Published : 18 Jan 2015 10:42 AM
Last Updated : 18 Jan 2015 10:42 AM

திரை விமர்சனம் - டார்லிங்

கோலிவுட்டை ஆட்டிப் படைத்துக் கொண் டிருக்கும் பேய்களின் வரிசையில் இந்த ஆண்டின் முதல் வரவு டார்லிங். அறிமுக இயக்குநர் சாம் ஆண்டனின் இயக்கத்தில் வெளியாகி இருக் கும் டார்லிங், டோலிவுட்டில் ஹிட்டான ‘பிரேம கதா சித்திரம்’ படத்தின் மறு ஆக்கம்.

தற்கொலை செய்துகொள்வதற்காகக் கடலோரப் பண்ணை வீட்டுக்கு நான்கு பேர் செல்கிறார்கள். ஆனால், அந்த வீட்டில் பேய் இருக்கிறது. காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் கதிர் (ஜி.வி.பிரகாஷ்), அவனைக் காப்பாற்றும் காதலியாக நிஷா (நிக்கி கல்ராணி), நண்பனாக குமார் (பாலசரவணன்), தற்கொலைத் திட்டத்தில் வழியில் இணைந்து கொள்ளும் அதிசயராஜ் (கருணாஸ்) என நான்கு பேரும் பண்ணை வீட்டில் இருக்கிறார்கள். அவர்களின் தற்கொலைத் திட்டம் என்ன ஆகிறது, அங்கேயிருக்கும் பேய் அவர்களை என்ன செய்கிறது என்பதுதான் ‘டார்லிங்’.

தன் முதல் படத்தை நகைச்சுவை த்ரில்லர் பாணியில் எடுத்திருக்கிறார் இயக்குநர் சாம் ஆண்டனி. முதல் பாதியில் வரும் நீண்ட ஃப்ளாஷ்பேக்குகள், தேவையில்லாத இடத்தில் வரும் பாடல்கள் எனத் திரைக்கதை படுமெதுவாக நகர்கிறது. வசனங் கள் சிரிக்க வைத்தாலும், சில இடத்தில் முகம் சுளிக்க வைக்கின்றன. நகைச்சுவை என்ற பெயரில் கதாநாயகி அணிந்திருக்கும் ஆடையை வைத்துக் கிண்டல் செய்யும் வசனங்கள் எந்த விதத்திலும் படத்துக்கு அழகு சேர்க்கவில்லை.

டார்லிங் பேய் பெரிதாக மிரட்டவில்லை என்பதுதான் உண்மை. பண்ணை வீடுகளில் நடக்கும் கொலைகளைப் பற்றி ஏதோ சொல்லப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை முதல் பாதி திரைக்கதை ஏமாற்றிவிடுகிறது. பேய் எப்போது வரும் என்பதை எல்லாக் காட்சிகளிலும் நன்றாக யூகிக்க முடிகிறது. அறிமுக நடிகர்களாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும், நிக்கி கல்ராணியும் தங்கள் பங்கை ஓரளவுக்கு சரியாகவே செய்திருக்கின்றனர். நகைச்சுவைக் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும், உடல் மொழியிலும் பிரகாஷ் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பாலசரவணன், கருணாஸ் கூட்டணி சிரிக்க வைக்கின்றனர்.

ஐந்து நிமிடங்கள் மட்டும் படத்தில் வந்தாலும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், கலையரசன் என இருவருமே கவனத்தை ஈர்க்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசையிலும், பாடல் களிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். ‘அன்பே, அன்பே’ பாடலின் இசையில் ஏற்கெனவே பரிச்சயமான தொனி வெளிப்பட்டாலும் ரசிக்க வைக்கிறது. கிருஷ்ணன் வசந்தின் கேமரா பண்ணை வீட்டை அலுப்பு ஏற்படாமல் சுற்றிக் காட்டுகிறது. ரூபனின் படத்தொகுப்பு படத்தின் இரண்டாம் பாதிக்கு வலு சேர்த்திருக்கிறது.

க்ளைமாக்ஸ் மட்டுமே பேய்ப் படத்துக்கான நியாயத்தைச் செய்திருக்கிறது. நகைச்சுவையும், ஓரளவேனும் சாத்தியப்பட்டிருக்கும் த்ரில் அம்சமும் படத்தைக் காப்பாற்றுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x