Last Updated : 25 Jun, 2016 12:53 PM

 

Published : 25 Jun 2016 12:53 PM
Last Updated : 25 Jun 2016 12:53 PM

ராசியான மருந்து, ராசியான டாக்டர் - நிஜமா?

தலைவலி பற்றி நீங்கள் ஓர் ஆராய்ச்சி நடத்துவதாக வைத்துக்கொள்வோம். மெரினா கடற்கரையில் கூடி நிற்கும் கூட்டத்தல் உள்ளவர்களில், தலைவலி உள்ள 100 பேரைத் தெரிவு செய்கிறீர்கள். தலைவலிக்கு ஒரு அற்புதமான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அவர்களிடம் கூறுகிறீர்கள். உங்கள் மருந்தின் மகத்துவத்தை எடுத்துக் கூறி, இரண்டு மாத்திரைகளை உட்கொள்ள அவர்களை இணங்க வைக்கிறீர்கள்.

உண்மையில் நீங்கள் வழங்கும் வில்லைகளில் இருப்பது வெறும் சுண்ணாம்பு. ஆனால், இது அவர்களுக்குத் தெரியாது. இன்னும் 100 பேருக்குத் தலைவலியைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் ஆஸ்பிரின் மாத்திரைகளைக் கொடுக்கிறீர்கள். மேலும் 100 பேருக்கு எந்த மாத்திரையையும் வழங்கவில்லை. அரை மணி நேரத்துக்குப் பின், அந்த 300 பேரிடமும் அவர்களின் தலைவலி, இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்கிறீர்கள்.

முதல் 100 பேரில் 55 பேர் தலைவலி குறைந்ததாகக் கூறுகிறார்கள். நீங்கள் கொடுத்த அந்தப் புதிய மருந்தை எங்கே வாங்க முடியும் என்றும் கேட்கிறார்கள். அடுத்த100-வது பேர், அதாவது தலைவலியைக் குறைக்கும் ஆஸ்பிரின் மாத்திரைகளைப் பெற்றவர்களில் 90 பேர் தலைவலி குறைந்ததாகக் கூறுகிறார்கள். எந்த மருந்தும் பெறாத 100 பேரிலும், 20 பேர் தலைவலி குறைந்ததாகத் தெரிவிக்கிறார்கள். இதிலிருந்து தெரியவருவது என்ன?

ஆஸ்பிரின் மாத்திரைகளைப் பெற்றவர்களில் 90 சதவீதம் பேருக்குத் தலைவலி குறைந்ததில் வியப்பில்லை. ஏனென்றால், இது நாம் ஏற்கெனவே அறிந்த ஒன்று. ஆனால், எந்தத் தலைவலி மருந்தும் இடம்பெறாத சுண்ணாம்பு வில்லைகள், நூற்றில் 55 பேருக்கு வலியைக் குறைத்தது ஆச்சரியமான விஷயமல்லவா? மூன்றாவது பிரிவில் 20 சதவீதமானோருக்குத் தானாகவே தலைவலி குறைந்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.

மருந்துகளை ஆராயும்போது ஒப்பீட்டுக்காக இம்மாதிரி எந்த மருந்தும் உட்கொள்ளாத ஒரு பிரிவினரையும் பரிசீலனை செய்வது முக்கியம். ஏனென்றால், சிலருக்கு மருந்து இல்லாமலே குணமாகலாம். இப்பிரிவினரை ஆராய்ச்சிகளில் கட்டுப்படுத்தப்பட்ட குழு (control group) என்று கூறுகிறார்கள்.

உண்மையில், எந்தத் தலைவலி மருந்தும் இடம்பெறாத வெறும் சுண்ணாம்பு மூலமே தலைவலி குறைந்தவர்களின் சதவீதம் 35. ஆனால், அது 55% என்றுதானே பார்த்தோம். உண்மைதான், ஆனால் எந்த மருந்தும் உட்கொள்ளாமல் 20% பேருக்குக் குணமாகி இருக்கிறதே, அதையும் இங்கே கணக்கில் எடுக்க வேண்டாமா?

மாய்மாலம் இல்லை

எந்த இயக்கத் திறனும் இல்லாத வெற்று மருந்துகளால் கணிசமானோர் குணம் பெறுகிறார்கள் என்ற உண்மை, மருத்துவத்தில் வெகு காலமாக நன்கு அறியப்பட்டுவந்துள்ளது. இம்மாதிரியான ‘மருந்துகளை’ மருந்துக்குப் போலி (placebo) என்றும், இதனால் கிடைக்கப்பெறும் பலனை ‘மருந்துப்போலி விளைவு’ (placebo effect) என்றும் அழைக்கிறார்கள்.

இவை பொய் மருந்துகள் இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது, ஏமாற்றுவதற்காகக் கொடுக்கப்படுபவை அல்ல. மருந்துப் போலி விளைவு என்பது குருட்டாம்போக்காக ஏற்படும் ஒரு தாக்கமும் அல்ல. அது, மோசடியோ தந்திரமோ அல்ல. மாய்மாலமோ ஏமாற்றுதலோகூடக் கிடையாது. மாறாக, அதனால் ஏற்படும் தாக்கங்கள் மூளையில் பல வேதியல் மாற்றங்களை உருவாக்குகின்றன என்பதை ஸ்கேன் போன்ற நவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் அறிய முடிகிறது.

ஒற்றைத் தலைவலி (migraine) உள்ளவர்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சி சுவாரசியமானது. இந்த ஆய்வில் ஒற்றைத் தலைவலி உள்ள ஒரு கூட்டத்துக்குப் பிளாசீபோ என்று பெயரிடப்பட்ட உண்மை மருந்தும், இன்னொரு கூட்டத்துக்கு உண்மையான மருந்தின் பெயர் எழுதப்பட்டிருந்த பிளாசீபோவும் கொடுக்கப்பட்டது. இந்த இரு குழுவிலும் சம அளவினர் தலைவலியிலிருந்து நிவாரணம் பெற்றனர்! (ஆனால், உண்மையான மருந்து அதன் உண்மையான பெயரோடு கொடுக்கப்பட்ட போது, மேலும் 50 சதவீதம் பேர் குணமடைந்தார்கள் என்பது முக்கியமானது).

மருந்துப்போலி விளைவு பற்றி மேலும் சில தகவல்கள்: ஊசி மூலம் கொடுக்கப்படும் மருந்துப்போலிகள், மாத்திரைகளைவிட அதிகத் திறன் கொண்டவையாக அமைகின்றன. ஒரு மாத்திரையைவிட இரண்டு மருந்துப்போலி மாத்திரைகள் கூடுதல் பலன் அளிக்கின்றன. உடல் வலிகள், மனச்சோர்வு, தூக்கமின்மை, பெருங்குடல் பதற்ற வயிற்றுப் போக்கு (irritable bowel syndrome) போன்ற நிலைகளில் குணம் பெறுவதில் மருந்துப்போலி விளைவுக்குப் பெரும் பங்கு உண்டு என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

போலி அறுவை சிகிச்சையும் மருந்துப்போலி விளைவும்

மருந்துப்போலி விளைவு, மருந்துகளால் மட்டுமே ஏற்படுவதில்லை. அறுவை சிகிச்சையினாலும் ஏற்படுவதுண்டு. போலி அறுவை சிகிச்சை, அதாவது ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்துத் தழும்பு ஏற்படும் வகையில் அறுவை செய்வதால், உண்மையில் சிகிச்சை ஏதும் இல்லாமலே சிலர் குணம் பெறுகிறார்கள்.

எலும்புமூட்டுவாதத்துக்காக (osteoarthritis) செய்யப்படும் மூட்டுச் சீரமைப்பு (arthroplasty) எனும் அறுவைச் சிகிச்சையால் உண்டாகும் பலன் உண்மையில், போலிமருந்து விளைவால்தான் ஏற்படுகிறது, அறுவை சிகிச்சையினால் அல்ல என்பதைச் சமீபத்திய ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன. இதனால், எலும்பு அறுவை மருத்துவர்களுக்குத் தங்கச் சுரங்கமாக இருந்துவந்த இந்த அறுவைச் சிகிச்சை தேவையற்ற ஒன்று என்று இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மருந்துப்போலி விளைவு உண்டாவதற்கு ஒருவர் நோய் உள்ளவராக இருக்க வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை. மது, தூக்க மாத்திரை போன்றவை ஒருவர் எதிர்பார்க்கும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். கலப்படம் செய்யப்பட்ட மதுபானங்களால் நுகர்வோர் போதை அடைவதும் இந்த மருந்துப்போலி விளைவினால்தான்! மருந்துப்போலி விளைவின் மறுபக்கமாக எந்த மருந்தை உட்கொண்டாலும் சிலருக்குத் தலைச்சுற்று, தலைவலி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுவது உண்டு. இது நொசீபோ தாக்கம் (nocebo effect) என்று அறியப்படுகிறது.

மருந்துப்போலி விளைவு ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் இன்னும் சரியாக அறியப்படவில்லை. மருந்துப்போலி விளைவு நம் மனதின் விசித்திரங்களில் ஒன்று. உளவியல்ரீதியில் பார்த்தால், நாம் எதை எதிர்பார்க்கிறோமோ, அது நடந்துவிடுகிறது. இதை எதிர்பார்ப்பு விளைவு (expectancy effect) என்று அழைப்பார்கள். மனித நம்பிக்கையானது அத்துணை ஆற்றல் வாய்ந்தது.

மருந்தின் உண்மையான தாக்கத்தை அதிகரிக்க, மருந்துப்போலி விளைவை மருத்துவர்கள் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே உள்ள இணக்கமான உறவு, பிணியுற்றவர் அவர் மேல் கொண்டுள்ள நம்பிக்கை போன்ற பல காரணிகள் மருந்துப்போலி விளைவைக் கூடுதலாக உருவாக்கக் காரணமாக இருக்கலாம். நாம் கூறும் மருத்துவரின் ‘கைராசி' என்பதும், மருந்துப்போலி விளைவுதானோ?

ஊசி மூலம் கொடுக்கப்படும் மருந்துப்போலிகள், மாத்திரைகளைவிட அதிகத் திறன் கொண்டவையாக அமைகின்றன. ஒரு மாத்திரையைவிட இரண்டு மருந்துப்போலி மாத்திரைகள் கூடுதல் பலன் அளிக்கின்றன.

- டாக்டர்.எம்.எஸ்.தம்பிராஜா, கட்டுரையாளர், மனநல மருத்துவர் மற்றும் முன்னாள் பேராசிரியர்

தொடர்புக்கு: > ibmaht@hotmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x