Published : 13 Jan 2014 12:00 AM
Last Updated : 13 Jan 2014 12:00 AM

மூத்த பேராசிரியர்களை நிர்வாக பணிகளில் அமர்த்துவதால் உயர் கல்வியில் பாதிப்பு- பல்கலைக்கழக மாணவர்கள் குமுறல்

பல்கலைக்கழகங்களில் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் நிர்வாக அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு விடுவதால் தகுதியான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களிடம் உயர் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, பேராசியர்களை நிர்வாக பணியிடங்களில் அமர்த்தக்கூடாது என மாணவர்கள் குமுறலுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்

தமிழகத்தில் மொத்தம் 18 அரசுப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்தப் பல்கலைக்கழகங்களில் அனைத்திலும் பதிவாளர், தேர்வு நெறியாளர், கல்லூரி வளர்ச்சிக் குழும டீன், ஆராய்ச்சிப் பிரிவு டீன், தொலைநிலைக் கல்வி இயக்குநர் உள்ளிட்ட நிர்வாக பணியிடங்களில் அங்கு பணியாற்றும் மூத்த பேரா சிரியர்களே நியமிக்கப்படுகிறார் கள். அதிகாரம் கொண்ட பதவி என்பதால் இந்தப் பதவிகளை பிடிக்க பேராசிரியர்களுக்குள் போட்டா போட்டியும் நிலவுகிறது. இப்படி இவர்கள் நிர்வாகப் பணி களில் அமர்த்தப்படுவதால் தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களைக் கொண்டு பயிற்றுவிக்க வேண்டிய பாடங் களை கௌரவ விரிவுரையாளர் களைக் கொண்டு பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் மனக் குமுறல்

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய பல்கலைக்கழக உயர் கல்வி மாணவர்கள் சிலர் கூறியதாவது:

கௌரவ விரிவுரையாளர்களை நாங்கள் குறைத்து மதிப்பிட வில்லை. மாணவர்களுக்கு முதிர்ச்சி யான கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் பேராசிரியர் களுக்கு ஊதியத்தை தாராளமாய் கொட்டிக் கொடுக்கிறது அரசு. உதவி மற்றும் இணைப் பேராசிரியர்களாக பல ஆண்டுகள் பணியில் இருந்து பேராசிரியர்களாக வருபவர்கள், அந்த அனுபவத்தைக் கொண்டு மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கினால் உயர் கல்வியின் தரம் மெச்சும்படியாக இருக்கும்.

ஆராய்ச்சி மாணவர்களுக்கு சிரமம்

ஆனால், பெரும்பாலான பேரா சிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதைவிட அதிகாரம் கொண்ட நிர்வாகப் பதவி களுக்கு வரத்தான் ஆசைப்படு கிறார்கள். இதனால் இவர்கள் பார்க்க வேண்டிய ஆசிரியர் பணியை கௌரவ விரிவுரையாளர்க ளைக் கொண்டு சமாளிக்கிறார்கள். கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதச் சம்பளம் 10 ஆயிரம் ரூபாய் தான். மூத்த பேராசிரியர்களின் வழி காட்டுதல்கள் இல்லாததால் பல இடங்களில் ஆராய்ச்சி மாணவர் களும் சிரமப்படுகிறார்கள்.

யு.ஜி.சி. வழிமுறைகள் சொல்வது என்ன?

பேராசிரியர்கள் ஒரு வாரத்துக்கு எத்தனை மணி நேரம் பாடம் நடத்த வேண்டும், எத்தனை மணி நேரம் ஆய்வு நெறியாளராக இருக்க வேண்டும் என்று யு.ஜி.சி. சில வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி பணியாற்ற பல்கலை நிர்வாகங்கள் பேராசிரியர்களை அறிவுறுத்த வேண்டும். மாணவர் களின் உயர் கல்வி பாதிக்காமல் இருக்க வேண்டுமானால், பேராசிரியர்களை பல்கலை நிர்வாக பணியிடங்களில் அமர்த்துவதை தவிர்க்க வேண்டும்’’ இவ்வாறு அந்த மாணவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x