Published : 25 Mar 2017 10:11 AM
Last Updated : 25 Mar 2017 10:11 AM

வெளியே தெரியும்படியான செங்கல் சுவர்கள் அழகா?

வீட்டின் வெளித்தோற்றம் மற்றும் உள்தோற்றம்தான் உங்கள் வீட்டைப் பற்றிப் பிறர் மதிப்பிடுவதற்கான முதல்படி. ஆகவே, அவற்றை வடிவமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த அனைவரும் ஆசைப்படுவர். சிறிய வீடு என்பதால் வடிவமைப்பில் புதுமையைப் புகுத்த முடியாது என்பதும், பெரிய வீடு என்பதால் எப்பேர்ப்பட்ட வடிவமைப்பும் அழகாய்த்தான் திகழும் என்பது பொய்யான வாதங்கள். வீடு சிறியதோ பெரியதோ அதன் வடிவமைப்பில் புதுமை, தனிப்பாணி, மற்றும் கலைநயம் இருந்தால் இருந்தால் அனைவரையும் கவர்வது நிச்சயம்.

செங்கல் சுவர்கள், நவநாகரிக வடிவமைப்பு ஆகிய இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதவை என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் சமீப காலமாகச் செங்கல் சுவர்கள் கட்டிட வடிவமைப்பில் தனி அந்தஸ்தைப் பெற்று வருகின்றன. இயற்கையோடு இயைந்தாற்போல தோற்றத்தைத் தரவல்ல இந்தச் செங்கல் சுவர்கள் உங்கள் வீட்டுக்கு ஒரு தனித்துவமான அழகைத் தருவதோடு அல்லாமல் ஒரு காலவரம்பற்ற வசீகரத்தையும் தருகின்றன.

செங்கல் சுவர்கள் அமைத்து வடிவமைப்பு செய்வது என்பது நவீனம் மட்டுமல்ல. சுற்றுப்புறச்சூழலுக்கும் உகந்தது வெளியே தெரியும்படியான செங்கல் சுவர்களை நீங்கள் பல்வேறு உணவகங்கள் மற்றும் கலைக்காட்சிக்கூடத்தில் காணலாம். வரவேற்பறையிலும் இதுபோல் வெளியே தெரியும்படியான செங்கல் சுவர்கள் அமைப்பது தற்போதைய நவீனப் போக்கு. வரவேற்பறை மற்றும் நடைபாதை ஆகியவற்றில் வெளியே தெரியும்படியான செங்கல் சுவர்கள் அமைத்தால் அவற்றின் ஈர்க்கும்தன்மை அதிகமாக இருக்கும். செங்கல் சுவர்களின் வண்ணம் மற்றும் சீரிய நேர்த்தியிலும் அதன் அழகு அமைந்துள்ளது. மிக நவீனமான தோற்றம் வேண்டுமெனில் அதன் மீது வெள்ளை அடிக்கலாம்.

சாம்பல் வண்ணத்திலும் அமைத்தால் ஒரு பாரம்பரியத் தோற்றம் கிட்டும். என்றாலும் பழமையான, எளிமையான அந்தச் சிவப்பு வண்ணமே ஒரு ஒழுங்குப்படுத்தப்பட்ட, அழகியல் சார்ந்த தோற்றத்தைத் தந்து நேர்த்தியாய்த் திகழும். செங்கல் சுவர்கள் அமைக்கும்போது இன்னும் பிற விஷயங்களில் சிறிது அக்கறை கொண்டு அலங்கரித்தால் சிறப்பாக இருக்கும்.

எடுத்துக்காட்டாகச் செங்கல் சுவர்களைக் கொண்ட அறைகளுக்கு மரக் கூரைகள், அழகிய சர விளக்குகள், மிகப்பெரிய கண்ணாடிகள் என்று அலங்கரித்தால் மிகவும் கவர்ச்சிகரமாகத் திகழும். செங்கல்களின் ஈரப்பதம் பூச்சிகளை வரவேற்கும் என்பதால் குளியலறை மற்றும் சமையலறைகளுக்கு இவை சரியான தேர்வு அல்ல. என்றாலும் தங்களால் சிறந்த முறையில் பேண முடியும் என்ற அதீத நம்பிக்கையில் சிலர் அமைக்கின்றனர்.

வீட்டின் வெளிப்புறத்தில் செங்கல் சுவர்கள் அமைப்பது என்பது உங்களின் ஆளுமை மற்றும் தனித்துவத்தைப் பறைசாற்றுவதாய் அமைகிறது.

பாரம்பரியம் மிக்க இங்கிலிஷ் காட்டேஜ் தோற்றத்தைத் தரும். ஆங்காங்கே வண்ணம் பூசி சில இடங்களில் செங்கல் வண்ணமில்லாமல் இருந்தால் அதுவும் பழமையான வின்டேஜ் தோற்றத்தை அளிக்கும். இது போன்ற வெளித்தோற்றம் வெயில் காலங்களில் சூரியனின் கடுமையான உஷ்ணத்தில் இருந்து பாதுகாத்து வீட்டைக் குளுமையாக்குகின்றது. குளிர் காலத்திலும் வீட்டிற்குள் அதிகமாக குளிர் வராமல் பாதுகாக்கின்றது.

செங்கல் என்பது மண் மற்றும் தண்ணீர் கொண்டு தயாரிக்கப்படும் இயற்கையான கட்டுமானப்பொருள். ஒவ்வொரு விதமான மண்ணிலிருந்தும் ஒவ்வொரு விதமான செங்கல்கள் பிரத்யேகமான வண்ணம் மற்றும் குணங்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் செங்கல் எளிதில் உடைவதாகவும் ஒரே விதமான தோற்றத்திலும் இருப்பதில்லை. இப்போது நவீனமாக சேம்பர் செங்கல்கள் இயந்திரங்கள் மூலம் அச்சில் வார்த்தாற் போல ஒரே மாதிரியாகவும் உறுதியாகவும் தயாரிக்கப்படுகின்றன. செங்கலின் தரத்தைக் கண்காணித்த பிறகே அவற்றை வடிவமைக்கப் பயன்படுத்தவும், வண்ணமடிக்கவும் செய்ய வேண்டும். உள்புறத்துக்கு எனில் பளபளப்பு தரும் வண்ணம் அடிக்கலாம். வெளிப்புறத்திற்கு எனில் நீண்டநாள் உழைக்கக் கூடியதும் மற்றும் பாதுகாப்பு மற்றும் பேணச் சுலபமாக வகையில் வண்ணமடிக்க வேண்டும். செங்கல் ஈரமாக இருக்கும்போது வண்ணம் பூசக் கூடாது. முதலில் தவறாமல் பிரைமர் பூசிய பிறகே வண்ணம் பூச வேண்டும். மேலும் வண்ணத்தை அகற்றுவது மிகவும் சிரமமான பணி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எளிமையில் புதுமை என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இது போன்ற செங்கல் சுவர்கள். செங்கல்கள் கட்டிட கட்டுநர்களுக்கு மட்டுமல்ல; கட்டிட வடிவமைப்பாளர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை.

- முருகேஸ்வரி ரவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x