Last Updated : 13 Jul, 2016 11:53 AM

 

Published : 13 Jul 2016 11:53 AM
Last Updated : 13 Jul 2016 11:53 AM

சித்திரக்கதை: உதவிக்குக் கிடைத்த உதவிகள்!

நகரத்தில் வசிக்கும் விக்கி, விடுமுறை நாளில் அப்பத்தா வீட்டுக்கு வந்திருந்தான். சுற்றிலும் காடு சூழ்ந்த கிராமம் அது. வீட்டுக்கு வெளியே ஒரு வண்ணத்துப்பூச்சியை விக்கி பார்த்தான். அதைப் பிடிப்பதற்காகத் துரத்திக்கொண்டே போனான். வண்ணத்துப்பூச்சி அங்கும் இங்கும் உட்கார்ந்து விக்கிக்குப் போக்குக்காட்டியது.

திடீரென்று வண்ணத்துப்பூச்சியைக் காணோம். விக்கி சுற்றிலும் பார்த்தான். எங்கே போனது என்றே தெரியவில்லை. அப்போதுதான் வீட்டை விட்டு ரொம்ப தூரம் வந்துவிட்டதை விக்கி உணர்ந்தான். அதுவும், காட்டுக்குள் வந்துவிட்டான். எப்படித் திரும்பிப் போவது எனத் தெரியவில்லை.

விக்கிக்குப் பயத்தோடு சேர்ந்து அழுகையும் வந்தது. ‘அம்மா…’ என அழுதுகொண்டே நடந்தான். அப்போது அம்மா மானுடன் ஒரு குட்டி மான் போவதைப் பார்த்தான்.

விக்கி இதற்கு முன்பு மான்களை நேரில் பார்த்ததில்லை. அதனால், “அய்… மான்!” என்று ஆச்சரியத்தோடு சத்தம் எழுப்பினான். சத்தத்தைக் கேட்டுப் பயந்து போன அம்மா மான் விருட்டென ஓடியது. குட்டி மானும் பின்தொடர்ந்தது. அவற்றை விக்கி துரத்தினான்.

அப்போது காட்டின் நடுவே தார்ச்சாலை ஒன்று குறுக்கிட்டது. அந்தச் சாலையில், லாரி ஒன்று வேகமாக வந்தது. லாரி பக்கத்தில் வரும்முன் அம்மா மான் சாலையைக் கடந்துவிட்டது. குட்டி மான் கடப்பதற்குள் லாரி ரொம்ப பக்கத்தில் வந்துவிட்டது. மான்களைத் துரத்தி வந்த விக்கி, குட்டி மானுக்கு ஆபத்து என்பதை உணர்ந்தான். கொஞ்சம்கூட யோசிக்காமல் குட்டி மான் மீது பாய்ந்து அதன் பின்னங்கால்களைப் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். பெரிய ஆபத்து நீங்கியது. சாலையின் மறு பக்கத்தில் நின்று கவனித்துக்கொண்டிருந்த அம்மா மான், பதற்றத்துடன் குட்டி மானை நோக்கி வேகமாக ஓடிவந்தது. பயத்தில் நடுங்கிய குட்டி மானை, அம்மா மான் பாசத்துடன் நாக்கால் தடவியது.

பின்னர் விக்கியைப் பார்த்து “ரொம்ப நன்றி!” என்றது. “அய்… மான் பேசுது! எங்களை மாதிரியே பேசுற, எப்படி?” ஆச்சரியமாகக் கேட்டான்.

“நாங்க பேசறது எல்லோருக்கும் கேக்காது. கஷ்டப்பட்டு என் குட்டியைக் காப்பாத்தினே. எங்க மேல உள்ள அன்பாலதானே இத செஞ்ச? அதான், என்னால உன்கூடப் பேச முடியுது. என் குட்டியைக் காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி. நீ யாரு? காட்டுக்குள்ள எப்படி வந்தே?” அக்கறையோடு கேட்டது, அம்மா மான்.

விக்கிக்கு அழுகை வந்தது. அழுதுகொண்டே, “நான் அம்மாகிட்ட போகணும்…” என்றான். உடனே குட்டிமான், “அழாதே, எனக்கும் அழுகையா வருது!” என அன்பாகச் சொன்னதும் விக்கி அழுகையை நிறுத்தினான். காட்டுக்குள் வழி தவறி வந்த கதையைச் சொன்னான். “சரி, வண்ணத்துப்பூச்சியை எதுக்குப் பிடிக்கப் போன?”

“அதுவா, அதப் பிடிச்சு நூலில் கட்டிவிட்டா, ஜாலியா இருக்கும். அதான் பிடிக்கப் போனேன்”

“உனக்கு ஜாலியா இருக்கும், வண்ணத்துப்பூச்சிக்கு?”

திருதிருவென விழித்தான் விக்கி. “உன்னைக் கயிற்றில் கட்டிவிட்டா வலிக்கிற மாதிரி, வண்ணத்துப்பூச்சிக்கும் வலிக்கும்ல”

“ஆமா, இனி அப்படிச் செய்ய மாட்டேன்”

“சரி, நீ எங்கேயிருந்து வந்தே? வீடு எங்க இருக்கு?”

“அதுதான் எனக்குத் தெரியலயே. எங்க பார்த்தாலும் ஒரே மாதிரி தெரியுது” என்றான்.

அம்மா மான் கொஞ்சம் யோசித்தது. “என் பின்னாலேயே வா. என் நண்பன் அப்பு ஏதாவது வழி சொல்வான்” எனக் கூறியது. கொஞ்சம் தூரம் போனதும், எதிரில் யானை ஒன்று பிளிறிக்கொண்டு நடந்து வந்தது. விக்கி பயந்துபோய் மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டான்.

“பயப்படாதே, இதுதான் அப்பு!” அம்மா மான் கூறியதும், மெதுவாக வெளியே வந்தான் விக்கி.

யானையும் மானும் நலம் விசாரித்துகொண்டன. பின்னர் விக்கியின் கதையையும் அவன் குட்டிமானை காப்பாற்றியதையும் கூறி, “காட்டுக்குள்ளே வழி தவறி வந்துட்டான். இவனை அவுங்க அம்மாகிட்ட சேர்க்கணும்!” என்றது அம்மா மான்.

“ஓஹோ, வண்ணத்துப்பூச்சிகள் பூக்கள் அதிகமா இருக்குற இடத்துலத்தான் திரியும். கிழக்குத் திசையிலதான் பூக்காடு இருக்கு. அங்கேயிருந்துதான் இவன் வந்திருக்கணும்!” எனப் புத்திசாலித்தனமாக யோசித்து சொல்லியது அப்பு.

“விக்கி, நீ என் முதுகுல ஏறிக்க. நான் உன்னை கூட்டிட்டுப் போறேன்” என்றபடி அப்பு நான்கு கால்களையும் மடக்கி அமர்ந்துகொண்டது.

யானை மேல் உட்கார அப்பு பயந்தான். “பயப்படாதே விக்கி! அப்பு உன்னை பத்திரமா வீட்டுல சேர்த்துடும்” என்று அம்மா மான் தைரியப்படுத்தியது.

பயம் விலகியதும், விக்கி இரண்டு மான்களுக்கும் ‘பை…’ சொல்லிவிட்டு அப்புவின் மேல் ஏறினான். ஆடி அசைந்தபடி அப்பு பயணத்தைத் தொடங்கியது. சில நிமிடங்களில் பூக்காட்டுக்குள் நுழைந்தது. அங்கே நிறைய வண்ணத்துப்பூச்சிகள் பறந்துகொண்டிருந்தன.

“நீ துரத்திட்டு வந்த வண்ணத்துப்பூச்சி எதுன்னு தெரியுமா?”

“இவ்ளோ வண்ணத்துப்பூச்சிகள்ல அதை எப்படிக் கண்டுபிடிக்கிறது” என்று யோசித்தான் அப்பு. “அதோ! பச்சை, மஞ்சள், வெள்ளை கலர்ல இருக்கே, அதுமாதிரிதான் நான் துரத்தின வண்ணத்துப்பூச்சியும் இருந்துச்சு” என்றான்.

“இந்த கலர்ல இருக்குற வண்ணத்துப்பூச்சிகளுக்கு டிட்டுன்னு பேரு. இதுங்கள்ல ஒருத்தருக்கு ஆபத்து வந்தாலும் எல்லோர்கிட்டேயும் அதை சொல்லிடுங்க. நீ துரத்தினது இங்க இருக்குற எல்லா டிட்டுகளுக்கும் தெரிஞ்சுருக்கும்” என்றது அப்பு.

அப்போது அருகே வந்த ஒரு டிட்டுவிடம், “கொஞ்ச நேரத்துக்கு முன்னால உங்கள்ல ஒருத்தரை குட்டிப் பையன் துரத்தினானா?” என்று கேட்டது அப்பு.

“ஆமாம், இப்போதான் இதைக் கேள்விப்பட்டேன்” என்றது அந்த வண்ணத்துப்பூச்சி.

“எங்கேயிருந்து துரத்திக்கொண்டு வந்தானாம்? உன் நண்பர்கள் சொன்ன இடத்தை உன்னால் அடையாளம் காட்ட முடியுமா? மேலே உட்கார்ந்திருக்கானே விக்கி, அவன்தான் துரத்திகொண்டு வந்தவன். இவனை அவுங்க அம்மாவிடம் விடணும்”

சம்மதித்த அந்த வண்ணத்துப்பூச்சி, ஒரு தோட்டம் அருகே நின்றது. “இங்கேயிருந்துதான் துரத்திட்டு வந்திருக்கான்” என்றது அது.

“அய், அந்த மண் சாலையில போனா எங்க அப்பத்தா வீடு வந்துடும்” சந்தோஷமாகச் சொன்னான் விக்கி.

டிட்டு வண்ணத்துப்பூச்சிக்கு நன்றி சொன்ன அப்பு, விக்கியைக் கீழே இறக்கிவிட்டது. அப்புவுக்கு முத்தமிட்டு ‘பை’ சொன்னான் விக்கி. அப்புவும் தும்பிக்கையால் டாட்டா சொல்லிவிட்டுக் காட்டுக்குள் போனது. விக்கி ஜாலியாக வீட்டை நோக்கிப் போனான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x