

பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம், பழமை போன்றவை குறித்துப் பயன்படுத்தப்படும் சொற்களின் பட்டியலில் இப்போது புதிதாக ஒன்று சேர்ந்திருக்கிறது: ‘பழம்பெரும் தூசி’.
விண்மீன் கொத்தில் தூசி
நம் வீட்டுக் குளிர்பதனப் பெட்டியின் பின்னாலோ நம் மெத்தைக்கு அடியிலோ இருக்கும் தூசியைக் குறிப்பதல்ல அது. மிக மிகத் தொலைவில் உள்ள ஸ்கல்ப்டர் என்ற விண்மீன் கொத்தில் உள்ள ஏ.2744_ஒய்.டி.4 (A2744_YD4) என்ற விண்மீன் மண்டலத்தில் உள்ள தூசி அது. அந்த விண்மீன் மண்டலத்திலிருந்து புறப்பட்ட அதன் ஒளி, கடந்த 1,320 கோடி ஆண்டுகளாக, அதாவது பிரபஞ்சம் தோன்றி 60 கோடி ஆண்டுகளுக்குப் பிந்தைய காலத்திலிருந்து, நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.
தற்போது அந்த விண்மீன் மண்டலம் எங்கே இருக்கிறது என்பதை உத்தேசமாகத்தான் கணக்கிட்டிருக்கிறார்கள். இங்கிருந்து கிட்டத்தட்ட 3,000 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் அந்த விண்மீன் மண்டலம் இருக்கிறது. லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்த நிகோலஸ் லபோர்த் என்பவரின் தலைமையிலான குழுவொன்று சிலி நாட்டில் உள்ள ‘ஏ.எல்.எம்.ஏ’ (Atacama Large Millimeter / submillimeter Array) வானலை தொலைநோக்கி (Radio Telescope) மூலம் இந்த விண்வெளி மண்டலத்தைப் பார்த்தறிந்தார்கள். அந்த விண்மீன் மண்டலம் வெகு தொலைவில் இருக்கிறது. எனினும், அதன் ஒளி நம்மை நோக்கிப் பயணிக்கும் வழியின் இடையே உள்ள ஒரு பிரம்மாண்டமான விண்மீன் மண்டலத் திரளின் ஈர்ப்புவிசையால் உருப்பெருக்கப்பட்டதால் ‘ஏ.எல்.எம்.ஏ’ தொலைநோக்கியால் அதைக் காண முடிந்தது.
ஆதிப் பிரபஞ்சம்
விண்மீன்கள் வெளிப்படுத்திய வானலை உமிழ்வுகளுக்கிடையே (Radio Emissions) சூரியனின் நிறையைவிட 60 லட்சம் மடங்கு நிறைகொண்ட தூசித் திரளின் வெப்ப உமிழ்வுகளையும் வானியலாளர்களால் காண முடிந்திருக்கிறது. கரிமம், சிலிகான், அலுமினியம் போன்றவற்றின் சிறு துகள்களை உள்ளடக்கியது அந்த தூசித் திரள். நம் நகங்களில் சேரும் அழுக்கு, நமது மெத்தைக்கு அடியிலுள்ள தூசி போன்றவற்றின் கச்சாவான வடிவம் கொண்டதுதான் அது. இதில் பெரிய விஷயம் என்னவென்றால் பெருவெடிப்பு (Big bang) நிகழ்ந்து 60 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அளவில் தூசி இருந்தது என்பதுதான்.
பெருவெடிப்பிலிருந்து வெளிப்பட்ட ஆதிப் பிரபஞ்சம் கிட்டத்தட்ட முழுவதும் லேசான தனிமங்களான ஹைட்ரஜன், ஹீலியம், மிகச் சிறிதளவு லித்தியம் ஆகியவற்றால் நிரம்பியிருந்தது. கோள்களையும் நம்மையும் உருவாக்கத் தேவையான கனரகத் தனிமங்களெல்லாம் விண்மீன்களில்தான் உருவாக்கப்பட்டன; அதன் பின் அந்த விண்மீன்கள் வெடித்துச் சிதறின. வெடித்துச் சிதறிய விண்மீன்கள் தங்கள் சாம்பலை அண்டவெளி முழுவதும் இறைத்தன. அந்தச் சாம்பல், புது விண்மீன்களோடு ஐக்கியமாக மறுபடியும் எல்லாம் முதலிலிருந்து நிகழ்கின்றன ஒரு சுழற்சியைப் போல. இதனால் பிரபஞ்சத்தின் வேதிப்பொருள் வளம் செறிவூட்டப்படுகிறது.
பிரசிவிக்கப்பட்ட புதிய விண்மீன்கள்
தற்போது கண்டறியப்பட்டிடுக்கும் ஆதாரங்கள் முக்கியமான ஒரு விஷயத்தை நமக்கு உணர்த்துகின்றன. தூசியிலிருந்து மேம்பட்ட தூசி, மேலும் மேம்பட்ட தூசி என்ற பரிணாம முன்னேற்றம் பிரபஞ்சம் 60 கோடி ஆண்டுகள் வயதுள்ளபோதே சூடுபிடித்தது நமக்குத் தெரியவருகிறது. பிரபஞ்சம் தோன்றி 20 கோடி ஆண்டுகளுக்குள்ளேயே ஆரம்ப கால விண்மீன்கள் தோன்றி, தொடர்ச்சியான பெருவிண்மீன் வெடிப்புகளால் (supernova) அவை மறைந்தும் போய்விட்டிருந்தன. வானியல் இதழொன்றில் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்த ரிச்சர்டு எல்லிஸ் உள்ளிட்டோர் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.
பிரபஞ்சத்தின் ஆரம்ப காலம் என்பது செழிப்பான மகப்பேறு காலம். அந்த காலகட்டத்தில், நாம் இங்கே விவாதித்துக்கொண்டிருக்கும் விண்மீன் மண்டலம் (A2744_YD4) ஒரு ஆண்டுக்கு 20 புதிய விண்மீன்கள் என்ற கணக்கில் பிரசவித்துக்கொண்டிருந்தது. ஆண்டுக்கு ஒரே ஒரு புதிய விண்மீன் என்ற கணக்கில் நம் பால்வீதி மண்டலம் பிரசவிப்பதுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட அலைவாங்கிகளின் (Antenna) பெரும் படையைக் கொண்டது ‘ஏ.எல்.எம்.ஏ’ தொலைநோக்கி. விண்மீன்களிலிருந்தும் அண்டவெளி தூசியிலிருந்தும் வெளியாகும் வெப்ப உமிழ்வைப் பதிவுசெய்யும் விதத்தில் இந்த அலைவாங்கிகள் கூர்தீட்டப் பட்டிருக்கின்றன. அதேபோல், நாஸா செயல்படுத்தப்படவுள்ள ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியும் பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தை ஆராயும்விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய கண்டுபிடிப்புகளால் இந்தத் தொலைநோக்கிகளுக்குப் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகத் தெரிகிறது.
“விண்வெளி மண்டலங்களில் முதன்முதலில் கனரகத் தனிமங்கள் எப்போது கலக்க ஆரம்பித்தன என்பதைப் பல்வேறு ஆய்வுகளின் மூலமாகத் துல்லியமாகக் கண்டறிய வேண்டும்” என்று எல்லிஸ் கூறினார். மேலும், “இப்போதுவரை, ஆரம்பகால விண்வெளி மண்டலங்களைப் பற்றிய ஆய்வுகளெல்லாம் நிறங்கள், நிறை ஆகியவற்றின் அளவீடுகளை அடிப்படையாகக் கொண்டே நடத்தப்பட்டன. தற்போது, ஒருவழியாக, நாம் வேதியியலையும் பின்பற்றத் தொடங்கியிருக்கிறோம்” என்றார்.
- டெனிஸ் ஓவர்பை, நியூயார்க் டைம்ஸ்,
சுருக்கமாகத் தமிழில்: ஆசை