Last Updated : 21 Jan, 2014 12:00 AM

 

Published : 21 Jan 2014 12:00 AM
Last Updated : 21 Jan 2014 12:00 AM

எங்கே போயின பிணந்தின்னிக் கழுகுகள்?

சுழல் காற்றில் சருகுகள் பறக்கிறதோ எனக் கவனித்துப் பார்த்தால் அத்தனையும் பட்டாம்பூச்சிகள், வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் நாளில், கிழக்கு தொடர்ச்சி மலை ஆசனூர் பகுதிகளிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலை ஆனைகட்டி வரை பட்டாம்பூச்சிகள் வலசை போய்க் கொண்டிருந்தன. எங்கள் கலைப் பிரச்சார வாகனம் மிதமான வேகத்தில் தளமலையை அடைந்தது. தமிழகத்தில் அருகி வரும் ‘பாறு’ வகையைச் சேர்ந்த வெண்முதுகுப் பாறு (White-backed Vulture), நீண்ட அலகுப் பாறு (Long billed Vulture ), செந்தலைப் பாறு (Red headed Vulture), மஞ்சள் திருடிக் கழுகு (Egyptian Vulture) ஆகிய ஊனுண்ணிக் கழுகுகளின் வாழ்க்கையை, அவை வாழ வேண்டிய அவசியத்தை மக்களுக்கு உணர்த்தப் பயணித்துக்கொண்டிருந்தோம்.

பாறுகள் வாழும் பகுதியில் வசிக்கும் மக்களைச் சந்தித்துக் கழுகுகள் சந்தித்து வரும் அழிவை இயல், இசை, நாடக வடிவில் விளக்கினோம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரமாயிரமாய் வனங்களில் வட்டமடித்த பாறுகள், இன்றைக்கு நூற்றி ஐம்பதுக்குள் எண்ணிக்கை சரிந்து போனதைக் குறிப்பிட்டபோது மக்களின் கவலை தோய்ந்த முகங்களைக் காண முடிந்தது. கிராமங்கள்தோறும் ஆயிரக்கணக்கில் கால்நடைகளை வளர்க்கிறோம். அவற்றுக்குக் காய்ச்சல், மடிவீக்கம், மேயாமை போன்ற நோய்கள் வரும்போது கால்நடை மருத்துவரைக் கூட்டிவந்து ஊசி போடுகிறோம். அவரும் வலிக்கொல்லி மருந்தான டைகுளோஃபினாக்கை ஊசியில் நிரப்பி மாட்டின் உடலில் செலுத்திவிட்டுப் போவார், பிறகு அந்த மாடு இறந்துபோகும். நாம் அருகிலுள்ள வனப்பகுதியில் சடலத்தைக் கிடத்திவிட்டு வருவோம். மாட்டுக்குச் செலுத்திய மருந்தின் வீரியம் அதன் உடலில் தங்கியிருக்கும். அதைச் சாப்பிடும் பாறுகளின் சிறுநீரகம் செயலிழந்து போய், தலை தொங்கி, கிறுகிறுத்து, மரத்திலிருந்து கொத்துக்கொத்தாகச் செத்து விழுந்த சம்பவத்தை மக்களோடு பகிர்ந்துகொண்டோம்.

தமிழகத்திலுள்ள திருக்கழுக்குன்றத்தில் கழுகுகள் தினசரி உணவுக்கு வருவதை, அந்த ஊரில் வாழும் மக்கள் கதைகதையாய்ச் சொல்வார்கள். கோவில் நிர்வாகம் கழுகுகளுக்கு உணவளிப்பதற்காகவே தனி மானியம் வழங்கிவந்தது. பல்வேறு சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களால் 1994ஆம் ஆண்டிலிருந்து அங்குக் கழுகுகள் வருவதில்லை. கோவில் கோபுரத்தில் கழுகுகள் வரும் வழியில் கூடு போன்ற அமைப்பை 1994ஆம் ஆண்டு நடந்த குடமுழுக்கின்போது அடைத்துவிட்டதே, கழுகுகள் வராததற்குக் காரணம் என்று பலரும் சொன்னாலும் சூழலியல் காரணங்களை யாரும் முன்னிறுத்துவதில்லை. கோவில் தூணில் கழுகுக்கு உணவளிப்பதைப் போன்ற சிற்பம் மட்டுமே அங்கு எஞ்சி உள்ளது.

காடுகளிலுள்ள கழுகுகளைப் பற்றி நாம் பேசுகிறோம். காட்டைத் துப்புரவு செய்து தூய்மையாக வைத்திருக்கும் உயிரினம்தான் கழுகுகள். நமது வீடுகளில் ஒரு சுண்டெலி சந்து, பொந்துகளில் சிக்கி இறந்து போனால் வீடெங்கும் வீசும் கெட்ட வாடையைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அதைத் தேடி எடுத்துத் தூக்கி எறிந்து, வீட்டைச் சுத்தப்படுத்திய பிறகுதானே நிம்மதியடைகிறோம்.

ஆட்கள் நுழைய முடியாத ஒரு அடர்ந்த காட்டில் யானை இறந்து போனால் அதைச் சுத்தப்படுத்துவது யார்? கழுகுகள்தான்! காட்டில் கழுகுகள் அற்றுப்போனால் யானையின் உடல் மக்கி மறைய வெகு நாட்கள் ஆகும். அதன் உடலில் இருந்து வெளியேறும் நோய்க் கிருமிகள் காட்டில் வாழும் மற்ற உயிரினங்களுக்கும் தொற்றும், காட்டுக்குள் மேய்ந்து வரும் நமது கால்நடைகளையும் பாதிக்கும்.

நதிகள் மலைகளில்தான் உற்பத்தியாகின்றன, ஒரு சின்ன ஓடையில் நோய்க் கிருமி சேர்ந்தாலும் அது ஒட்டுமொத்த நீரிலும் கலக்கும். லட்சக்கணக்கான மனிதர்களின் உடலிலும் வந்து சேரும். கழுகுகளை நாம் காப்பாற்றினால் அவை நம்மைக் காப்பாற்றும் என்பதை உணர வேண்டும்.

எங்களது கலைப் பயணத்தினூடே கால்நடை மருத்துவர்களைச் சந்தித்துக் கழுகுகளுக்குக் கேடு பயக்கும் டைகுளோஃபினாக், அசிக்குளோஃபினாக், கீட்டோ புரோஃபென் மருந்துகளைப் புறக்கணித்து மாற்று மருந்துகளைப் பயன்படுத்த வலியுறுத்தினோம். எஞ்சிய கழுகுகள் வாழும் ஈரோடு, நீலகிரி பகுதிகளிலுள்ள மருந்து விற்பனையாளர்கள், கால்நடைத் துறையினர், பால் உற்பத்தியாளர்கள், வேளாண் மக்களிடம் இந்தச் செய்தியைக் கொண்டு சேர்ப்பதில் மிகுந்த கரிசனத்தோடு சி.இ.பி.எப்.அமைப்பும், மலபார் இயற்கை வரலாற்றுக் கழகமும், சாலிம் அலி பறவை மற்றும் இயற்கை ஆராய்ச்சி மையமும், மும்பை இயற்கை வரலாற்று கழகமும் வழிகாட்டி துணை நின்றன.

கழுகுகள் வாழும் பகுதியைச் சுற்றிலும் 100 கி.மீ. சுற்றளவுக்கு டைகுளோஃபினாக் மருந்தின் பயன்பாடு அறவே கூடாது எனச் சுற்றுச்சூழல் அமைச்சகம் நெறிமுறை வகுத்துள்ளது. மத்திய அரசின் மருந்து கட்டுப்பாடு ஆளுநர் அம்மருந்தைக் கால்நடைகளுக்குத் தருவதற்குத் தடை விதித்து 2006ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இவை எளிய மக்களின் செவிகளுக்கு எட்டாத சேதியாய் இருப்பதை, இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின்போது புரிந்துகொள்ள முடிந்தது.

இந்தப் பயணம் மூலம் நாற்பதுக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரமாயிரம் மக்களுக்கு அருளகம் இயற்கைப் பாதுகாப்பு அமைவனமும் விதைகள் கலைக் குழுவும் பரிச்சயமடைந்தன. கடந்த காலத்தில் இம்மக்களால்தான் கழுகுகள் வாழ்ந்தன. இனியும் இம்மக்களால்தான் கழுகுகளைக் காப்பாற்றமுடியும். இயற்கையோடும், இயற்கை படைத்தளித்த உயிர்களோடும் வாழ்வதுதான் வாழ்க்கை என்பதை ஏழை, எளிய விளிம்பு நிலை மக்களுக்கு அறியச் செய்வதின் மூலம்தான் எதையும் காப்பாற்ற முடியும்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண்ணில் வாழ்ந்த சிவிங்கிப்புலி (சீட்டா) முற்றிலும் மறைந்ததைப் போல் பாறுக் கழுகுகள் அழிந்துபோக விட்டுவிடக் கூடாது. சுரங்கத் தொழில், காட்டுத்தீ, ஆற்றோரமுள்ள பெருமரங்களின் அழிப்பு போன்ற செயல்பாடுகளாலும் கழுகுகள் அழிந்தன. புலி, சிறுத்தைகளான வேட்டையாடும் விலங்குகளின் மீது கொண்ட வன்மத்தில் அவை கொன்ற மாட்டின் உடலில் இனி நஞ்சு தடவ மாட்டோம், காட்டில் இயற்கையாக இறக்கும் விலங்குகளைக் கழுகுகளுக்கு விருந்தாக்க வனத்துறையிடம் வேண்டுவோம் என்று கிராம மக்கள் உறுதியளித்து, தேநீரும் நம்பிக்கை தரும் வார்த்தைகளையும் கொடுத்துக் கலைப் பயணத்துக்கு விடை கொடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x