Last Updated : 28 Feb, 2017 10:50 AM

 

Published : 28 Feb 2017 10:50 AM
Last Updated : 28 Feb 2017 10:50 AM

சேதி தெரியுமா? - இயற்கை எரிவாயுத் திட்டத்துக்கு எதிர்ப்பு

ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் சில வருடங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட இரண்டாயிரம் அடிக்கு ஆழ்துளைக் கிணறு தோண்டி நிலத்தடியில் எரிபொருள் இருப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனை அடுத்து, இந்திய அளவில் இயற்கை எரிவாயு எடுக்க ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது. இத்திட்டத்துக்காக ஒப்பந்தம் மூலம் எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு தேர்வுசெய்தது. நெடுவாசல் உட்பட இந்தியா முழுவதும் 31 இடங்களில் இயற்கை எரிவாயு எடுக்க அந்நிறுவனங்களுக்குப் பிப்ரவரி 15 அன்று ஒப்புதல் அளித்தது. ஆனால் இயற்கை எரிவாயு எடுப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இயற்கை ஆர்வலர்களால் நெடுவாசலில் பதாகைகள் வைக்கப்பட்டன, துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. இத்திட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டுமென நெடுவாசல் மக்கள் பிப்ரவரி 16 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுத்த தினம் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் புதுக்கோட்டை ஆட்சியரைச் சந்தித்துத் திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி மனு அளித்தனர். மேலும் 26 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்குவோம் என உரிமை மீட்புக் குழு அறிவித்தது. “ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் கிட்டத்தட்ட 5 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். நிலத்தடி நீரைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும். ஆகையால் இத்திட்டத்தை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம்” என அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் கே. வரதராஜன் 24 பிப்ரவரி அன்று பேட்டி அளித்தார். நெடுவாசலில் மட்டுமல்லாமல் கீரமங்கலம், வடகாடு, வாணக்கன் காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களை இயற்கை ஆர்வலர்களும் பல்வேறு கட்சியினரும் சந்தித்து இத்திட்த்தை அமல்படுத்துவது குறித்து அவர்களுடைய கருத்தைக் கேட்டுவருகிறார்கள்.



சோயாபீனிலிருந்து கிராஃபீம்

உலகின் மிக உறுதியானதும் மெல்லியதுமான பொருளான கிராஃபீம் (grapheme) சோயாபீனிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிலுள்ள காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆராய்ச்சி அமைப்பை (Commonwealth Scientific and Industrial Research Organisation- CSIRO) சேர்ந்த விஞ்ஞானிகள் இதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் சோயாபீனிலிருந்து தரமான கிராஃபீம் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சோயாபீனிலிருந்து கிராஃபீம் பொருளை உருவாக்கக் கிராஃப்ஏர் (GraphAir) என்னும் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் ஒரே செயல்முறையில் சோயாபீனிலிருந்து கிராஃபீன் எடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர். கார்ஃபீனிலிருந்து உருவான இந்தப் பொருள், அணுவைப் போன்ற தோற்றம் கொண்டது. இது மிகச் சிறந்த மின் கடத்தி. அதனால் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் மிக நுண்ணிய மின்னணுவியல் சாதனங்களில் கடத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.



ரூ. 250 கோடியில் செயற்கை மழை

2017-ம் ஆண்டுக்கான செயற்கை மழைக்காக ரூ. 250 கோடிக்கு மகாராஷ்டிரா அரசு அனுமதி அளித்துள்ளது. மகாராஷ்டிராவின் மழை மறைவுப் பிரதேசமான சோலாப்பூர் மாவட்டத்தில் இந்தச் செயற்கை மழை பெய்யவைக்கப்படவுள்ளது. இந்திய வான இயல் ஆய்வு நிறுவனம் (Indian Institute of Tropical Meteorology) இந்தத் திட்டத்தை ஒருங்கிணைக்கவுள்ளது. இதில் 100 மேகங்கள் ரடார் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றின் மீது சில்வர் அயோடைட் தெளிக்கப்படும். கூடவே உலர் பனிக்கட்டியும் தெளிக்கப்படும். இதற்கு ஜெட் ராக்கெட் பயன்படுத்தப்படும். உலகின் முதல் செயற்கை மழை 1946-ம் ஆண்டு அமெரிக்காவில் நியூயார்க்கில் பெய்விக்கப்பட்டது. இந்தியாவில் முதல் செயற்கை மழை 1983-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பெய்விக்கப்பட்டது.



புதிய கண்டம் கண்டுபிடிப்பு

தென் மேற்கு பசிபிக் கடற்பகுதியில் ஜிலாண்டியா என்னும் கண்டம் புதையுண்டிருப்பதைப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியா கண்டத்தில் மூன்றில் இரு பங்கு பரப்பளவு கொண்டது இது. 45 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் கண்டத்தில் 94 சதவீதம் கடலுக்கு அடியில் புதைந்துள்ளது. அவற்றில் மீதம் கடல் மட்டத்துக்கு மேல் காணப்படும் பகுதிகள்தான் நியூசிலாந்தும் நியூ காலண்டோனியா தீவும். ஆஸ்திரேலியாவும் இந்தக் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. 8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கண்டம் ஆஸ்திரேலியாவிலிருந்து பிரிந்தது. இந்த இரண்டு கண்டமும் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்ட்டிகாவில் இருந்து பிரிந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஜியோலாஜிக்கல் சொசைட்டி ஆஃப் அமெரிக்கா (Geological Society of America) இந்தக் கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளது.



ஜி.எஸ்.டி. வரி: இழப்பீட்டுக்கு அனுமதி

சரக்கு மற்றும் சேவை வரியை (Goods and Service Tax - GST) அமல்படுத்துவதன் மூலம் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்வதற்கான சட்டத்துக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் உதய்ப்பூரில் நடந்த இந்தக் கூட்டத்தில் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஜி.எஸ்.டி. கவுன்சில் இந்திய அரசியல் சாசனச் சட்டப் பிரிவு 279A-ன்படி உருவாக்கப்பட்டது. இந்தச் சட்ட வரைவு மார்ச் 9-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது.



செவ்வாயில் முதல் நகரம்

ஐக்கிய அரசு நாடுகள் செவ்வாய் கிரகத்தில் நகரம் ஒன்றை இன்னும் 100 ஆண்டுகளில் உருவாக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டின் துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் ஆகியோர் வெளியிட்டனர். இதற்கான ஆய்வுகள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்துக்காகச் செயற்கைக்கோள் ஒன்றை (Hope) 2020-ம் ஆண்டு ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூலம் ஐக்கிய அரபு நாடுகள் விண்ணில் செலுத்தவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x