Last Updated : 26 Jun, 2017 11:17 AM

 

Published : 26 Jun 2017 11:17 AM
Last Updated : 26 Jun 2017 11:17 AM

`செல்’ வழி உணவுகள்

அலுவலகத்திலிருந்து காலதாமதமாக வீட்டுக்கு வந்த பிறகுதான் வீட்டில் உணவில்லை என்பது கிருஷ்ணாவுக்கு தெரிந்தது. பிறகு தன்னுடைய ஸ்மார்ட்போனை எடுத்து, ஸ்விக்கி செயலியில் தேடிப்பார்த்த போது சில உணவகங்கள் செயல்பட்டுக்கொண்டிருப்பது தெரியவந்தது. செயலியை எடுத்து பார்த்த போது வெஜ் பிரைட் ரைஸ் 23 நிமிடத்தில் கிடைக்கும் என காண்பித்தது. ஆர்டர் செய்த கிருஷ்ணாவுக்கு 20 நிமிடத்தில் வெஜ் பிரைட் ரைஸ் வீடு தேடி வந்தது. நம்முடைய உணவருந்தும் அனுபவத்தை இதுபோன்ற செயலிகள் புதுப்பித்து வருகின்றன. இந்த செயலிகள் மூலம் முன்பதிவு செய்வது நமக்கு வசதியாக மட்டுமல்லாமல், நம்முடைய பணத்தை சேமிக்கவும் உதவுகிறது.

ஃபுட் டெலிவரி ஆப்ஸ்?

உங்களது செல்போன் மூலம் உங்கள் வீட்டருகே இருக்கும் பல உணவகங்களில் இருந்து உங்களுக்கு தேவையான உணவினை குறிப்பிட்ட செயலி மூலம் முன்பதிவு செய்வதற்காக பல செயலிகள் உள்ளன. ஃபுட் பாண்டா, ஸ்விக்கி, ஜொமோடோ மற்றும் ஃபிரெஷ்மெனு ஆகிய பிரபலமான நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றன. அனைத்து வகையான உணவகங்களிலும் இந்த நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டிருக்கின்றன. உணவகங்களில் மாற்றப்படும் மெனுவை தொடர்ந்து இந்த நிறுவனங்கள் அப்டேட் செய்துவருகின்றன. சில நிறுவனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் உணவினை வழங்கமுடியவில்லை என்றால் அதற்குரிய இழப்பீட்டையும் வழங்குவதாக அறிவித்திருக்கின்றன. இந்த நிறுவனங்கள் இந்தியாவின் முக்கியமான நகரங்களில் இந்த சேவையை வழங்குகின்றன.

இதில் பாசாஸ் (Faasos) நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமானது. இந்த நிறுவனம் ஒவ்வொரு நகரத்திலும் பிரத்யேக கிச்சன் மூலம் உணவு தயாரித்து, அதனை செயலி மூலம் விற்று வருகிறது. இது தவிர டோமினோ’ஸ் பிஸா, கபே காபி டே உள்ளிட்ட சில நிறுவனங்களும் செயலி மூலம் தங்களுடைய உணவுகளை விற்று வருகின்றன.

சலுகைகள்

நீங்கள் உணவகங்களில் ஆர்டர் செய்தாலும், இதுபோன்ற செயலிகள் மூலமாக ஆர்டர் செய்தாலும் விலை ஒன்றுதான். ஆனால் இதுபோன்ற செயலிகள் கூடுதலாக வேறு சலுகைகள் கிடைக்கின்றன. சமயங்களில் செயலிகள் சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்யலாம். இதன் மூலம் உங்கள் செலவு குறையும். தவிர கபே காபி டே செயலியை தரவிறக்கம் செய்யும் பட்சத்தில் ரூ.100 மதிப்புள்ள காபி கொட்டைகள் இலவசமாக கிடைக்கும். தவிர 100 ரூபாய்க்கு வாங்கும்பட்சத்தில் 10 ரூபாய் மதிப்பிலான காபி கொட்டைகள் இலவசமாக கிடைக்கும். அதேபோல இந்த செயலியை மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யும்பட்சத்தில் 25 ரூபாய் மதிப்பிலான காபி கொட்டைகள் இலவசமாக கிடைக்கும்.

பிரெஷ் மெனு நிறுவனத்தில் செயலியை தரவிறக்கம் செய்து முதல் முறையாக உணவுகளை ஆர்டர் செய்யும் பட்சத்தில் 30% தள்ளுபடி கிடைக்கும். கடந்த நவம்பரில் பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட போது, பிரீசார்ஜ், பேடிஎம், மொபிக்விக் ஆகிய செயலிகள் மூலம் பணம் செலுத்தும் பட்சத்தில் 20-25% தள்ளுபடியை ஸ்விக்கி நிறுவனம் வழங்கியது.

ஒவ்வொரு நிறுவனங்களும் சலுகைகளுக்காக தனிப்பிரிவு வைத்துள்ளன. அப்போது 5-15% வரையிலான தள்ளுபடியில் சில உணவுகள் கிடைக்கும். தவிர கூபன்துனியா உள்ளிட்ட சில தளங்களில் உள்ள கூப்பன்களை வைத்தும் இந்த செயலிகளில் தள்ளுபடி விலையில் உணவுகளை வாங்கலாம்.

குறைகள்

இதுபோன்ற செயலிகளில் உணவுகளை வாங்கும்பட்சத்தில் சுமார் 30 ரூபாய் வரை டெலிவரி கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். குறைந்த தொகையில் உணவுகள் வாங்கும் பட்சத்தில், கிடைக்க கூடிய சலுகையை விட டெலிவரி கட்டணம் அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும். இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தி வந்தாலும், சமயங்களில் உணவு டெலிவரி செய்வதற்கு 2 மணி நேரம் கூட எடுத்துகொள்வதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்திருக்கின்றனர். காலதமாதமாக வருவது மட்டுமல்லாமல் உணவின் தரமும் சமயங்களில் பிரச்சினையாக உள்ளது. இந்த விஷயங்களில் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த நிறுவனங்கள் முயன்று வருகின்றன.

ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் இயங்குதளத்தில் இதுபோன்ற செய லிகள் உள்ளன. இந்த செயலிகளை தரவிறக்கம் செய்வதற்கு முன்பு, பயனாளர்கள் வழங்கி இருக்கும் ரேட்டிங்கை பார்த்து தரவிறக்கம் செய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x