Published : 10 Aug 2016 10:27 AM
Last Updated : 10 Aug 2016 10:27 AM

சினிமா எடுத்துப் பார் 70: பஞ்சு அருணாசலம்- எல்லாமுமாக வாழ்ந்தவர்!

சம்பள உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளோடு ஸ்டுடியோ முன்பு மூன்று மாதங்களாக ஸ்டி ரைக் நடத்திய தொழிலாளர்கள், எங்கள் வேண்டுகோளின்படி ஏவி.எம். செட்டியா ரைப் பார்க்க அவர் வீட்டு வாச­லில் வந்து நின்றனர். அப்போது அங்கே கூடியிருந்த தொழிலாளர்கள் செட்டியார் காலில் விழுந்து, ‘‘எங்களை மன்னிச் சுடுங்க அப்பச்சி. முதல்ல ஸ்டுடியோ வைத் திறங்க. நாங்க ஒழுங்கா வேலை பார்க்குறோம்!’’ என்றார்கள். அப்போது ஏவி.எம் செட்டியார் அவர்கள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

தன் கண்களைத் துடைத்துக்கொண்டு, ‘‘எழுந்திருக்கப்பா, இனிமேல் யார் சொல்றதையும் கேட்காதீங்க. நம்ம ரெண்டு பேருக்கும் சம்பந்தப் பட்ட ஒரு குழுவை அமைப் போம். உங்களுக்கு என்ன பிரச் சினைன்னாலும் அந்தக் குழுவிடம் சொல்லுங்க. எந்தப் பிரச்சினைன்னாலும் உடனடியாத் தீர்வு காண்போம்!’’ என்றார். அவர் சொன்னதுபோலவே ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் நானும் இருந்தேன். ஒருநாள் தொழிலாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, ‘‘தொழிலாளர்களுக்கு என்ன தேவையோ அதை நிறுவனம் நிறைவேற்றிக் கொடுக்கும். நாமும் அதை சரியாக உணர்ந்து உழைக்க வேண்டும்’’ என்று சொன்னேன். அதை எல்லோரும் புரிந்துகொண்டு வேலை பார்த்தனர். ஸ்டிரைக் நடந்தது என்ப தற்கு எந்தச் சுவடும் தெரியாத அளவுக்கு சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஏவி.எம். ஸ்டு டியோ இயல்பு நிலைக்கு மாறியது.

இந்த நிகழ்ச்சியை மனதில் வைத்துக் கொண்டுதான் ‘நல்ல வனுக்கு நல்லவன்’ படத்தில் தொழிலாளர் கள் வெள்ளைக் கொடி பிடித்துக் கொண்டே ஸ்டி ரைக் நடத்தும் காட் சியை வைத்தோம். அந்தக் காட்சி பெரிய அளவில் பேசப்பட்டது.

‘நல்லவனுக்கு நல்ல வன்’ படத்துக்கு பலம் ரஜினி, ராதிகா காம் பினேஷன். இருவரும் ‘போக்கிரி ராஜா’ படத்தில் இணைந்து நடித்து பெரிய அளவில் பெயர் வாங்கியிருந்தார்கள். இந்தப் படத்தில் பணக்காரராக ரஜினி எப்படி பிரமாதப் படுத்தினாரோ, அதேபோல அவர் மனைவியாக அசத்தியிருப்பார், ராதிகா. ஒரு தம்பதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான நடிப்பை இருவரும் வெளிப்படுத்தினார்கள்.

மகள் துளசி, காதலிக்கிற விஷயம் அப்பா ரஜினிக்குத் தெரியும். ராதிகா எவ்வளவு சொல்லியும், துளசி அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆனால், துளசியின் காதலை ரஜினி எப்போதும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். ஒரு கட்டத்தில் மகளின் காதல் விஷயத்தால் ரஜினி, ராதிகா இருவருக்கும் இடையே சண்டை வந்துவிடும். அந்தக் கட்டத்தில் ரஜினி மகளிடம், ‘‘ உன் காதலனை அழைத்து வா. நானும், உங்க அம்மாவும் நேர்ல பார்த்துடுறோம்!’’ என்பார். துளசி, தன் காதலனுடன் வீட்டுக்கு வருவார். அந்தக் காதலன் கார்த்திக். அவரைப் பார்த்ததும் ரஜினிக்கும், ராதிகாவுக்கும் பயங்கர அதிர்ச்சி. ரஜினி துளசியிடம், ‘‘அவன் கெட்டவன். இந்தக் காதல் வேண்டாம். உன்னோட வாழ்க்கை சரியா அமையாது’’ என்று சொல்லுவார். அதை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். கார்த்திக், ரஜினியை பழி வாங்க அவரது மகளை காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பார். இதெல்லாம் துளசிக்குத் தெரியாது.

திடீரென ஒருநாள் துளசி, அப்பா ரஜினி, அம்மா ராதிகாவிடம் வந்து, ‘‘நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறோம். உங்ககிட்ட அனுமதி வாங்க வரலை. கல்யாணம் நடக்குற விஷ யத்தைச் சொல்றதுக்காக வந்தேன்!’’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். ‘என்ன இருந்தாலும் மகளாச்சே’ என்று ராதிகாவை ரஜினி அழைத்துக்கொண்டு மகளின் திருமணத்துக்குச் செல்வார். ஆனால், கார்த்திக் அவர்களை அவ மானப்படுத்தி விரட்டி அடிப்பார். மனம் ஒடிந்து இருவரும் அந்த இடத்தைவிட்டு வெளியேறுவார்கள். அந்த சூழலுக்கு ஏற்றபடி கவிஞர் நா.காமராசன், ‘‘சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது’ என்ற பாடலை எழுதியிருப்பார். அதில் ரஜினி, ராதிகா நடிப்பு எல்லோர் மனதை யும் தொட்டது.

மகளின் திருமணத்துக்குப் பிறகு ராதிகா மிகவும் வேதனையோடு இருந் தார். ரஜினி அவரை தேற்ற எவ்வளவோ முயற்சிப்பார். அதில் இருந்து அவரால் மீண்டு வரவே முடியாது. அந்த சோகத்திலேயே மனைவி ராதிகா இறந்துவிடுவார். அந்த சோகமான சூழ்நிலையில் மீண்டும் ‘உன்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே’ என்ற பாடலை ஒலிக்கச் செய்தோம். ரஜினியின் சோக நடிப்பு உள்ளத்தைத் தொட்டது. எப்போதுமே மகிழ்ச்சியான சூழலில் இடம்பெற்றப் பாடலை, பின்னால் சோகமான பாடலாகப் பயன்படுத்தும்போது அது அழுத்தமாக மனதில் பதியும்.

அந்தப் படத்தில் இடம்பெற்ற இந்த சோக காட்சியை வாசகர்களுக்காக எழுதிக்கொண்டிருக்கும்போது என் வாழ்க்கையில் மிகப் பெரிய சோக நிகழ்ச்சி நடந்துவிட்டது. ஆம்! எங்கள் குழுவில் முக்கியமானவரான ‘பஞ்சு அருணாசலம் அவர்கள் காலமாகி விட்டார்’ என்ற செய்திதான் அது.

நானும், பஞ்சு அருணாசலம் அவர் களும் காரைக்குடியைச் சேர்ந்தவர்கள். உறவினர்கள். கவியரசு கண்ணதாசன் அவர்களின் அண்ணன் கண்ணப்பன் அவர்களின் மகன்தான் பஞ்சு அருணா சலம். நானும் அவரும் ஒரே கால கட்டத்தில் சென்னைக்கு வந்தோம். கவியரசரின் ’தென்றல்’ இதழில் நான் பணியாற்ற, கவியரசரின் நம்பிக்கைக்கு உகந்த உதவியாளராக பஞ்சு அருணாசலம் பணியாற்றினார்கள். எங்கள் இருவரையும் கவியரசர், ‘தம்பி.. தம்பி’ என்று அழைப்பார்கள். தம்பிகள் இருவரும் சினிமாவில் இணைந்தோம். இணைப் பிரியா கலைஞர்களானோம். நான் இயக்கிய 15 படங்களுக்கு மேல் பஞ்சு அவர்கள்தான் திரைக்கதை, வச னம் எழுதினார்.

‘மயங்குகிறாள் ஒரு மாது’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘துணிவே துணை’, ‘முரட்டுக்காளை’, ‘சகலகலா வல்லவன்’ போன்ற படங்கள் எல்லாம் அதற்கு உதாரணம். அதைப் போல் அவர் தயாரித்த ‘பிரியா’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’, குரு சிஷ்யன் போன்ற படங்களை நான் இயக்கினேன். இருவரின் கருத்துகளும் ஒருமித்து இருந்ததால் எங்களுக்குள் தகராறு என்ற பேச்சுக்கே இடமில்லை. ‘ஆனந்த விகடன்’ இதழில் அவர் எழுதுகிற ‘திரைத் தொண்டர்’ கட்டுரைகளில் அது புலப்படும்.

அவருடைய மனைவி மீனா அவர்களின் சமையலையும் விருந்தோம் பல் பண்பையும் சொல்லி முடியாது. அவ ருடைய மகன்கள் சண்முகம், பஞ்சு சுப்பு, மகள்கள் சித்ரா, கீதா அவ்வளவு பேரும் எல்லோரிடத்தும் பாசம் காட்டுபவர்கள். அவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல் லப்போகிறோம் என்று தெரியவில்லை.

ரஜினி, கமல் ஆகியோருக்காக நிறைய திரைக்கதை எழுதியவர் மட்டுமல்ல; அவர்களிடம் உரிமை யோடு பல நல்ல விஷயங் களைச் சொல்லும் சிறந்த ஆலோ சகராகவும் வாழ்ந்தவர். பஞ்சு அவர்கள் காலமானது எங்களுக்கெல்லாம் பேரிழப்பாகும்.

அவர் அறிமுகப்படுத்திய எத்த னையோ நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் குறிப்பாக இசை ஞானி இளையராஜா போன்றவர்கள்… தங்கள் நன்றியைக் காட்ட பஞ்சு அவர்களுக்காக ’இரங்கட்பா’ பாடிக் கொண்டிருக்கிறார்கள். எஸ்பி.எம் யூனிட்டின் தூண் பஞ்சு அருணாசலம் அவர்கள். எங்களின் வெற்றியில் அவ ருக்கு பெரும்பங்கு உண்டு. எங்கள் யூனிட்டின் மொத்த குடும்பமும் அந்த நல்ல உள்ளத்துக்காக அழுது கொண்டிருக்கிறது.

பஞ்சு அருணாசலம் ஓர் எழுத்தாளர், கவிஞர், ரசிகனின் மனமறிந்த தயாரிப் பாளர். இப்படி எல்லாமுமாக வாழ்ந்த அவரை எப்படி மறக்கப் போகிறோம்? மறக்க மாட்டோம். அவர் எழுத்தும், நம்மோடு வாழ்ந்த வாழ்வும் என்றும் நம் மனதில் வாழும். கவியரசர் சொன்னதைப் போல் ‘பஞ்சு நிரந்தரமானவர்… அவ ருக்கு மரணமில்லை’ என்று நினைத் துக்கொள்வோம்!

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.

- இன்னும் படம் பார்ப்போம்… | படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x