Published : 12 Feb 2017 12:12 PM
Last Updated : 12 Feb 2017 12:12 PM

விவாதம்: நம் வீட்டிலும் ஒரு குற்றவாளி?

எங்கேயும் எப்போதும் வன்முறைக்கு ஆளாகிற பெண்கள், மிக எளிதாக மக்களால் மறக்கப்பட்டு விடுகிறார்கள் அல்லது புறக்கணிக்கப்படுகிறார்கள். சிதைக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட நந்தினியைப் பற்றி எழுதிய மை காய்வதற்குள் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறாள் குழந்தை ஹாசினி. இந்தக் கொலைகளுக்கு நீதி கேட்டு எழுந்த ஒன்றிரண்டு குரல்களும் அடுத்தடுத்து நிகழும் அரசியல் நாடகங்களின் ஓலத்தில் ஒடுங்கிப்போய்விட்டன.

படுகொலை செய்யப்பட்ட இந்த இரண்டு சிறுமிகளுக்காகப் போராடுவது இருக்கட்டும். நம் நாட்டில் தொடர்ந்து அதிகரித்துவரும் குழந்தைகள் மீதான வன்முறையை நாம் எப்படிக் கட்டுப்படுத்தப்போகிறோம்? ‘குழந்தைகளுக்கு ‘குட் டச்’, ‘பேட் டச்’ பற்றி சொல்லித்தர வேண்டும் என்று இதற்குத்தான் சொல்கிறோம்’ என்று யாரும் பதாகையை உயர்த்திப் பிடிக்க வேண்டாம். ஹாசினிக்கும் நிச்சயம் அந்த அறிவும் தெளிவும் இருந்திருக்கும். நடந்திருப்பது அத்துமீறல் அல்ல, கொடூரம். இருபது வயதுக் கொடூரனிடமிருந்து ஆறு வயதுக் குழந்தை எப்படி ‘குட் டச், பேட் டச்’ பற்றிய அறிவின் மூலம் தப்பிக்க முடியும்?

பெண்ணாகப் பிறப்பதே குற்றமா?

கொஞ்சம் வளர்ந்த குழந்தையாகவோ இளம் பெண்ணாகவோ இருந்தால், ‘தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்’என்பார்கள். உண்மையில் இதெல்லாம் பெண்களை ஆபத்திலிருந்து காப்பாற்றப் பயன்படுமா என்பதே பெரிய கேள்விக்குறி. எனக்குத் தெரிந்த ஒரு பெண், கராத்தே கலையில் கறுப்புப் பட்டை வாங்கியவர். அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய அவரிடம் பின்னால் இருந்து வந்த ஒருவன், மிகத் தவறாக நடந்துகொண்டான். தனக்கு என்ன நடந்தது என்று அந்தப் பெண் சுதாரிப்பதற்குள் அவன் ஓடியேவிட்டான்.

தான் கற்றுத் தேர்ந்த ஒரு கலையைத் தன் பாதுகாப்புக்குக்கூட அந்தப் பெண்ணால் பயன்படுத்த முடியவில்லை. எதிரி யார், எப்படித் தாக்குவான் என்று தெரிந்தால் ஒழிய தற்காப்புக் கலை பயின்ற பெண்ணால் தன்னைத் தற்காத்துக்கொள்வது கடினம். இந்நிலையில் ஏதுமறியாப் பெண்கள், வன்முறைகளுக்கு மிக எளிதாக ஆட்படுகிற நிலையில்தான் இந்தச் சமூகம் பாழ்பட்டுக் கிடக்கிறது. பெரியவர்களின் நிலையே இப்படி என்றால் குழந்தைகளின் நிலை?

குற்றவாளிகளைத் தண்டிக்காமல், பாதிக்கப்பட்டவர் களுக்குப் பாடம் நடத்தியே நாம் பழக்கப்பட்டுவிட்டோம். ‘நீ ஏன் ஆறு மணிக்கு வீட்டை விட்டு வெளியே போனாய், நீ ஏன் குட்டைப் பாவாடை அணிந்தாய், நீ ஏன் ஆண்களோடு இயல்பாகப் பேசுகிறாய், நீ ஏன் சத்தம்போட்டு சிரிக்கிறாய்…’ என்று நீளும் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளியே கிடையாது. ‘நீ ஏன் பெண்ணாகப் பிறந்தாய்?’ என்று பெண் பிறப்பையே கேள்வியாக்கி, அவள் அனைத்து விதமான வன்முறைக்கும் ஆளாக வேண்டிய பிறவிதான் என்று சொல்லி சொல்லியே வளர்த்தெடுப்பார்கள் போல.

பெண்களைப் பார்த்து ‘நீ அப்படி இரு’, ‘இப்படி நட’ என்று சொல்லிச் சொல்லி வளர்க்கும் சமூகத்தில் ஏன் யாரும் ஓர் ஆணைப் பார்த்து, ‘நீ ஒழுக்கமாக இரு’ என்று சொல்லி வளர்ப்பதில்லை? ‘அவன் ஆம்பிளை, அப்படித்தான் நடப்பான். பொம்பளை நாமதான் அடங்கி, ஒடுங்கி நடக்க வேண்டும்’என்ற வார்த்தைகள் எத்தனை ஆபாசமானவை. பிறந்தது முதலே ஆணுக்குள் திமிரையும் அகம்பாவத்தையும் ஆணவத்தையும் ஏற்றிவிட்டு, வளர்ந்த பிறகு அவன் பெண்களை மதித்து நடப்பான், அவர்களைச் சக மனிதப் பிறவியாக நடத்துவான் என்று எதிர்பார்ப்பது மடத்தனம். ஆண் என்கிற அகம்பாவத்துடன் சாதி ஆணவமும் சேர்ந்துகொண்டால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இந்தப் பிறவியில் நீதி கிடைக்காது.

சட்டம் போட்டுத் தடுக்க முடியுமா?

பெண் குழந்தைகளைக் காப்போம், செல்வ மகள் சேமிப்புத் திட்டம், தாலிக்குத் தங்கம் என்று பெண் குழந்தைகளின் பிறப்பையும் வளர்ப்பையும் ஊக்குவிக்கும் விதமாக அரசாங்கத்தால் ஆயிரம் திட்டங்கள் தீட்டப்படுவதாக அறிக்கைகள் சொல்கின்றன. இவற்றால் மட்டுமே பெண்களின் வாழ்வில் மலர்ச்சி பிறந்துவிடுமா? பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காகப் பல்வேறு சட்டங்கள் அமலில் உள்ளன.

ஆனால், அந்தச் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு எத்தனைப் பெண்களுக்கு இருக்கிறது? சட்டத்தின் துணையை நாடும் வசதி எத்தனைப் பெண்களுக்கு இருக்கிறது? அப்படியே நாடினாலும் நீதி கிடைப்பதற்குள் சந்திக்கிற அலைக்கழிப்பும் அவமானமும், நீதியே தேவையில்லை என்று ஒவ்வொரு பெண்ணையும் முடக்கி உட்காரவைத்துவிடும். மீறிப் போராடுகிறவர்களுக்கும் நீதி என்பது எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது. தன்னுடைய 17 வயதில் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, அதற்கான நீதி கேட்டு 15 ஆண்டுகளாகப் போராடியும் நீதி கிடைக்காமல் 38 வயதில் மரித்துப் போன அத்தியூர் விஜயா போன்றவர்கள் இதற்கு உதாரணம்.

ஒவ்வொரு நொடியும் பெண்களை அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்கும் ஆளாக்குகிற ஒரு சமூகத்தில் இருந்துகொண்டுதான், பண்பட்ட சமூகம் என்று நாம் மார்தட்டிக்கொள்கிறோம். பாரம்பரியப் பெருமைகளைப் பேசிக்கொண்டு, விலங்குகளைத் துன்புறுத்த மாட்டோம் என்று தோள் உயர்த்தி, விளையாட்டுக்குத் தடை நீக்கிப் பெருமிதப்படுகிறோம். ஆனால் விலங்குகளுக்கும் கீழானவர் களாகப் பெண்கள் நடத்தப்படுவது குறித்து இங்கே யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை. இந்தப் பொதுச் சமூகத்தைப் பொறுத்தவரை பெண்கள் அஃறிணைகளுக்கு நிகரானவர்கள். அவர்களை யார் வேண்டுமானாலும் என்ன வேண்டு மானாலும் செய்யலாம் என்பதன் வெளிப்பாடாகத்தான் சமீபத்திய வன்முறைகளும் படுகொலைகளும் இருக்கின்றன.

ஊடகங்களின் பங்கு

மனித மனங்களில் நெடுங்காலமாகப் புதைந்திருக்கும் வக்கிரமும் வன்முறையும் சமீப ஆண்டுகளாகத் தன் கோர முகத்தை அதிகமாக வெளிப்படுத்திவருகின்றன. அவர்களின் வக்கிரங்களுக்குத் தீனி போட, கையில் கிடைக்கிற குழந்தைகளும் பெண்களும் அதற்குப் பலியாகிறார்கள். குழந்தையோ, குமரியோ ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் உடல்கள் மட்டுமே என்ற எண்ணம்தான் தலைதூக்குகிறது.

குழந்தைகள் மீதான வன்முறைகளில் பெரும்பாலும் நமக்கு அறிமுகமான அல்லது நம் வீட்டைச் சேர்ந்த நபர்களால்தான் நடைபெறுகின்றன என்று ஆய்வுகள் சொல்கின்றன. நடக்கிற சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது நாம் குடியிருக்கும் ஊரில், தெருவில் ஏன் நம் வீட்டில்கூட ஒரு குற்றவாளி இருக்கலாம் என்ற அச்சமும் எழத்தான் செய்கிறது. இப்படியான குற்றவாளிகள் யாரும் கொடுவாள் மீசையுடனும் முகத்தில் மருவுடனும் இருப்பதில்லை.

ரயில் நிலையங்களிலும் கல்லூரி வகுப்பறைக்குள்ளும் கோயில் வளாகத்தில் வைத்தும் பெண்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். நண்பர்களால் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுச் சிதைக்கப்படுகிறார்கள். பால் மணம் மாறாத பச்சிளங் குழந்தைகள்கூட உருக்குலைக்கப்படுகிறார்கள்.

மனித மனங்களில் ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் விதைக்காத கல்வி முறையால் யாருக்கு என்ன பலன்? சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு மாணவியின் கொலையைப் பற்றி ஓர் ஆசிரியரிடம் பேசினேன். அப்போது அவர், “அந்தச் சிறுமியைக் கொலை செய்து கிணற்றில் போட்டுவிட்டு எதுவுமே நடக்காததுபோல அந்தப் பையன் வகுப்பறையில் அமர்ந்ததை, என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை” என்று சொல்லி வேதனைப்பட்டார். சக உயிரின் வலி புரியாத ஒரு தலைமுறையைத்தான் நாம் வளர்த்தெடுத்துக்கொண்டிருக்கிறோமா?

நீங்க என்ன சொல்றீங்க?

வாசகிகளே, நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு என்ன காரணம்? இதற்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது? குற்றவாளிகள் தப்பிப்பதும் பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளியாக்கப்படுவதும் எதனால்? பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு என்ன வழி? உங்கள் கருத்து என்ன? எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x