Published : 30 May 2017 11:50 AM
Last Updated : 30 May 2017 11:50 AM

லேஆஃப் பயங்கரவாதம்: ஐ.டி. ஊழியர்களை அச்சுறுத்துவது எது?

வருடந்தோறும் பணி மதிப்பாய்வு செய்து (appraisal) செயல்திறனில் மிகவும் பின்தங்கி நிற்கும் ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தனியார் நிறுவனங்களுக்கு ஒன்றும் புதிதல்ல; அதன் ஊழியர்களுக்கும் புதிதல்ல. அவ்வாறு தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ பணிநீக்கம் செய்வது வழக்கமாக நடந்தேறிவந்தாலும் இன்று ஐ.டி. ஊழியர்களைப் பதைபதைக்கும் சொல்லாக ‘லேஆஃப்’ மாறியுள்ளது.

இன்றைய தேதியில் காக்னிசன்ட் நிறுவனத்தில் இந்த ‘லேஆஃப்’ மிக மோசமாக நடந்துவருவதாக அதன் ஊழியர்கள் புகார் செய்துவருகின்றனர். ஆனால், காக்னிசன்ட் உட்பட அனைத்து ஐ.டி. நிறுவனங்கள் தரப்பிலிருந்தும், “பணித்திறனில் வளர்ச்சியை வெளிப்படுத்தத் தவறுபவர்கள் மட்டுமே பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள். இது லேஆஃப் அல்ல” என்கிற விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பிறகு இந்தியாவின் 39 லட்சம் ஐ.டி. ஊழியர்களையும் அச்சத்தில் உறையவைப்பது எது?

தொடர் எச்சரிக்கை

உலகின் பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனங்களில் பிரபலமானது மெக்கின்ஸே (McKinsey). அதன் இந்திய நிர்வாக இயக்குநர் நோஷிர் ககா, “தொழில்நுட்ப மாற்றங்களின் காரணமாக இந்திய ஐ.டி. ஊழியர்களில் 50-60 சதவீதத்தினருக்குப் புதிய பயிற்சிகள் அளித்தாக வேண்டும் என்கிற இக்கட்டான நிலை வந்துள்ளது” என சமீபத்தில் தெரிவித்தார். அதை அடுத்து இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களின் தேசியக் கழகமான நாஸ்காமின் (NASSCOM) தலைவர் சந்திரசேகர், “தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகட்ட ஐ.டி. துறையானர் தங்களுடைய திறனை அவ்வப்போது மேம்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

போதாததற்கு, புதிய தொழில்நுட்பங்களுக்குத் தங்களைத் தகவமைத்துக்கொள்ளாத காரணத்தினால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 6 லட்சம் ஐ.டி. ஊழியர்களின் வேலை பறிபோகும் என ஹெட் ஹண்டர்ஸ் இந்தியா நிறுவனம் உட்படப் பல ஆய்வு நிறுவனங்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளன. இதற்கெல்லாம் என்னதான் காரணம் எனக் குழம்பியவர்களுக்கு, டொனால்ட் ட்ரம்ப்பை நோக்கிக் கைநீட்டியது அசோசாம் அமைப்பு (The Associated Chamber of Commerce of India).

எச்-1 பி தற்காலிக விசாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கெடுபிடி விதித்திருப்பதால் வேலை தேடி அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு மட்டும்தான் பாதிப்பு என இதுவரை நம்பியவர்களுக்கு இது பேரிடியாக மாறியது. முதலாவதாக இந்தியாவைத் தேடிப் பெருநிறுவனங்கள் வந்ததற்கும், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் இந்தியர்களுக்கு வேலை அளித்ததற்கும் அடிப்படைக் காரணம் குறைவான ஊதியத்துக்குத் தொழிலாளர்கள் கிடைக்கிறார்கள் என்பதுதான்.

அப்படியிருக்க, அமெரிக்கர்களுக்கு வேலைக் கொடுப்போம் என அமெரிக்கா சொன்னால், அமெரிக்கத் தொழிலாளர் மற்றும் பணிநியமனச் சட்டத்தை அங்கு பின்பற்றி ஆக வேண்டும். அதன் தொடர்ச்சியாக, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் கொள்கையிலும் மாற்றம் ஏற்பட்டது. இதன் விளைவாக, இனி இந்தியாவில் உள்ள பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பில் இறங்குவார்கள் என அசசோம் அபாயச் சங்கு ஊதிவிட்டது.

ராஜினாமாசெய்ய வற்புறுத்தல்

ஏற்கெனவே, 2014-ல் டாடா கன்சல்டன்சி நிறுவனம் லேஆஃப் அறிவித்தபோது அதை எதிர்த்துத் தொடங்கப்பட்டதுதான் எஃப்.ஐ.டி.இ. (F.I.T.E.). தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் கால் சென்டர்களிலும் பணிபுரியும் ஊழியர்களின் உரிமைகளை முன்னிறுத்தும் இந்த அமைப்பு தற்போது சென்னை மற்றும் ஹைதராபாதில் உள்ள தொழிலாளர் நல வாரியத்திடம் முறையிட்டுள்ளது. தங்களைக் காலத்துக்கு ஏற்பத் தகவமைத்துக்கொள்ளாத ஊழியர்களுக்கு மட்டுமே ஆபத்து என நிறுவனங்கள் தரப்பிலிருந்து தரப்படும் விளக்கத்தை இவர்கள் மறுக்கிறார்கள்.

“காக்னிஸண்டில் மட்டுமல்லாமல் விப்ரோ, டெக் மஹேந்திரா, எச்.சி.எல், டி.எஃப். எல். உள்ளிட்ட 7 பெருநிறுவனங்களில் ஆள்குறைப்பு நடைபெறவிருக்கிறது. இதற்கு உண்மையான காரணங்கள், ‘automation’, ‘cost cutting’. பத்துப் பேர் செய்யக்கூடிய பணியை இரண்டே ஆட்களை வைத்து முடிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி வந்துவிட்டது. ஆக, தலைகளைக் குறைத்தால் நிறுவனத்துக்கு லாபம்தானே! குறிப்பாக புராஜக்ட் மேனேஜர், சீனியர் பிராசஸ் அசோசியேட் போன்ற மூத்த ஊழியர்களையும், எதிர்த்துக் கேள்வி கேட்கும் திராணி அற்ற ஊழியர்களையும், பணி நேரம் கடந்து அதிகப்படியாக வேலை செய்ய மறுப்பவர்களையும் குறிவைக்கிறார்கள்.

அதுவும் வேலையிலிருந்து எங்களையே ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். ஏனென்றால், நிறுவனம் எங்களை வெளியேற்றினால் அதை எதிர்த்து நாங்கள் சட்டரீதியாகப் போராடுவோமே! இதற்கெல்லாம் அவர்கள் வைக்கும் பெயர்தான் ‘Non performers’” என்கிறார் ஐ.டி. நிறுவன ஊழியரும் எஃப்.ஐ.டி.இ. அமைப்பின் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளருமான சதிஷ் மோகன கிருஷ்ணன்.

கண்காணிப்பது யார்?

“வழக்கமாக ஐ.டி. நிறுவனங்களில் நடைபெறும் லேஆஃப் அல்ல இது. ஒட்டுமொத்தமாக இப்போது தொழில்நுட்பத்திலும், பன்னாட்டு நிறுவனங்களின் கொள்கையிலும் மாற்றம் நடந்துவருகிறது. 50 சதவீதத்தினருக்கும் அதிகமானோருக்குப் புதிய பயிற்சி கொடுத்தால் மட்டுமே புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப செயல்பட முடியும் என்றால் அந்தப் பயிற்சியைத் தருவது யாருடைய பொறுப்பு? விப்ரோ, இன்ஃபோசிஸ் தங்களுடைய ஊழியர்களுக்கு மாற்றுப் பயிற்சிகள் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளன. ஆனால் அதைக் கண்காணிப்பது யார்? திறமையானவர்களுக்கு முதலிடம் என இந்த நிறுவனங்கள் சொல்கின்றன.

ஆனால், அதை நிர்ணயிப்பது எப்படி? இன்றும் வெறும் 6,000 ரூபாய் சம்பளத்திலேயே கடைநிலையில் வேலைபார்க்கும் ஐ.டி. ஊழியர்கள் பலர் இருக்கிறார்கள். ஆக, இவை அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தும் குழுவை அரசு உடனடியாக நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கிறோம். சட்ட நிபுணர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், நீதிபதிகள் உள்ளடக்கிய குழுவாக அது அமைக்கப்பட வேண்டும்” என்கிறார் முன்னாள் ஐ.டி. ஊழியரும் எஃப்.ஐ.டி.இ. அமைப்பின் தமிழ்நாடு பிரிவின் தலைவருமான பரிமளா.

பாதுகாக்கும் பொறுப்பு

இதற்கான மாற்று என்ன என்கிற கேள்விக்கு, ‘இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பினிஷிங் ஸ்கூல்’ என்கிற திட்டத்தை முன்வைக்கிறார் புதுச்சேரி தகவல் தொழில்நுட்ப அரசு செயலாளர் மணிகண்டன். “டிஜிட்டல் தொழில்நுட்பத்தை நோக்கி ஒட்டுமொத்த உலகமும் நகர்ந்துகொண்டிருக்கிறது. இன்று ஐ.டி. செக்யூரிட்டி, கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம், இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் போன்ற மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களில் வேலை வாய்ப்பு கள் ஏராளமாக உள்ளன. ஆகையால், நம்மைத் தகவமைத்துக் கொள்வது கட்டாயமாகிறது.

இதைச் சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது என்பதால்தான் புதுச்சேரியில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் ஐ.டி.எஃப்.எஸ். என்கிற புதிய தகவல் தொழில்நுட்பப் பயிற்சியை முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் மூலமாகவே அளித்துவருகிறோம். அதுமட்டுமல்லாமல் தற்போது பணியிலிருக்கும் ஐ.டி. ஊழியர்களின் வேலையைப் பாதுகாக்கப் பன்னாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். புதிய பயிற்சிகளுக்கான செலவை அரசாங்கமே ஏற்கும்” என்கிறார் மணிகண்டன்.

கணினி கைவரப்பெற்ற இந்தியர்களுக்கு மிகப் பெரிய தன்னம்பிக்கை அளித்த ஐ.டி. துறை இன்று அவர்களை நடுநடுங்கச் செய்துள்ளது. இதுவரை இந்திய இளைஞர்கள் பலரை வாழவைத்த அமெரிக்க நிறுவனங்கள் இன்று, ‘அமெரிக்கர்களையே வேலையில் அமர்த்துவோம் அமெரிக்கர்களின் தயாரிப்பையே வாங்குவோம்’ என்கிற ட்ரம்ப்பின் முழக்கத்தால் வேறு திசையில் திரும்பியுள்ளன. அதை விமர்சிக்கும் அதே நேரத்தில், ஓர் அரசின் பலம் என்ன என்பதை அதிலிருந்து உணர முடிகிறது. ஆக, இந்திய ஐ.டி. ஊழியர்களின் பணியைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய அரசு ஏற்று உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தருணம் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x