கம்ப்யூட்டர் சார்ந்த கணினி பயிற்சி, அழகுக் கலைப் பயிற்சி, செல்பேசி பழுதுபார்ப்பு, ஒயர்மேன், கணினி விவரப் பதிவாளர் மற்றும் பல பயிற்சிகளை இந்நிறுவனம் வெற்றிகரமாக அளித்து வருகிறது. தொழில் பயிற்சி, வேலைவாய்ப்பு ஆலோசனை சேவைகளையும் வழங்குகிறது.

நாட்டில் தற்போது நிலவும் திறன் பற்றாக் குறையை நிறைவு செய்யும் வகையில் தேசியத் திறன் வளர்ப்புக் கழகத்துடன் இணைந்து லாரஸ் எஜூடெக் போன்ற நிறுவனங்கள் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இப் பணியை முன்னெடுத்துச் செல்கின்றன. 2022ஆம் ஆண்டுக்குள் 50 கோடி பேருக்குத் திறன்மிகு பயிற்சிகளை அளிக்கும் சாதனையை எட்டும் நோக்குடன் இப்பயணம் தொடர்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x