Published : 24 Sep 2016 12:34 PM
Last Updated : 24 Sep 2016 12:34 PM

விளை நிலங்களை காக்கும் உத்தரவு

தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத பணிகளுக்குப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை அண்மையில் பிறப்பித்துள்ளது. விளைநிலங்களை மாற்றம் செய்து விற்கப்படும் மனை மற்றும் அதில் கட்டப்பட்ட வீடுகளுக்குப் பத்திரப்பதிவு செய்யக் கூடாது என்ற அந்த உத்தரவு, வரவேற்கக்கூடியது. இது சரியான நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட விஷயமும்கூட. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் பெரிய அளவில் ஆறுகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு குறைய இந்த உத்தரவு உதவும்.

தமிழகத்தில் விளை நிலங்களை அழித்து உருவாக்கப்படும் அங்கீகாரம் இல்லாத மனைகள், பஞ்சாயத்து அங்கீகாரம் பெற்ற மனைகளாக விற்கப்படுகின்றன. ‘கொடை ஒப்பாவணம்’ (கிப் டீட்) எனப் பஞ்சாயத்து பெயரில் நிலத்தைப் பதிவுசெய்து லே-அவுட்டில் சாலைகள், பூங்காக்கள் எனக் குறிப்பிட்டுத் தவறாக அங்கீகார வீட்டு மனைகளாகக் காட்டி விற்கிறார்கள்.

கிராமப் பஞ்சாயத்து தலைவர்களுக்கு மனை லே-அவுட்களுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரமே கிடையாது. தமிழ்நாடு பஞ்சாயத்து கட்டிட விதிமுறைகள் 1997 விதிமுறை 3-ன் படி, ‘உரிமையாளர் அல்லது மற்றவர்கள் தெரு, சந்துகள் அல்லது வழிகள் அல்லது இரு வழிகள் அமைப்பது அல்லது எந்த ஒரு பகுதியிலும் கட்டுமானப் பயன்பாட்டுக்கான லே- அவுட்டுகளை நகர ஊரமைப்பு இயக்ககத்தின் (டிடீசிபி) அங்கீகாரம் இல்லாமல் அமைக்க முடியாது’ என்று அறிவுறுத்துகிறது.

2010-ம் ஆண்டு ஜூன் 14 அன்று ஓர் அறிவிக்கை டிடீசிபி-யால் வெளியிடப்பட்டது. இதன்படி பஞ்சாயத்துத் தலைவர்கள் டிடீசிபி அங்கீகாரம் பெற்ற மனை லே-அவுட் மற்றும் கட்டிடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க முடியும் என்று தெளிவாகக் கூறியுள்ளது. இதன்மூலம் பஞ்சாயத்து தலைவர்கள் டிடீசிபி அங்கீகாரம் இல்லாத எந்த மனை லேஅவுட்டுகளுக்கும் அனுமதி வழங்கும் அதிகாரம் இல்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

தமிழகத்தில் விவசாய நிலங்களில் அங்கீகாரம் இல்லாத மனை லே-அவுட்களைச் சுலபமாக அமைத்து விற்றுவிடுகிறார்கள். கேரளா, கர்நாடகாவில் ஒரு அடி விவசாய நிலத்தைக்கூட விவசாயம் அல்லாத பணிகளுக்குப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாய நிலங்கள் அங்கே பாதுகாக்கப்படுகின்றன. கர்நாடகாவில் விவசாயி ஒருவரே விவசாய நிலங்களை விலைக்கு வாங்க முடியும். வேறு எவரும் வாங்க முடியாது.

தமிழகத்திலே அங்கீகாரம் இல்லாத லே-அவுட்களை அரசே ஒரு தரப்பாக இருந்து விற்பதற்கு அனுமதி அளித்துள்ளது. இதில் டி.டீ.சி.பி. அமைதியாக இருந்திருக்கிறது. பொதுமக்கள் முதலீடு செய்துள்ள அங்கீகாரம் இல்லாத மனைகளை (பஞ்சாயத்து ஒப்புதல் நிலங்கள்) வாங்கியதற்குப் பதில் சொல்லும் பொறுப்பு டிடீசிபிக்கும் பத்திரப்பதிவுக்கும்தான் இருக்கிறது. ஏனென்றால், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுமக்கள் பலர், தங்கள் சிறு சேமிப்புடன் கஷ்டப்பட்டு தவணை முறையில் இந்த அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்கியிருக்கிறார்கள்.

அரசின் அலட்சியப் போக்கால் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்கி முதலீடு செய்த சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கலாம். எனவே ஏற்கனவே வழங்கப்பட்ட அங்கீகாரம் இல்லாத மனை சம்பந்தப்பட்ட விஷயத்தில் அரசு ஒரு தீர்வுடன் வர வேண்டும். துரித நடவடிக்கைகள் எடுத்து இந்த விவகாரத்தில் நிரந்தரத் தீர்வை வழங்க அரசு நடவடிக்கை வேண்டும். இதுபோன்ற மனைகளை வாங்கியவர்களுக்கு ஒருமுறை மனை வரைமுறைப் படுத்தும் (Regularaisation) திட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும். எதிர்காலத்தில் டிடீசிபி மற்றும் சிஎம்டிஏ அங்கீகாரம் உள்ள மனைகளை மட்டுமே விற்பனை செய்ய வழி வகுக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இதைத்தான் காட்டுகிறது.

கட்டுரையாளர், கேரள அரசின் சட்ட ஆலோசகர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x