Last Updated : 11 Dec, 2013 12:00 AM

 

Published : 11 Dec 2013 12:00 AM
Last Updated : 11 Dec 2013 12:00 AM

மதுரை: உடல் நலத்தில் அக்கறை காட்டாத ஆண்கள்

இலவச பரிசோதனை மையங்கள் இருந்தும் அவற்றைப் பயன்படுத்த ஆண்கள் போதிய ஆர்வம் காட்டுவதில்லை என மருத்துவத் துறை புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.

சுகாதாரச்சீர்கேடு, சுற்றுச்சூழல் பாதிப்பு, பருவநிலை மாற்றம், உடல்நலத்தில் அக்கறையின்மை போன்ற பல காரணங்களால் மனிதர்களுக்கு தொற்றும், தொற்றாத நோய்கள் ஏற்படுகின்றன.

ஆரம்ப கட்டத்திலேயே இவற்றைக் கண்டறிந்தால் நோய்களைக் குணப்படுத்திவிட முடியும். ஆனால் வறுமை, அலட்சியம், நேரமின்மை போன்ற காரணங்களால் பலர் அதற்கான பரிசோதனையை செய்துகொள்வதில்லை.

இவற்றைத் தவிர்ப்பதற்காக தமிழக அரசு சார்பில் தேர்வு செய்யப்பட்ட சில மருத்துவமனைகளில் தொற்றா நோய்களுக்கான இலவச பரிசோதனை மையம் சில மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. இதன்படி மதுரை மாநகரில் முனிச்சாலை, செல்லூர், கே.புதூர் ஆகிய இடங்களிலுள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகள், மேலவாசலிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், திரவியம்பிள்ளை மருந்தகம் ஆகிய இடங்களில் இந்தப் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் ஆண், பெண் என இருபாலருக்கும் ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி, கொலஸ்ட்ரால் அளவு, இசிஜி, சிறுநீரகம் தொடர்பான கிரியேட்டனின் சோதனைகள் போன்றவை இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய்க்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் மதுரையில் இந்த இலவச பரிசோதனைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக பெண்களைக் காட்டிலும் ஆண்கள் இந்த விஷயத்தில் மிகவும் மெத்தனமாக இருப்பதாக மருத்துவத் துறை புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது.

இதுபற்றி மாநகராட்சி நல அலுவலர் யசோதாவிடம் கேட்டபோது அவர் கூறியது:

‘இலவசமாக அளிக்கப்படும் இந்த பரிசோதனைகளை, உடல் நலம் கருதி அனைவரும் கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உடல் நலம் குறித்து பரிசோதனை செய்வதில் ஆண்களிடம் ஆர்வமின்மை நிலவுகிறது. பெண்களை அழைத்துவரும் ஆண்கள், பெண்களை பரிசோதனை மையத்துக்குள் அனுப்பி வைத்துவிட்டு வீணாக வெளியே காத்திருக்கின்றனர். அந்த நேரத்தில் அவர்களும்கூட, தங்களுக்கான பரிசோதனைகளை செய்து கொள்ளலாம்.

அதில் ஏதேனும் நோய் இருப்பது கண்டறியப்பட்டால் மருந்து, மாத்திரைகள் மற்றும் சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x