Last Updated : 29 May, 2017 11:05 AM

 

Published : 29 May 2017 11:05 AM
Last Updated : 29 May 2017 11:05 AM

சபாஷ் சாணக்கியா: அந்த மூன்று கேள்விகள்...

நீங்கள் எப்போதேனும் மௌன விரதம் இருந்ததுண்டா? ஐயா, ஒரு நாள் முழுக்கச் சாப்பிடாமல் இருப்பது கடினமென்றால், காலையிலிருந்து மாலை வரை பேசாமலே இருப்பது எளிதா என்ன?

ஒரு முறை நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அன்று அவர் மனைவி மௌன விரதமாம். அடாடா, இந்த ஆள் கொடுத்து வைத்தவர் என்று நினைத்துக் கொண்டேன்!

காலை 10 மணி இருக்கும். சில்லென்று நன்னாரி சர்பத் கொண்டு வந்தார்கள். அழகான கண்ணாடி டம்ளரில் தேன் நிறத்தில், முத்து முத்தாய் நீர் கோர்த்து வந்தது! சர்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ரசித்துக் குடித்த நான் டம்ளரைக் கீழே வைக்கும் முன்பே அங்கே ஓடி வந்த பணிப்பெண் அதைக் கழுவ எடுத்துச் சென்றாள்! ஆனால் செல்லும் வழியிலேயே அது கீழே விழுந்து நொறுங்கியது!

உள் அறையில் இருந்த அவர் மனைவி பதறியடித்து ஓடி வந்தார்கள். மௌனவிரதம் என்றாலும் அவர்களால் கோபத்தை அடக்க முடியவில்லை.

ஆத்திரத்தை வெளிக்காட்ட முடியாமல் தவித்தார்கள். சந்திரமுகி ஜோதிகாவை மிஞ்சும்படி விழிகளை உருட்டி, புருவங்களை உயர்த்தி, கைகளை ஆட்டிக் கோபத்தை வெளிப்படுத்தினார். நான் கிளம்புகிறேன் என்று சொல்லிப் பார்த்தேன். நண்பர் விடவில்லை. ஆனால் மௌன யுத்தம் தொடர்ந்தது! அவர் மனைவி ஒரு காகிதமும் பேனாவுமாக வந்து உட்கார்ந்து கொண்டார். அவர் எழுதி எழுதிக் காண்பிப்பார். நண்பர் ஓரிரு வார்த்தைகளில் பதில் பேசுவார். இதுவே வெகு நேரம் நீடித்தது. நான் எப்படியோ கழட்டிக் கொண்டு விட்டேன்.

ஐயா, மௌன விரதம் இருப்பதன் நோக்கம் என்னவென சிறிது மௌனமாகச் சிந்தியுங்கள். இந்தப் பேசா விரதம் நம்மை அவசரமாகப் பேச விடாமல் தடுக்கிறது! வாழ்க்கையில் பல பிரச்சினைகளுக்கு நாம் யோசிக்காமல் பேசுவது தானேங்க மூல காரணம்? மௌன விரதம் தேவையற்ற பேச்சைக் குறைப்பதற்கு ஒரு நல்ல பயிற்சியல்லவா?

ஆனால் நண்பரின் மனைவி மௌனவிரதமிருந்தும் அதன் அடிப்படைத் தத்துவத்தை உணரவில்லை! நம்ம சாணக்கியர் இதற்கு ஓர் எளிய வழியைச் சொல்லி இருக்காருங்க! எந்தச் செயலையும் தொடங்கும் முன்பு, நம்மை நாமே மூன்று கேள்விகள் கேட்டுக்கொள்ள வேண்டுமாம்!

அதில் முதல் கேள்வி, நான் ஏன் இதைச் செய்கிறேன்?'

என்ன தம்பி சிரிப்பு வருகிறதா?

எத்தனை பேருக்குங்க தாங்கள் ஏன் ஒன்றைச் செய்கிறோம் என்பதில் தெளிவு இருக்கு?

மௌனவிரதம் இருந்த சகோதரியை விடுங்கள்.

கோடைக் காலத்தில் சுற்றுலா செல்பவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். மனதிற்கு மாற்றம் வேண்டும், ஓய்வும் மலர்ச்சியும் வேண்டும் என்பது தானே குறிக்கோள்?

ஆனால் ஊட்டிக்குப் போய், காலை முதல் இரவு வரை ஊர் சுற்றி, உடலை உள்ளூரில் வதைப்பதை விட அதிகம் வதைப்பதுடன், அங்கே போய் மனைவியுடன் சண்டை போடுபவர்களும் உண்டே! பேசும் முன்பு, செயலைச் செய்யத் தொடங்கும் முன்பு ,கொஞ்சம் நினைத்துப் பார்த்தாலே நிறையப் பலன் கிடைக்குமே!

சாணக்கியர் இந்த இரண்டாவது கேள்வியையும் கேட்டுக் கொள்ளச் சொல்கிறார். ‘இதை நாம் செய்வதால் என்ன நடக்கும்' என்று எண்ணிப்பார்க்க வேண்டுமாம்! ஊர் சுற்றும் பொழுது , உடம்பு இடம் கொடுக்குமா என்று பார்க்காவிட்டால் ஊட்டிக்குப் போயும் டாக்டரைத் தான் பார்க்கணும்!

நாம் வினை செய்தால், எதிர்வினை ஏற்படும் என்பது உலக நியதி! விற்பனை யைக் கூட்டுவதற்கு விலையைக் குறைக் கலாம். ஆனால் கட்டுப்படி ஆகுமா, போட்டியாளரும் குறைத்துக்கொண்டே போனால் என்ன செய்வதென யோசிக் கணுமில்லையா?

சாணக்கியர் கேட்டுக் கொள்ளச் சொல்லும் மூன்றாவது கேள்வி ‘நம்மால் இந்தக் காரியத்தில் வெற்றி பெற முடியுமா' என்பது! பின்னே என்னங்க? முடிக்க முடியாத செயலைத் தொடங்கலாமா?

நகர்ந்து கொண்டிருக்கும் பேருந்தில் ஏறுவதாக இருந்தால், அதன் வேகத்திற்கு நம்மால் ஈடு கொடுக்க முடியுமா எனப் பார்த்துத் தானே முயல வேண்டும்? இல்லாவிட்டால் கீழே விழுந்து பல் போய் விடுமே? ஐயா, பலவற்றிற்குக் கொஞ்சம் யோசித்தால் போதும். சிலவற்றிற்கு நிறைய நிறைய யோசிக்கணும்!

எந்தப் படிப்பு படிக்கலாம், எந்த வேலையில் சேரலாம், இந்தப் பையனைக் கல்யாணம் செய்துக்கலாமா, இப்ப இங்கே இந்த வீட்டை வாங்கலாமா போன்ற முக்கியமான கேள்விகள் எல்லோர் வாழ்க்கையிலும் வருபவை. அடுத்த முறை, சிறிய செயலோ, பெரிய செயலோ, அதைத் தொடங்குமுன்பு, சாணக்கியரின் இந்த மூன்று கேள்வி களைக் கேட்டுப் பார்க்கலாமே!

- somaiah.veerappan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x