Published : 24 Nov 2013 12:00 AM
Last Updated : 24 Nov 2013 12:00 AM

அறிவிப்போடு நின்றுபோன சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு - மாற்றுத் திறனாளிகள் ஏமாற்றம்

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்து ஒன்றரை மாதங்களுக்குமேல் ஆகியும் அரசாணை வெளியிடப்படாததால் மாற்றுத் திறனாளிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அதாவது 150-க்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும்.

மதிப்பெண் சலுகை

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்த பிரிவினருக்கும் சலுகை அளிக்கவில்லை. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் உள்பட அனைத்து வகுப்பினருக்கும் தேர்ச்சி மதிப்பெண் ஒன்றுதான். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் தகுதியை 5 சதவீதம் வரை குறைக்கலாம் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) விதிமுறை கூறுகிறது. ஆனால், கல்வித்தரம் பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில்கொண்டு தமிழக அரசு யாருக்கும் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்கவில்லை.

சிறப்பு தகுதித் தேர்வு

அண்மையில் வெளியான ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவில் 6.5 லட்சம் பேரில் 27 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதற்கிடையே, ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணை குறைப்பது, 3 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அக்டோபர் 1-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் முக்கியமானது, மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்படும் என்பது. இந்தச் சிறப்புத் தேர்வுக்கு மாற்றுத் திறனாளிகளை தயார்படுத்தும் வகையில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் (டயட்) மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார்.

சிறப்பு தகுதித்தேர்வு குறித்து முதல்வர் அறிவித்து ஒன்றரை மாதங்கள் ஆகியும் இன்னும் அரசாணை வெளியிடப்படவில்லை. இதனால் மாற்றுத் திறனாளிகள் ஏமாற்றத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சிறப்புத் தகுதித்தேர்வு என்பதால் தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்படுமா அல்லது பொதுவான தகுதித்தேர்வை காட்டிலும் கேள்விகள் சற்று எளிதாக இருக்குமா என மாற்றுத் திறனாளிகள் யோசித்த வண்ணம் உள்ளனர். சிறப்புத் தகுதித்தேர்வு தொடர்பான அரசாணை வந்தால்தான் அவர்களின் குழப்பங்களுக்கு விடை கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x