Last Updated : 01 Nov, 2014 01:44 PM

 

Published : 01 Nov 2014 01:44 PM
Last Updated : 01 Nov 2014 01:44 PM

குப்பையால் வீடு செய்வோம்

உங்கள் வீட்டை நீங்களே வடிவமைத்துப் புதுவிதமாகக் கட்டும் ஆசை உள்ளதா? அப்போது நீங்கள் முதலில் அணுக வேண்டியது தலைசிறந்த கட்டிடக்கலை நிபுணரையோ வெற்றிகரமான கட்டிடப் பொறியாளரையோ அல்ல. உங்கள் வீட்டின் அருகில் வாழும் சில சுற்றுச்சூழல் நண்பர்களைத்தான்.

பறவைகளும் பறக்கும் பூச்சிகளும்தான் அந்த நண்பர்கள். அவை நம்மைப் போல் செயற்கையான பொருள்களைக் கொண்டு தங்கள் கூடுகளைக் கட்டுவதில்லை. தங்களுக்கு அருகில் கிடைக்கும் எளிய பொருள்களைக் கொண்டுதான் கட்டுகின்றன. பெரும்பாலும் காய்ந்த மரக் குச்சிகள், இலை சருகுகள் கொண்டுதான் கூடு கட்டுகின்றன. தேனீ, தன் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகுச் சுரப்பியிலிருந்து சுரக்கும் மெழுகைக் கொண்டுதான் கூடு கட்டும்.

அதற்காக மனிதர்களுக்கு அத்தகைய திறன் கிடையாது என்று சொல்லிவிட முடியாது. ஏழை எளிய மக்கள் சினிமா போஸ்டர், பழைய மரப் பலகை, தென்னை ஓலை, தகரத் தாள், மரக் கிளை, ஃபிளக்ஸ் பேனர் போன்றவற்றைக் கொண்டு தங்கள் குடிசைகளை எழுப்புகிறார்கள். ஆனால் பெரிய குடியிருப்புகளை உருவாக்கும்போது இது போன்ற மாற்றுப்பயன்பாடு கொண்ட பல பொருட்களைப் பெருவாரியான கட்டிட்டக்கலை நிபுணர்களோ, பொறியாளர்களோ பயன்படுத்துவதில்லை.

மாற்றி யோசி

பாட்டில், பீங்கான், காகிதம் ஆகியவற்றின் கழிவுகளை நாம் என்ன செய்வோம். எதற்கும் பயன்படாத பொருள்கள் எனக் குப்பையில் போடுவோம். ஆனால் அந்தக் குப்பையை வைத்து வீடு கட்டியுள்ளனர். கட்டிடக்கலை நிபுணர் யத்தின் பாண்டியா இதற்கு ஒரு முன்மாதிரி. அகமதாபாத்தில் அவர் கட்டியிருக்கும் மானவ் சாதனா மையம் பிளாஸ்டிக் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள், பயன்படாத மரப்பலகை, விலை குறைந்த செங்கற்கள், உடைந்த பீங்கான் துண்டுகள், காகிதக் கூழ் எனப் பாதிக்குப் பாதி மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுகளைக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது.

வழக்கமான கட்டுமானப் பொருள்கள் அல்லாமல் இத்தகைய கழிவுப் பொருட்களைக் கொண்டு வீடு கட்டினால் உறுதியாக இருக்குமா? அழகாகக் காட்சி அளிக்குமா? மறுசுழற்சிக்கு எவ்வளவு செல வாகும்? இது போன்ற கேள்விகள் எழும். அத்தனை கேள்விகளுக்கும் நிறைவான பதிலளிக்கிறது மானவ் சாதனா மையம்.

கட்டுமான நுட்பம்

மானவ் சாதனா மையத்தின் சுவரில் சிமெண்ட் கலவையோடு ஃபிஜி ஆஷ் செங்கல், மாநகராட்சி கழிவுக் கூடக் கழிவுகள் கொண்டு செய்யப்பட்ட செங்கற்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட கண்ணாடி பாட்டில்கள், குப்பைகளும் சாம்பலும் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், சரக்கு பெட்டிகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மரப்பலகை போன்ற பல விதமான கழிவுப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், செங்கற்கள், கருங்கல் பலகை, களிமண் டைல்ஸ் போன்றவை தரையிலும் கூரையிலும் பதிக்கப்பட்டு அவை பார்ப்பதற்குப் புதுவிதமாகக் காட்சியளிக்கின்றன.

கதவிற்குப் பெரும்பாலும் காகிதக் கூழ் சேர்க்கப்பட்டிருக்கிறது. குளியலறை சன்னல் சட்டத்தில் சரக்கு கொண்டு செல்லும் மரப் பெட்டிகளின் மரப் பலகைகள் பதிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கட்டிடத்தில் இணைக்கப் பட்டிருக்கும் கழிவுப் பொருள்கள் அத்தனையும் சுற்றுச்சூழலின் நண்பர்களே, செயல் தரமிக்கவை, குறைந்த செலவில் உருமாற்றம் செய்யப்பட்டவை என ஆய்வுக் கூடத்தில் சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க மானவ் சாதனா கட்டிடம் பல விருதுகளையும் குவித்த பெருமையோடு முன்னுதாரணமாக நிமிர்ந்து நிற்கிறது.

தி இந்து (ஆங்கிலம்)

தமிழில்: ம. சுசித்ரா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x