Last Updated : 21 Jun, 2016 12:00 PM

 

Published : 21 Jun 2016 12:00 PM
Last Updated : 21 Jun 2016 12:00 PM

ஆங்கிலம் அறிவோமே - 115: பாட்டி வடை சுட்ட நிலவு தெரியுமா?

நாளிதழ் ஒன்றில், ‘He was admitted in a hospital and succumbed’ என்று படித்தேன். அப்படி என்றால் என்ன?

Succumbed என்றால் ஒன்றால் வெற்றி கொள்ளப்படுவது அல்லது ஒன்றில் சரணடைவது என்பது போன்ற அர்த்தம். She succumbed to desire என்றால் ஆசைக்கு அவள் இணங்கிவிட்டாள்.

ஆனால் ஒரு நோய் அல்லது உடல் பாதிப்பு தொடர்பாக succumb என்ற வார்த்தை பயன்படுத்தப்படும்போது அது இறப்பைக் குறிக்கிறது. அந்த விதத்தில் வாசகர் கூறிய வாக்கியப்படி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் இறந்துவிட்டார் என்றாகிறது.

அதேபோல fatal என்ற வார்த்தையும் இறப்பைக் குறிக்கிறது. It was a fatal accident என்றால், அந்த விபத்தில் உயிரிழப்பு நேர்ந்திருக்கிறது என்று பொருள்.

Kiss of death என்று கூறும்போது அதன் நேரடி அர்த்தத்தை நம்மால் உணர முடிகிறது. இறப்பை முத்தமிடுவது. ஆனால் இதைப் பயன்படுத்துவது வேறு அர்த்தத்தில்! ஒரு நிறுவனத்துக்குப் பெரும் சரிவைத் தருகிற ஒரு செயல் அல்லது நிகழ்வு. It would be kiss of death for the company. if it could be proved that the food contained worms.

*****

ADVICE ADVISE

Advice மற்றும் Advise ஆகிய வார்த்தை களுக்கிடையே உள்ள குழப்பத்தைப் போக்குமாறு பல வாசகர்கள் தொடர்ந்து எழுதுகிறார்கள். ஏற்கெனவே இதுகுறித்து முன்பொருமுறை ஓரளவு எழுதியுள்ளேன். என்றாலும் கொஞ்சம் விளக்கமாகவே இந்த முறை பார்த்து விடலாம்.

Advice என்பது noun. ஆலோசனை அல்லது அறிவுரை எனலாம்.

His advice is very beneficial.

Take my advice.

Advise என்பது verb. அதாவது அறிவுரை அளித்தல் அல்லது ஆலோசனை அளித்தல்.

The doctor advised him to take rest.

I advise you to regularly read this book.

இந்த இடத்தில் உச்சரிப்பைப் பற்றியும் கொஞ்சம் பார்ப்போம். Rice, Mice, Lice போன்றவற்றில் ‘ice’ என்பதை எப்படி உச்சரிப்போமோ அதுபோலத்தான் advice என்பதிலுள்ள ice என்பதை உச்சரிக்க வேண்டும்.

Prize என்பதில் ‘ize’ என்பதை எப்படி உச்சரிப்போமோ அதுபோலத்தான் advise என்பதிலுள்ள ‘ise’ என்பதை உச்சரிக்க வேண்டும்.

இப்போது கீழே உள்ள வாக்கியங்களில் advice, advise ஆகிய இரண்டு வார்த்தைகளும் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பாருங்கள்.

First give advice and then advise them to follow it.

Do not ignore good advice. And do not ignore those who have advised you.

The doctor advised you to follow his advice.

இதே போலத்தான் practice, practise என்ற வார்த்தைகளும். Practice என்பது noun. Practise என்பது verb.

The practice of regular walking is good for health. Practice makes perfect.

I practised cricket. He practised music.

*****

In a nutshell என்றால் அதன் பொருள் என்ன?

மிகச் சுருக்கமான விளக்கம்! குறைவான வார்த்தைகள். ஜூலியஸ் சீஸர் குறித்து ‘வந்தான், கண்டான், வென்றான்’ என்பதைப் போல. ‘கண்டேனன் கற்பினுக் கணியை’ என்று அனுமன் கூறியதைப்போல. ஆனால் in a nutshell சொல்வதாக நினைத்துக் கொண்டு குழப்பிவிடக் கூடாது.

*****

‘எது சரி? Earth, earth? என்பது ஒரு வாசகரின் ஐயம்.

பொதுவாக பூமியை earth என்று அதன் முதலெழுத்து capital letter ஆக இல்லாமல்தான் குறிப்பிடுகிறோம் (அது அந்த வாக்கியத்தின் முதல் வார்த்தையாக இருந்தாலொழிய).

The earth rotates on its own axis. He is very down to earth. மண் என்பதைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தும் போதும் earth என்றுதான் குறிக்கிறோம். Archaeologists excavated earth at the site. ஆனால் பூமியை ஒரு தனி கிரகம் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தும்போது Earth என்று குறிப்பிடுகிறோம். Many successful attempts have been made to reach the Moon from the Earth.

மேற்படி வாக்கியத்தில் Moon (அதாவது அதன் முதல் எழுத்து capital ஆக இருப்பது) சரியா என்பதையும் பார்த்துவிடுவோம். வடை சுடும் பாட்டி, கிரகணம், நீல் ஆம்ஸ்ட்ராங் கால் பதித்தது என்று பலவிதங்களில் ஒரு நிலவைக் குறிப்பிடுகிறோம் அல்லவா! அந்த நிலவைக் குறிப்பிடும்போது Moon என்று குறிப்பிட வேண்டும்.

Jupiter’s moons, Saturn’s moons என்றெல்லாம் குறிப்பிடும்போது moon என்ற வார்த்தையை (அந்த கிரகத்தின்) துணைக் கோள்கள் என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். அப்போது moonதான்; Moon அல்ல.

*****

(1) Ajay is the son of raj who likes english.

(2) Ajay is the son of raj, who likes english.

இந்த இரண்டு வாக்கியங்களைப் பகிர்ந்திருக்கும் ஒரு வாசகர் இரண்டில் எது சரி என்றும் யாருக்கு ஆங்கிலம் பிடிக்கிறது என்றும் கேட்டிருக்கிறார்.

முதலில் தேவைப்படுகிற இடத்தில் ‘Capital letters’-ஐப் பயன்படுத்திவிட்டுப் பிறகு கேள்விக்கு வருவோம்.

(1) Ajay is the son of Raj who likes English.

(2) Ajay is the son of Raj, who likes English.

இரண்டு வாக்கியங்களுமே குழப்பத்தை அளிக்கக் கூடியவைதான். Ajay, son of Raj, likes English என்பது சரியாக இருக்கும். இப்போது ஆங்கிலத்தை விரும்புவது Ajay.

Rajதான் ஆங்கிலத்தை விரும்புகிறார் என்றால் Raj, father of Ajay, likes English எனலாம். Raj, Ajay’s father, likes English என்பது மேலும் சிறப்பு.

*****

Non-country என்பதன் அர்த்தத்தைக் கேட்டிருக்கிறார் ஒரு நண்பர். தன்னைத் தனி நாடு என்று ஒரு பகுதி குறிப்பிட்டுக்கொண்டாலும், அப்படிப் பிற அமைப்புகளால் அங்கீகரிக்கப்படாத ஒரு பகுதியை Non country என்பதுண்டு.

தைவான் தன்னைத் தனி நாடு என்று அறிவித்துக் கொள்கிறது. உலக அழகிப் போட்டிகளில் தைவான் என்ற பகுதியிலிருந்து தனியாகவே அழகிகள் கலந்து கொள்கிறார்கள். ஆனால், சீனா தைவான் இன்னமும் தனது ஒரு பகுதிதான் என்கிறது. அதேபோல திபெத் இன்னமும் சீனாவின் ஒரு பகுதியா அல்லது தனி நாடா என்பதில் இருவிதக் கருத்துகள் உள்ளன.

ஐ.நா., தைவானையோ திபெத்தையோ தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. மேற்கூறிய காரணங்களுக்காக தைவானையும் திபெத்தையும் Non-countries என்று குறிப்பிடுபவர்கள் உண்டு. சமீபத்தில் பெல்ஜியத்தை Non-country என்று பிரிட்டிஷ் அரசியல்வாதி ஒருவர் குறிப்பிட்டார். அது பலத்த சர்ச்சைக்கு உள்ளானது தெரிந்திருக்கலாம்.

சிப்ஸ்:

l Cloth, clothe என்ன வேறுபாடு?

Cloth என்பது துணி. Clothe என்பது உடை. சட்டை தைத்துக்கொள்ள இரண்டு மீட்டர் துணி வாங்கினால் அது cloth. ரெடிமேட் சட்டை வாங்கினால் அது clothe. Clothes என்று பொதுவாக பன்மையில்தான் குறிக்கப்படுகிறது.

l Sack என்றால் என்ன?

Noun ஆகப் பயன்படுத்தினால் கோணி. Verb ஆகப் பயன்படுத்தினால் dismiss. Hit the sack என்று phrase ஆகப் பயன்படுத்தும்போது தூங்கச் செல்லுதல் என்று அர்த்தம். I am going to hit the sack; I am exhausted.

l Gaffe என்றால்?

இது ஒரு பிரெஞ்ச் வார்த்தை. சங்கடம் அளிக்கக்கூடிய தவறு எனலாம். Embarrassing mistake.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x