Published : 26 Jul 2016 10:18 AM
Last Updated : 26 Jul 2016 10:18 AM

உதவித்தொகையுடன் அறிவியல் படிக்கலாம்!

இந்த ஆண்டு மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் குறைந்து அறிவியல் படிப்புகள் மீது கவனம் திரும்ப ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக கலை அறிவியல் படிப்புகளில் சேர அதிக எண்ணிக்கையில் மாணவ-மாணவிகள் விரும்புகிறார்கள். மறுபக்கம், பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலேயே ஒரு லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.

பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளனவோ இன்னும் அதைவிட மேலான வேலைவாய்ப்புகள் கலை-அறிவியல் படித்தவர்களுக்கு இருக்கத்தான் செய்கின்றன.

மத்திய அரசின் உதவித்தொகை

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் சேர வைக்கும் வகையில் மாணவர் அறிவியல் உதவித்தொகைத் திட்டம் (Kishore Vaigyanik Protsahan Yojana-KVPY) என்ற சிறப்பு உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை பல ஆண்டுகளாகச் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் Stream SA, Stream SX, Stream SB) என 3 பிரிவுகளில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பி.எஸ்சி. படிக்க மாதம்தோறும் ரூ.5 ஆயிரமும், எம்.எஸ்சி. படிக்க ரூ.7 ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதோடு எதிர்பாராத செலவினத்துக்காக பி.எஸ்சி. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரமும், எம்.எஸ்சி. படிப்பவர்களுக்கு ரூ.28 ஆயிரமும் வழங்கப்படும் கல்வித் தகுதி, மதிப்பெண் தகுதி விவரங்களை பிரிவு வாரியாகப் பார்க்கலாம்.

யாருக்கானது?

ஸ்ட்ரீம் எஸ்.ஏ. (Stream SA) என்பது பிளஸ் ஒன் மாணவர்களுக்குரியது. அவர்கள் 10-ம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் குறைந்தபட்சம் 80 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் என்றால் 70 சதவீத மதிப்பெண் போதுமானது. அடுத்து, ஸ்ட்ரீம் எஸ்.எக்ஸ். (Stream SX) என்பது பிளஸ் டூ மாணவர்களுக்கானது. அவர்களும் மேற்சொன்ன மதிப்பெண் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம். பிளஸ் 2 முடித்த பின்னர் பி.எஸ்சி. இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பட்டப் படிப்பில் சேரக்கூடியவர்களாக இருக்க வேண்டும். Stream SB என்பது முதல் ஆண்டு பிஎஸ்சி மாணவர்களுக்குரியது. அவர்கள் பிளஸ் 2- வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் 60 சதவீத மதிப்பெண்ணும் (இடஒதுக்கீட்டுப் பிரிவினர் என்றால் 50 சதவீதம்) பெற்றிருக்க வேண்டும். இதே மதிப்பெண் தகுதியை முதல் ஆண்டு பட்டப் படிப்பிலும் பெற்றிருக்க வேண்டும்.

என்ன கேட்பார்கள்?

மேலே குறிப்பிட்டு 3 பிரிவுகளிலும் தகுதியான மாணவர்களை தேர்வுசெய்வதற்காக திறனறித் தேர்வும் (Aptitude Test), நேர்முகத்தேர்வும் நடத்தப்படும். திறனறித் தேர்வானது மாணவர்களின் புரிதல் திறனையும், ஆராயும் திறனையும் சோதிக்கும் வகையில் அமைந்திருக்கும். 10, 11, 12-ம் வகுப்பு மற்றும் முதல் ஆண்டு பட்டப் படிப்பு தரத்தில் கேள்விகள் கேட்பார்கள். இந்த ஆண்டுக்கான மாணவர் அறிவியல் உதவித்தொகை திட்ட தேர்வு வருகிற நவம்பர் மாதம் 6-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதற்கு ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் ( >http://www.kvpy.iisc.ernet.in) விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த ஆண்டில் (2016-2017) பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கும் கணிதம், அறிவியல் பிரிவு மாணவர்கள் பி.எஸ்சி. முதல் ஆண்டு படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு மையம் குறித்த விவரம் அக்டோபர் 2-வது வாரம் இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர்கள் தங்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். முந்தைய ஆண்டு கேள்வித்தாள்களும், அவற்றுக்கான விடைகளும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றைப் பார்த்தால் தேர்வுக்கு எப்படித் தயாராக வேண்டும் என்ற ஒரு தெளிவு கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x