சினிமாவில் ஜொலிக்க உதவும் படிப்புகள்!

சினிமாவில் ஜொலிக்க உதவும் படிப்புகள்!
Updated on
1 min read

இன்றைய ஊடகங்களிலேயே சக்தி வாய்ந்ததாக திகழ்கிறது சினிமா. சினிமா துறையில் சாதித்தவர்களை ஆட்சியில் அமர வைத்து அழகு பார்க்கும் வரலாறு கொண்டது தமிழகம், சினிமா என்னும் கனவுத் தொழிற்சாலைக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள், அதற்கான தொழில்நுட்ப படிப்பை கற்பதும் அவசியம்.

தமிழகத்தில் தரமணியில் எம்.ஜி.ஆர். திரைப்பட அரசுக் கல்லூரி இயங்குகிறது. இங்கு டிப்ளமோ இன் ஃபிலிம் டெக்னாலஜி அண்டு டி.வி. புரடக்‌ஷன் (சினிமோடோகிராஃபி), டிப்ளமோ இன் சவுண்ட் இன்ஜினீயரிங் அண்டு சவுண்ட் ரிக்கார்டிங், ஃபிலிம் பிராசஸிங் கோர்ஸ் ஆகிய கோர்ஸ்களில் சேர விரும்புவோர், பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல் பாடப் பிரிவை எடுத்திருக்க வேண்டும்.

பிளஸ் 2 தேர்வில் ஓ.சி. பிரிவினர் 55 %, பி.சி. பிரிவினர் 50 %, எம்.பி.சி. பிரிவினர் 45 % மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதுமானது. மொத்தம் 14 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ஓர் இடம், கலைத்துறையினரின் குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது. குறைந்த இடங்களே இருப்பதால் இங்கு சேர கடும் போட்டி நிலவுகிறது.

பிளஸ் 2 வகுப்பில் எந்த குரூப் எடுத்திருந்தாலும், டிப்ளமோ இன் ஃபிலிம் எடிட்டிங் அண்டு டி.வி. புரடக்‌ஷன் படிக்கலாம். அதேபோல் எந்த வகையான பட்டப் படிப்பு முடித்தவர்களும் யு.ஜி., டிப்ளமோ கோர்ஸில் சேர முடியும். இதன் மேற்படிப்பாக பி.ஜி-யில் டிப்ளமோ இன் டைரக்‌ஷன் அண்டு ஸ்கிரீன் பிளே, ரைட்டிங் அண்டு டி.வி. புரடக்‌ஷன், விஷுவல் கம்யூனிகேஷன் எலக்ட்ரானிக் மீடியா அனிமேஷன், டிப்ளமோ இன் ஃபிலிம் டெக்னாலஜி, மோஷன் பிக்சர் அனிமேஷன், மோஷன் பிக்சர் விஷுவல் எஃபக்டிவ் உள்ளிட்ட படிப்புகளில் சேரலாம்.

அரசு திரைப்படக் கல்லூரியை தவிர்த்து எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் திரைப்படக் கல்லூரி இயங்குகிறது. தவிர, புனா உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள திரைப்படக் கல்லூரிகளிலும் படிக்கலாம். சினிமா துறை போட்டி நிறைந்தது என்பதால் உடனடியாக சாதிக்க இயலாவிட்டாலும் தொடர் மற்றும் புதுமையான மாற்று முயற்சிகள், கடின உழைப்பு, தனித் திறன்கள், புது யுக்திகள் மூலம் சாதனையாளர் ஆகலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in