Last Updated : 22 Apr, 2017 10:08 AM

 

Published : 22 Apr 2017 10:08 AM
Last Updated : 22 Apr 2017 10:08 AM

பசுமை இலக்கிய முன்னோடிகள்

தமிழகச் சூழலியல் வரலாற்றில் 1980-களின் இறுதியில் மிக முக்கியமான நூல்களை வெளியிட்டதன் மூலம் தமிழகத்தில் சூழலியல் விழிப்புணர்வை முதன்முதலாக உருவாக்கியவர் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பை ஒருங்கிணைத்த நெடுஞ்செழியன். நெடுஞ்செழியனின் வழிகாட்டுதலில் இணைந்திருந்த இளைஞர்கள் குழு, மிக எளிய முறையில் மிகப் பெரிய வேலையைச் செய்தது.

அப்பொழுது சூழலியல் என்றால் மரம் நடுவது போன்ற வேலைகளைச் செய்வது என்றிருந்த நிலையை மாற்றி, சூழலியல் சீர்கேடுகளின் பின்னணியில் ஓர் அரசியல் உள்ளது என்பதைத் தங்களுடைய வெளியீடுகள் மூலமாக 90-களில் தெளிவுபடுத்தியது அவர்களுடைய புத்தகங்களே.

பெயரை முன்னிறுத்தாத பணி

‘சூழலியல் ஓர் அறிமுகம்’ என்ற நூல் இந்தப் பின்னணியில் எழுதப்பட்டது. மார்க்சியப் பின்னணியில் சூழலியலை அறிமுகப்படுத்திய நூல் இது. சூழலியல் குறித்துத் தமிழில் வெளியான முதல் கவிதை நூல் ‘இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை’ என்று சொல்லலாம். மிக எளிய முறையில் படிப்பவர்களின் மனதை மாற்றிவிடும் நூல்.

பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட நூல்கள், பெரும்பாலும் மொழிபெயர்ப்பு நூல்களே. இருந்தபோதும், முழு நூலையும் அவர்கள் மொழிபெயர்க்கவில்லை. தமிழகத்தின் சூழலுக்கு ஏற்றவற்றை மட்டும் மொழிபெயர்த்தனர். அதேநேரம் நூல் மொழிபெயர்ப்புப் பணியில் தங்கள் பெயர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல், கருத்தை மட்டுமே முன்னிறுத்திச் செயல்பட்டு வந்தனர். கூட்டாக மொழிபெயர்க்கப்பட்ட எல்லாப் புத்தகங்களிலும் எழுத்தாளர் பெயர் ‘பூவுலகின் நண்பர்கள்‘ என்றே வெளியிட்டுவந்தனர். அதேபோல, தங்கள் நூல்களை லாப நோக்கத்துடன் காப்புரிமை என்ற கட்டுப்பாட்டுக்குள்ளும் அவர்கள் அடைத்து வைக்கவில்லை.

இயற்கை வேளாண்மை ஆவணங்கள்

இன்று வீரியமாக வளர்ந்திருக்கும் இயற்கை வேளாண்மை இயக்கத்துக்கு அடிப்படை நூலான மசானபு ஃபுகோகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ என்ற நூலை முதன்முதலாகத் தமிழ்ச் சமூகத்துக்குக் கொண்டுவந்தது இவர்கள்தான். ஜப்பான் நாட்டு இயற்கை வேளாண் அறிஞரான ஃபுகோகாவின் புகழ்பெற்ற நூல் இது.

உலகைக் குலுக்கிய மற்றொரு நூலான ரேச்சல் கார்சனின் ‘மௌன வசந்தம்’ என்ற நூல் சுருக்க வடிவமாகத் தமிழில் கொண்டுவரப்பட்டது. பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான உலகின் முதல் நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது. உலகப் புத்தக விற்பனை வரலாற்றில் மிக முக்கிய இடத்தைத் தொட்ட இந்த நூல் மூலம், பூச்சிக்கொல்லிகளின் தீமைகளைத் தமிழ் உலகுக்குக் கொண்டு சேர்த்தனர். பசுமைப் புரட்சி பற்றிய மாயையை உடைப்பதற்குத் தர்க்க முறையிலும், புள்ளி விவரங்களின் அடிப்படையிலும் இந்த நூல் பெரிதும் உதவியது. 90-களில் இயற்கை வேளாண்மையை முன்னெடுத்தவர்களுக்குத் தமிழில் ஆவணங்கள் ஏதும் இல்லாத சூழ்நிலையில், இந்த நூல்களே முதன்மை ஆவணங்களாக விளங்கின.

விதைத் திருட்டு விவாதம்

வந்தனா சிவாவின் ‘பசுமைப் புரட்சியின் வன்முறை’ என்ற நூல் இதன் தொடர்ச்சியாக மொழிபெயர்க்கப்பட்டது. பசுமைப் புரட்சியைப் போற்றிப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்த காலத்தில், அதன் உண்மை முகத்தை வெளிக்கொண்டுவந்த நூல் இது. உழவர்களை நிலத்திலிருந்து அந்நியப்படுத்தவும், பெருநிறுவனங்களின் கைகளில் வேளாண்மையைக் கொண்டு சேர்க்கவுமே பசுமைப்புரட்சி பயன்பட்டது என்பதற்கு இந்த நூல் சாட்சியாக நின்றது. சூழலியல் இயக்கங்களும், இயற்கை வேளாண் இயக்கங்களும் வீரியமெடுப்பதற்கு இந்த நூல் முக்கிய ஆவணமாயிற்று.

இதையொட்டி வெளியான ‘விதைகள்’ என்ற சிறு நூல், பன்னாட்டு நிறுவனங்கள் விதைச் சந்தைக்குள் நுழைந்து விதைகளைக் கைப்பற்றும் பின்னணியைக் கூறுகிறது. இன்றைக்கு மான்சாண்டோ நிகழ்த்தி வரும் மரபணு மாற்று விதை ஏமாற்று நாடகத்தைப் பற்றி அன்றைக்கே இந்த நூலில் விவாதிக்கப்பட்டுள்ளது.

உலகமய ஆபத்து முன்னறிவிப்பு

90-களின் தொடக்கத்தில் இந்தியா உலகமய, தாராளமயச் சூழலுக்குள் நுழைந்தபோது, டங்கல் உடன்படிக்கை எப்படி இந்திய வேளாண்மையையும் மற்ற துறைகளையும் வீழ்த்தப்போகிறது என்பதை விளக்கிய சிறிய நூல் ‘தடங்கல் - டங்கல் உடன்படிக்கை’.

இதேபோல உலகமயமாகும் நிதி அமைப்புகள், குறிப்பாக உலக வங்கி போன்ற நிறுவனங்கள் எப்படி மூன்றாம் உலக நாடுகளைத் தங்களது பிடிக்குள் கொண்டு வருகின்றன என்பதை விளக்கியது ‘நிதிகளில் உலகமயமாக்கம்’ என்ற நூல். கவால்ஜித் சிங் என்ற புகழ்பெற்ற நிதியியல் அறிஞர் எழுதிய ‘Globalisation of Finance’ என்ற நூலின் தமிழ் வடிவம் இது. நிதியியல் தொடர்பான நவீனக் கருத்துகளை எளிய முறையில் விளக்க முனையும் இந்த நூல், இன்றைக்கும் பொருத்தமுள்ளதாக இருக்கிறது.

தண்ணீர் பஞ்சம்

‘மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்கா?’ என்ற நூல் தண்ணீர்ப் பஞ்சத்தையும், அதனால் நாடுகளுக்கிடையில் நடக்கும் சண்டைகளையும், பூசல்களையும் விளக்குகிறது. உலக நீர்க்கொள்கைத் திட்டத்தின் நிறுவனரும், உலகக் கண்காணிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த அறிஞர் சண்ட்ரா போஸ்டல் ஆங்கிலத்தில் எழுதிய Lost Oasis நூலின் மொழிபெயர்ப்பு இது. இன்று நடைபெறுகிற பல சிக்கல்களை முன்னறிவித்துக் கூறிய இந்த நூல், கொள்கை வகுக்கும் அறிவாளிகள் அவசியம் படிக்க வேண்டியது.

அவர் எழுதிய மற்றொரு நூலான ‘Pillars of Sand’ தமிழில் ‘மணற்கோட்டைகள்’ என்ற தலைப்பில் வெளியானது. உலக நாகரிகங்களான சிந்துவெளி நாகரிகம், சுமேரிய நாகரிகம், எகிப்து நாகரிகம் போன்றவை தண்ணீர் மேலாண்மையில் தவறிழைத்ததால், எப்படி அழிந்துபோயின என்பதை இந்த நூலில் அவர் விளக்கியிருப்பார்.

புதிய தமிழ்ச் சொற்கள்

பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு நூலான ‘ஞெகிழி’ என்ற சிறுநூல் வெளிவந்தது. இதில் பிளாஸ்டிக்குக்கு முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்ட ‘ஞெகிழி’ என்ற தமிழ்ச் சொல்லைப் போல, பல புதிய தமிழ் சூழலியல் சொற்களை வழங்கியவர்கள் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினரே.

‘உயிரியல் புரட்சியின் ஒடுக்குமுறை’ என்ற நூல், தமிழில் முதன்முதலாக வந்த உயிரித் தொழில்நுட்ப நூல். விதைகளையும், மரபணு மாற்றுப் பயிர்களையும் எவ்வாறு பன்னாட்டு நிறுவனங்கள் தொழில்நுட்பம் என்ற பெயரில் கைப்பற்ற வரும் பின்னணியைக் கூறும் நூல். இது மொழிபெயர்ப்பு நூல் அல்ல; நேரடி நூலாகவே வெளியிடப்பட்டது.பூவுலகின் நண்பர்கள் மொழிபெயர்த்த புத்தகங்களைச் சவுத் விஷன், சவுத் ஏசியன் புக்ஸ் சார்பில் பாலாஜியும் ஒயாசிஸ் சார்பில் பிரபலனும் வெளியிட்டனர்.

கலங்கரை விளக்கம்

தமிழகத்தில் அவ்வப்போது உருவாகும் சூழலியல் சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் வெளியீடுகளைக் கொண்டுவருவதிலும் பூவுலகின் நண்பர்கள் முன்னின்றனர். தூத்துக்குடியில் செம்பு உருக்காலை வருவதால் ஏற்படவுள்ள சூழலியல் சிக்கல்களை வெளியிட்டதோடு மட்டுமல்லாது, அதற்காக உள்ளூர் இளைஞர்களைக் கொண்டு போராடவும் செய்தார்கள். அதற்காக வெளியிடப்பட்ட நூல் ‘ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை’

கும்மிடிப்பூண்டி அருகே வரவிருந்த ‘தாபர் டூபாண்ட் ஆலை’ குறித்த நூல், இறால் பண்ணைகள் பற்றிய சிறு நூல், கொல்லி மலையில் பாக்சைட் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான சிறுநூல் எனப் பல வெளியீடுகளைக் கடந்த நூற்றாண்டின் இறுதியில் நெடுஞ்செழியன் ஒருங்கிணைத்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இது தவிர சி.மா. பிரித்விராஜ் ஒருங்கிணைப்பில் ‘பூவுலகு’ என்ற இதழ், புதுச்சேரி நண்பர்கள் வெளியிட்ட ‘சூழல்’ என்ற இதழும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வின் கலங்கரை விளக்குகளாக இன்றைக்கும் திகழ்கின்றன.

‘பூவுலகின் நண்பர்கள்’ நெடுஞ்செழியன் யார்?

‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பையும், அதன் வழியாகப் பல்வேறு சுற்றுச்சூழல் நூல்களையும் வெளியிடுவதற்குக் காரணமாக இருந்தவர் நெடுஞ்செழியன். தொலைநோக்குச் சிந்தனையாளராகத் திகழ்ந்த அவர், தமிழகச் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பான சொல்லாடலை 30 ஆண்டுகளுக்கு முன்பாகக் குழுவாக முன்னெடுத்தார். 50-க்கும் மேற்பட்ட நூல்களை இந்தக் குழு வெளியிட்டுள்ளது தன்னைத் தேடிவந்த இளைஞர்களை ஊக்குவித்த அவர், கருத்தியல் ரீதியாகச் செயல்படுவதற்கு அவர்களுக்கு வழிகாட்டினார். தன் வீட்டையே செயல்பாட்டுக்கான களமாக மாற்றிக்கொண்டு, ‘பூவுலகின் நண்பர்கள்’ என்ற பதிப்பகத்தையும் அங்கே நடத்தி வந்தார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரிந்த அவர், ‘ஆம்னஸ்டி இண்டர்நேஷனலின்' இந்தியப் பிரிவு தலைவராகச் செயல்பட்டிருக்கிறார். மனிதஉரிமை, சமூகநீதி சார்ந்தும் இயங்கினார். இடதுசாரி தத்துவங்களின் அடிப்படையில் பிரச்சினைகளை அணுகினார். உலகமயம்-தாராளமயம்-தனியார்மயம் ஆகியவை எதிர்காலத்தில் தரப்போவது என்ன என்பதை, 1990-களில் இருந்தே கடுமையாக விமர்சித்தவர். காப்புரிமை, அறிவுசார் சொத்துரிமைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர். 2006-ம் ஆண்டு காலமானார்.

பூவுலகின் நண்பர்கள் குழுவில் செயல்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள்

நெடுஞ்செழியன்

சி.மா. பிரிதிவிராஜ்

குமாரசாமி

புருஷோத்தமன்

நீலகண்டன்

சீனு. தமிழ்மணி

பாமயன்

செந்தில்குமரன்

போப்பு

சுதாலட்சுமி

ரமேஷ்பாபு

புனிதப்பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x