Last Updated : 09 Feb, 2014 03:44 PM

 

Published : 09 Feb 2014 03:44 PM
Last Updated : 09 Feb 2014 03:44 PM

தளிர்களைக் காக்கும் வேர்கள்!

நாளிதழ்களையும் ஊடகங்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டு பிரபலமானவர்களின் கரிசனத்தோடு எத்தனையோ தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆனால் விளம்பர வெளிச்சம் படாமல், பத்தாண்டுகளுக்கும் மேலாக குழந்தைத் தொழிலாளர்களையும் படிப்பை இடையில் நிறுத்திவிடும் குழந்தைகளையும் கண்டெடுத்து, அவர்களின் படிப்பைத் தொடரும் சேவையில் ஈடுபட்டு வருகிறது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ‘வேர்கள்’ தன்னார்வ அமைப்பு. இதன் நிறுவனர், அறங்காவலர் நளினி மோகன். கல்வியால் பல தடைகளைத் தகர்த்து, வங்கிப் பணியில் இருப்பவர்.

“கல்வியின் அவசியத்தை உணர்ந்ததால் தான், வாய்ப்பு மறுக்கப்படுபவர்களுக்கு அதைக் கொடுக்கும் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்” என்கிறார் நளினி.

வேர்கள் தன்னார்வ அமைப்பு மண்ணில் ஊன்றியது முதல் ஒத்த எண்ணமுள்ள நண்பர்களின் பொருளாதார உதவியாலும் அர்ப்பணிப்பு உணர்வாலுமே பணியைத் தொடர்ந்துவருகிறது என்கிறார் நளினி.

2000த்தில், குழந்தைத் தொழிலாளர் களுக்கான திருவிழா ஒன்றை வேர்கள் அமைப்பு நடத்தியது. 300க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கல்வி குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. அதில் கலந்துகொண்ட 20 பேர், பள்ளி செல்லும் விருப்பத்துடன் எங்களை அணுகினர். அவர்கள் மேல் கடன் இருந்தது. பெற்றோர்களிடமும், முதலாளிகளிடமும் பேசி, அவர்களை பள்ளியில் சேர்த்தோம் என்கிறார் அமைப்பின் காப்பாளர் சுந்தர்.

அவர்களுக்கு உதவ கல்வி உறுதுணை மையமும் அமைக்கப்பட்டது. ஒரு தன் னார்வ ஆசிரியர் எழுத்துக்கள், வார்த்தை களை அறிமுகப்படுத்தி, விளையாட்டு முறையில் பயில அவர்களுக்கு உதவினார். குழந்தைகள் பள்ளிக்குப் போனதில் சில நன்மைகளும் விளைந்தன. புதிய பள்ளிச் சூழல், நண்பர்கள், பழக்க வழக்க மாறுதல்கள் ஏற்பட்டன. காலம்காலமாக ஏய்த்துவந்த முதலாளிகளைக் குழந்தைகள் கேள்வி கேட்டனர்.

அதே நேரம், குழந்தைகளுக்கு வீட்டில் சில சிரமங்களும் இருந்தன. இதுவரை வருமானம் தந்து வந்த நபரால் இனி வருமானம் இல்லை என்பதும், வருமானம் குறையும்போது ஏற்படும் எரிச்சல்களும் குடும்பத்தில் எழுந்தன. அப்போதும் வேர்கள் கல்வி உறு துணை மையம், மாணவர்களுக்குப் பக்கபலமாக நின்றது. மாணவர்களிட மும் பள்ளி ஆசிரியர்களிடமும், பெற் றோர்களிடமும் தன்னார்வலர்கள் தொடர்ந்து பேசி வந்தனர்.

இடைநிற்றல் குறைந்தது

இந்த 20 மாணவர்கள், அடுத்த ஆண்டு அவர்கள் தெருவில் படிக்காமல் வேலைக்குப் போகும் பிற குழந்தைகளை வேர்களுக்கு அறிமுகப்படுத்தினர். இந்த மாணவர் களே அவர்கள் வீட்டில் பேசி கல்வியின் அவசியத்தை புரியவைத்தனர்.

படித்து முடித்து மீண்டும் தறி வேலைக்கோ, அப்பள வேலைக்கோ தானே அவர்கள் வர வேண்டும். அப்புறம் எதற்குப் படிப்பு? இந்தக் கேள்வி மீண்டும் மீண்டும் எழுந்தது என்கிறார் சுந்தர்.

"குழந்தைமையைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் கல்வி, குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதையும் அவர்களுக்குப் புரிய வைப்பதில் சிரமம் இருந்தது. பள்ளி செல்லும்போது உலகை, மனிதர்களை குழந்தைகள் கற்கிறார்கள். எழுத்து எல் ேலாருடனும் தொடர்புகொள்ள உதவும் ஒரு ஊடகம் என்பதை குளுக்கோஸ் ஏற்றுவதுபோல் பெற்றோர்களுக்கு உணர்த்தினோம்" என்கிறார் அவர்.

இப்போது வேர்கள் மூலம் கல்வி உதவி பெறும் மாணவர்கள் 400. 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், 20க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் இதில் இருக்கிறார்கள். எங்களால் படிப்பைத் தொடர்ந்த மாணவர்களில் இன்றைக்கு சிலர் வழக்கறிஞராகவும் தனியார் நிறுவனங் களில் பொறுப்பான பதவிகளிலும் இருக்கிறார்கள். அவர்களும் வேருக்கு நீர் வார்க்கிறார்கள். அவர்களைப் போன்ற தளிர்களைக் காப்பாற்ற!” என்கிறார் சுந்தர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x