என்னைச் செதுக்கிய மாணவர்கள்: செயல்முறை வாத்தியார் தீபன் சக்கரவர்த்தி!

என்னைச் செதுக்கிய மாணவர்கள்: செயல்முறை வாத்தியார் தீபன் சக்கரவர்த்தி!
Updated on
3 min read

வெளியிலிருந்து எந்த நிர்பந்தமும் இல்லாமல் தாங்களாகவே அறிவியல் சோதனைகளைச் செய்து பார்க்க மாணவர்களுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டால் மட்டுமே நமது அறிவியல் கல்வி முழுமை பெற முடியும்.

(தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் (2006) முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பேசியது)

புத்தகத்தில் இருப்பதை மாணவர்கள் அப்படியே மனப்பாடம் செய்து எழுதிக்கொடுப்பது ஒரு கல்விமுறை. பாடங்களை எடுத்து விளக்குவது மட்டுமே அதில் ஒரு ஆசிரியரின் வேலை. பாடப் புத்தகம் புனித நூல் ஆகிவிடும். கேள்வித்தாள் விஐபி ஆகிவிடுவார். பாடத்தையும் விடப் பாடத்துக்குப் பின்னால் உள்ள மதிப்பீட்டுப் பயிற்சிகள் விவிஐபி போல மிக முக்கியமானவை ஆகிவிடும்.

அந்தப் பயிற்சிப் பக்கங்களில் உள்ள கேள்விகள் அப்படியே தேர்வில் இடம் பெற வேண்டும். ஒட்டகத்துக்கு எத்தனை கால்கள் என்று கேட்கும் கேள்வியைப் பூனைக்கு எத்தனை கால்கள் என்று மாற்றிவிட்டால்கூடப் போச்சு. அது பாடத்தில் இல்லாத கேள்வி என்று ஆகிவிடும்.

இந்த மனப்பாட முறையின் பின்விளைவு களுக்கு மாற்றான கல்விமுறையைச் சிந்தித்தவர்கள் பலர். அவர்களில் ரஷ்யாவைச் சேர்ந்த லெவ் வயகாட்ஸ்கி, இவால்டு இல்யன்கோவ், சுவிட்சர்லாந்து கல்வி உளவியலாளர் ஜீன் பியாகட், அமெரிக்க உளவியலாளர்கள் ஜெரோம் புரூனர், பாண்டுரா ஆகியோர் சிலர்.

லெவ் வயகாட்ஸ்கியும் இவால்டு இல்யன்கோவ்வும் செயல் வழிகற்றல் (Activity Based Learning) முறையை முன்வைத்தனர். செயல்படுதலே கற்றல் (Doing is Learning), செய்து பார்த்துக் கற்றுக்கொள்வது (Learning through Doing) என்பது லெவ் வயகாட்ஸ்கி முன்வைத்த கோட்பாடு.

கற்றலைச் செயல்பாடுகளாக ஆக்கி அறிமுகம் செய்வது ஐந்து வயதில் தொடங்க வேண்டும். இந்தக் கல்விமுறை ஒவ்வொரு வகுப்பறையையும் செயல்படும் மையங்களாக மாற்றும். கல்வியின் அடிப்படைப் பிரிவுகளாக அறிவு, திறன், மனப்பான்மையை இவர்கள் அறிவித்தார்கள். இது கேஎஸ்ஏ வழிமுறை (Knowledge, Skill, Attidude= KSA) எனப்பட்டது. செயல்வழிக் கற்றல் முறையால் மட்டுமே குழந்தைகளால் தங்களை முழுமையாக வெளிப்படுத்த முடியும் என்று அவர்கள் நிரூபித்தனர்.

ஒவ்வொரு பாடவேளையையும் நோக்கம் (Purpose), தீவிர ஈடுபாடு (Reflective) சுயதேடல் (Self enquiry) பகுத்தறிதல் (Critical Examination) முடிவுக்கு வருதல் (Summarizing) என்று பிரித்தார் இல்யன்கோவ். பிற்காலத்தில் ஜெரோம் புரூனர், பாண்டுரா போன்றவர்கள் செயல்வழிக் கற்றலின் நுட்பங்களை மேலும் விரிவுபடுத்தினார்கள்.

தமிழகத்தின் செயல்வழி

தமிழகத்தில் ‘செயல்வழியாகக் கற்றுக்கொள்வது (Activity Based Learning)’ அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றன. இது ஏ.பி.எல். (ABL) என ‘செல்லமாக‘ அழைக்கப்படுகிறது. அது இன்று ஒன்பதாம் வகுப்பு வரை (RMSA) கற்றல் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மனப்பாடக் கல்வி முறைக்கான மாற்றாகப் பிரம்மாண்டமான எழுச்சியாக இது மாறியிருக்க வேண்டும், இதற்கு ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது இந்தக் கல்விமுறை நீர்த்துப்போய்க் கிடக்கிறது.

மாணவர்களுக்கான செயல்வழிக் கற்றலில் ‘பங்கேற்றலே மேன்மை (Engage to Excel)’ என்பது மையமான முழக்கம். அதைப் பற்றி நினைக்கும்போது எனக்கு தீபன் சக்கரவர்த்தி நினைவுக்கு வருவார்.

பெயர் சொல்லும் பிள்ளை

பல நாடுகளில் ஆசிரியர்களை மாணவர்கள் பெயர் சொல்லி அழைப்பதே வழக்கமாக உள்ளது. நம் நாட்டில் மட்டும்தான் இந்த சார்… சார்… கலாச்சாரம் எல்லாம். பள்ளிகளில் கணக்கு சார், அறிவியல் சார், அலுவலகங்களில் மேனேஜர் சார், மருத்துவமனையில் டாக்டர் சார் என்று இந்த சார் இல்லாத இடமில்லை.

அந்த காலத்திலேயே சார் என்று அழைக்காமல் என்னை ‘இரா’ என்று பெயர் சொல்லி அழைத்த ஒரே மாணவர் தீபன் சக்கரவர்த்தி. அது எனக்கு இனிக்கத்தான் செய்தது. அதற்கு ஒரு காரணம் இருந்தது.

ஆய்வுகளின் நாயகர்

தீபன் சக்கரவர்த்தி படித்த ஆறாம் வகுப்புக்கு அறிவியல், ஆங்கிலம் இரண்டு பாடங்களுக்கும் நானே ஆசிரியர். அந்த நாட்களில் என் வகுப்பறையை அவர் செயல்பாடுகளின் ஆய்வுக்கூடமாக ஆக்கினார். அறிவியல் சோதனைகள் நடத்தாத நாள் இல்லை.

ஆசிரியரான நானும் களத்தில் குதித்தேன். வகுப்பின் பெரும்பாலான மாணவர்களை வைத்துக்கொண்டு தினமும் வகுப்பறையில் ஒரு அதிசயத்தை நிகழ்த்துவார் தீபன். ஒருநாள் வகுப்பறைக்குள் இலைகளால் சுவரெங்கும் பறவைகள் வரும். அட்டைப் பெட்டியால் செய்யப்பட்ட ரயில் வரும். குடையில் ஓட்டைகள் போட்டு இருட்டறை கோளரங்கம் தயாராகும். அதன்மூலம் இரவு வானம் வகுப்புக்குள் வரும். செயல்வழிக் கற்றல் நோக்கி அது பற்றி யாருமே சிந்திக்காத 20 ஆண்டுகளுக்கு முன்னே அதைச் செயல்படுத்தினார் அவர்.

அவரது பெருமையை அறிவிக்க ஒரு சம்பவமும் நடந்தது. எங்கள் பள்ளிக்கூடம் ஒரு பிரதான சாலையின் முனையில் இருந்தது. ஏதோ ஒரு வேதிப்பொருளை ஏற்றிவந்த டாங்கர் லாரி படார் என்ற சத்தத்தோடு டயர் வெடித்து பள்ளியின் வாசலில் நின்றுவிட்டது. லாரியிலிருந்து ஏதோ ஒருவித வெள்ளைப் புகை கசிந்தது.

நேரம் ஆக, ஆக இந்தப் புகையின் நெடி அதிகமானது. குமட்டல் உணர்வு பலருக்கு ஏற்பட்டது. அது விஷ வாயுவாக இருக்குமா என்ற சந்தேகமும் அச்சமும் வந்தது. பள்ளிக்கு விடுமுறை விட்டுவிடலாம் என்பது உள்ளிட்ட பல யோசனைகள் வந்தன. அந்தத் தொழிற்சாலைக்குப் போனார் விளையாட்டு ஆசிரியர்.

இந்த நேரத்தில் வந்தார் தீபன் சக்கரவர்த்தி. “மிஸ்டர் இரா, உங்களிடம் கர்சிப் இருந்தால் தாங்க” என்று வாங்கிக்கொண்டார். அதை வாங்கிக்கொண்டு வேதியியல் ஆய்வகத்துக்குப் போனார். அங்கே உள்ள குடுவையில் இருந்த திரவத்தில் நனைத்து எடுத்துக்கொண்டு ஓடி, ஒரு குச்சியை பயன்படுத்தி லாரியில் இருந்த ஓட்டையை என் கர்சீப்பால் அடைத்தார். புகை வருவதும் நின்றுபோனது. ‘‘இது அமோனியா வாயு. ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் தோய்த்து எடுத்த கர்சீப்பால் அடைத்தால், உள்ளே அமோனியம் குளோரைடு உப்பாய் மாறி ஓட்டையை அடைத்துவிடும் மிஸ்டர் இரா’’ என்று எல்லாரும் ஆச்சரியப்படும் வண்ணம் விளக்கமும் அளித்தார். அந்த நேரத்தில் தொழிற்சாலை நிபுணர்கள் ஒரு வழியாக வந்துசேர்ந்தனர். நடந்ததை நம்ப முடியாமல் பார்த்து நின்றனர்.

செயல்வழிக் கற்றல் மட்டுமே கல்வியை முழுமை அடையச் செய்யும். அன்றாட வாழ்வுக்குக் கல்வியைப் பயன்பட வைக்கும் எனக்கு புரிய வைத்தார் தீபன் சக்கரவர்த்தி. கடைசியாக நான் அவரைச் சந்தித்தபோது கனடா நாட்டு பல்கலைக்கழகம் ஒன்றில் கடலில் உணவுப் பயிர்களை விளைவிப்பது குறித்த தனது ஆய்வின் இறுதிப் பணியில் இருந்தார்.

தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in