Published : 17 Mar 2014 10:00 AM
Last Updated : 17 Mar 2014 10:00 AM

மார்ச் 21-ல் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு- முதல் முறையாக ஆன்லைனில் விடைத்தாள்கள் வெளியீடு

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு மார்ச் 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது. முதல்முறையாக, தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்ட பள்ளிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சி-டெட் என்று அழைக்கப்படும் இந்த தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தி வருகிறது.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி நடத்தப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வை தமிழகம் உள்பட நாடு முழுவதும் 8 லட்சத்து 26 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் எழுதினர். இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கபட்டபடி தேர்வு முடிவு வருகிற 21-ம்

தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவை www.ctet.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம்.

முதல்முறையாக ஆன்லைனில் விடைத்தாள்

சி-டெட் தேர்வில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யவும், தேர்வின் மீது மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்களை (ஓ.எம்.ஆர். ஷீட்) முதல்முறையாக சி.பி.எஸ்.இ. ஆன்லைனில் வெளியிட்டு இருக்கிறது.

தேர்வு ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதியை மேற்கண்ட இணையதளத்தில் குறிப்பிட்டு, ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதில் உள்ள விவரங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக இன்று (திங்கள்கிழமை) மாலை 5 மணிக்குள் ctet@cbse.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு தகவல் தெரிவித்துவிட வேண்டும். அதேபோல், கீ ஆன்சரில் ஏதேனும் தவறு இருந்தால் அதுகுறித்து உரிய ஆவணங்களுடன் 19-ம் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் இ-மெயில் மூலம் தகவல் அனுப்பிட வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x