சேதி தெரியுமா?- இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த ஒலிம்பிக் பெண்கள்

சேதி தெரியுமா?- இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த ஒலிம்பிக் பெண்கள்
Updated on
2 min read

ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆரம்பித்து 12 நாட்கள் வரை இந்தியாவுக்கு எந்தப் பதக்கமும் கிடைக்காத நிலையில் 13-ம் நாள் ஆகஸ்ட் 17-ம் தேதி, மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக், வெண்கலப் பதக்கம் வென்றார். மகளிருக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்த்த இந்தியாவின் பி.வி.சிந்து, ஆகஸ்ட் 19 அன்று நடந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினிடம் வலுவாக விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் மற்றும் மல்யுத்தப் போட்டிக்காக பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்கள் என்ற பெருமையையும் சிந்துவும் சாக்ஷியும் பெற்றுள்ளனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா சார்பாக வென்ற இரண்டு வீராங்கனைகளுக்கும் வாழ்த்து கூறியுள்ளார். ஹைதராபாத் பாட்மிண்டன் சங்கம் சார்பாக பி.வி.சிந்துவுக்கு பி.எம்.டபிள்யூ காரும், பல்வேறு தரப்பிலிருந்தும் சுமார் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கோல்ப் வீராங்கனை அதிதி அசோக்கும், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.

32 நாட்களில் 13 லட்சம் பெல்லட் குண்டுகள்

காஷ்மீரில் தொடர்ந்து நடந்துவரும் தெருப் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக 32 நாட்களில் 13 லட்சம் பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தியதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஜம்மு காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது. ஆகஸ்ட் 18 அன்று பெல்லட் துப்பாக்கிகளைத் தடைசெய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் தனது அறிக்கையை மத்திய ரிசர்வ் போலீஸ் படை தாக்கல் செய்தது. கலவரத் தடுப்புக்காக 2010-ல் பெல்லட் துப்பாக்கிகள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், பெல்லட் துப்பாக்கிகளைத் தடைசெய்தால், கட்டுக்கடங்காத சூழ்நிலையில் ரைஃபிள்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் எனவும், அதனால் கூடுதல் சேதம் உருவாகும் என்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

மன்னிப்பு கோரிய டொனால்ட் டிரம்ப்

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், தன்னுடையக் கருத்துகளுக்கு முதல்முறையாக மன்னிப்பு கேட்டார். ஆகஸ்ட் 18 அன்று வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ஷார்லட் நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது தனது வருத்தத்தைத் தெரிவித்தார். “வெவ்வேறு பிரச்சினைகள் பற்றிய சூடான விவாதங்களில் சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்க முடியாது. நான் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி யாரையும் தனிப்பட்ட வகையில் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் கோருகிறேன்” என்று தனது பேச்சில் குறிப்பிட்டார். சமீப வாரங்களில் நடத்தப்பட்ட பொதுக் கருத்துக்கணிப்புகளில் வெள்ளையரல்லாத மக்களும், சிறுபான்மையினரும் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான மனநிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் தேர்தல் உத்தியை மென்மையாக மாற்றியிருக்கிறார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

மோடிக்கு பாகிஸ்தான் சவால்

நரேந்திர மோடி, தனது சுதந்திர தினப் பேச்சில் பலுசிஸ்தான் விவகாரத்தைப் பேசியதால், ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்புவோம் என்று பாகிஸ்தான் அரசு எச்சரித்துள்ளது. ஆகஸ்ட் 18 அன்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நஃபீஸ் ஜகாரியா நரேந்திர மோடியின் பேச்சு பற்றிச் செய்தியாளர்களிடம் பேசும்போது இந்தியப் பிரதமர் அபாயக் கோட்டைத் தாண்டிப் பேசியதாகக் கூறினார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பலுசிஸ்தான் மக்கள் மீது பாகிஸ்தான் அரசு நடத்தும் ஒடுக்குமுறைகள் பற்றி பிரதமர் மோடி பேசிய பேச்சு, ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளுக்கு மாறானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in