Published : 06 Oct 2014 04:28 PM
Last Updated : 06 Oct 2014 04:28 PM

வங்கித் தேர்வுகள்: வாசிப்பை நேசியுங்கள்!

ஆங்கில மொழித் திறன் வினாக்கள் குறித்து பார்க் கலாம். பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி பணிக்கான ஆங்கிலத் தேர்வில் 50 கேள்விகளும், அதேபோல் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் நடத்துகின்ற வங்கி அதிகாரி தேர்வில் பொது ஆங்கிலம் என்ற பெயரில் 40 வினாக்களும் கேட்கப்படுகின்றன.

காம்ப்ரிஹென்சன் பகுதி

பொதுவாக, ஆங்கிலப் பகுதியில், Reading comprehension, Jumbled Sentences, Fill in Blanks, Close Passage, Errors in usage, Sentence correction, Vocabulary, Paragraph completion எனப் பல்வேறு பிரிவுகளில் கீழ் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதில் காம்ப்ரிஹென்சன் பகுதி மிக முக்கியமானது. காரணம் இதில் 10 முதல் 15 கேள்விகள் வரை எதிர்பார்க்கலாம்.

ஆங்கிலத்தில் பெரிய பத்தி (passage) அல்லது நான்கைந்து பத்திகளைக் கொடுத்து அதன்கீழ் 10 அல்லது 15 கேள்விகளைக் கேட் பார்கள். வினாக்கள், வார்த்தை அறிவு, பொருள், எதிர்ச்சொல் ஆகியவற்றை அறியும் வண்ணம் அவை அமைந் திருக்கலாம்.

முதலில் கேள்விகளை நன்கு படிக்க வேண்டும். அதன் பிறகு கொடுக்கப்பட்டுள்ள பத்திக்குச் செல்ல வேண்டும். இதனால், கேட்கப்படும் கேள்விகளுக்கான பதிலை அளிக்கும் வகையில் அந்தப் பத்தியை வாசிக்கலாம். தேவையில்லாத மற்ற விவரங்களைக் கருத்தூன்றிப் படிக்கத் தேவையில்லை. இதனால், நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.

முதலில் பத்தியை நன்கு வாசித்துவிட்டு அதன் பிறகு கேள்வி களுக்கு விடையளிப்பதுதான் எளிதாக இருக்கும் எனச் சிலர் கருதலாம். தங்களுக்கு எந்த முறை எளிதாகத் தோன்றுகிறதோ அதை அவர்கள் தாராளமாகப் பின்பற்றலாம்.

ஆங்கில நாளிதழ்கள், ஆங்கில வார இதழ்கள் தொடர்ந்து வாசித்து வந்தால் காம்ரிகென்சன் பகுதியில் விடையளிப்பது மிகவும் சுலபமாக இருக்கும். வாசிப்பு பழக்கம் பொது அறிவு பகுதிக்கும், குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வுக்கும் பெரிதும் கைகொடுக்கும்.

ஆங்கில வாசிப்பு

‘ஜம்ப்பில்ட் சென்டன்ஸ்’ பகுதியில் 5 வினாக்கள் இடம்பெறும். ஒரு பத்தியை வாக்கியங்களாகப் பிரித்து அவற்றைக் குழப்பிக் குழப்பிக் கொடுத்திருப்பார்கள். அவற்றைச் சரியான முறையில் வரிசைப்படுத்த வேண்டும். எளிதாக முழு மதிப்பெண் எடுக்கக்கூடிய பகுதி இது.

ஏற்கெனவே குறிப்பிட்டபடி ஆங்கில வாசிப்பு இருந்தால் எளிதாக விடை யளித்துவிடலாம். பொதுவாக இந்தப் பகுதியில் விடையளிக்கும்போது, முதலில் அந்தப் பத்தியின் ஆரம்ப வாக்கியத்தையும், கடைசியாக வரக்கூடிய வாக்கியத்தையும் அடையாளம் காண முயல வேண்டும்.

பொதுவாக ஒரு பத்தியின் முதல் வாக்கியம் ஏதாவது ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்தும் வகையிலும், கடைசி வாக்கியம் ஒரு முடிவைச் சொல்லும் வகையிலும் அமைந்திருக்கும். இந்த இரு வாக்கியங்களையும் கண்டுபிடித்து விட்டால் உள்ளே வரக்கூடிய இதர வாக்கியங்களை எளிதாக வரிசைப் படுத்திவிடலாம்.

மூன்றாவது பகுதியான ‘பில் இன் தி பிளாங்க்ஸ்’ பகுதியிலும் 5 வினாக்கள் வரை இடம்பெறுகின்றன. ஒரு வாக்கியம் கொடுக்கப்பட்டு முதலிலோ அல்லது நடுவிலோ அல்லது கடைசியிலோ காலியிடம் விட்டிருப்பார்கள். அதில் வர வேண்டிய சரியான வார்த்தையைத் தேர்வுசெய்ய வேண்டும்.

கேள்விகள் ஆங்கில இலக்கண அறிவு தொடர்புடையதாகவும், பொருள், எதிர்ச்சொல், சொற்றொடர்கள் (Idioms and Phrases) சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும். இதற்கும் ஆங்கில வாசிப்பு பழக்கம் இருந்தால் மிக எளிதாகப் பொருத்தமான வார்த்தையைத் தேர்வுசெய்து விடையளித்துவிடலாம்.

இலக்கண அறிவு

பிழைகளைக் கண்டறியும் பகுதியை (Errors in Usage) பொறுத்தவரையில், ஒரு வாக்கியம் நான்கைந்து பகுதி களாக அடிக்கோடு இடப்பட்டுப் பிரித்துக் காட்டப்பட்டிருக்கும். அதில் எந்தப் பகுதி பிழையாக உள்ளது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். சில நேரம் பிழையே இல்லாமலும் வாக்கியத்தைப் பிரித்துக் காட்டி யிருப்பார்கள்.

அதுபோன்ற சூழலில் பிழை இல்லை என்பதைப் பதிலாகத் தேர்வுசெய்யவேண்டும். ஆங்கில இலக்கண அறிவு இருந்தால் இப்பகுதி கேள்விகளுக்கு எளிதாக விடையளித்துவிடலாம். மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுவருவதைப் போன்று ஆங்கில வாசிப்பு இப்பகுதி வினாக்களுக்கு விடையளிக்கப் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

சென்டன்ஸ் கரெக்ஷன் பகுதியும் மேற்கண்ட பகுதியும் கிட்டத்தட்ட ஒன்றுதான். இதில், இலக்கண ரீதியில் தவறாக உள்ள பகுதியைக் கண்டுபிடிப்பதுடன் சரியான விடையைச் சுட்டிக்காட்டவும் செய்ய வேண்டும். ஆங்கில வார்த்தை அறிவைச் சோதிக்கும் vocabulary பகுதியில் 5 வினாக்கள் வரை எதிர்பார்க்கலாம். அவை, ஆங்கில வார்த்தையின் பொருள், எதிர்ச்சொல், மரபுத்தொடர் பயன்பாடு உள்ளிட்டவை தொடர்பாக இருக்கக்கூடும்.

பத்தியை முடித்துவைத்தல் (Paragraph completion) பிரிவிலும் 5 கேள்விகள் இடம்பெறலாம். ஒரு முழு பத்தி கொடுக்கப்பட்டு இருக்கும். அந்தப் பத்தியின் இறுதி வாக்கியத்தைப் பத்தியில் உள்ள வாக்கியங்களில் இருந்து தேர்வுசெய்ய வேண்டும். ஒருசில நேரங்களில் இப்பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்படாலும் இருப்பதுண்டு.

அடிப்படை ஆங்கில இலக்கண அறிவும், வாசிப்புப் பழக்கமும் இருந்தால் எவ்விதத் தயாரிப்பும் இல்லாமலே இப்பகுதியில் முழு மதிப்பெண்ணைப் பெற்றுவிடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x