தேர்வு இனிது: படித்த பாடங்களைத் திரும்பத் திரும்ப எழுதிப் பாருங்கள்! - கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிகள் அறிவுரை

தேர்வு இனிது: படித்த பாடங்களைத் திரும்பத் திரும்ப எழுதிப் பாருங்கள்! - கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிகள் அறிவுரை
Updated on
3 min read

பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது பிளஸ் 2 பொதுத்தேர்வுதான். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வினை ஏறத்தாழ 9 லட்சம் மாணவ-மாணவிகள் எதிர்கொள்ள இருக்கிறார்கள். ஏற்கெனவே, அவர்கள் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வைக் கடந்து வந்தவர்கள் என்றாலும் பொதுத்தேர்வு என்றதும் அவர்களுக்குப் பயம் ஏற்படுவது இயல்புதான்.

இந்நிலையில், மாணவர்களின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தக்கூடிய பிளஸ் 2 தேர்வுக்கு வழிகாட்டும் வண்ணம் ‘தி இந்து’ தமிழ் நாளிதழும், சென்னை எஸ்கேஆர் பொறியியல் கல்லூரியும் இணைந்து ‘இனிது இனிது தேர்வு இனிது’ என்ற பிரத்யேக நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. விழுப்புரத்தில் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி, திருவண்ணாமலை, வேலூர், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களைத் தொடர்ந்து நிறைவாக திருவள்ளூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இனிதே நடந்து முடிந்தது.

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ மூங்கிலான் உடையார் மஹாலில் காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி டி.ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். பாட நிபுணர்கள் வழங்கும் அரிய ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கருத்தோடு கேட்டுக்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், உயர்கல்விக்கு அடித்தளம் பிளஸ்-2 தேர்வுதான் என்பதையும் அழுத்தமாக வலியுறுத்தினார்.

கல்வியாளரும், தன்னம்பிக்கைப் பேச்சாளருமான சீமான், “இளம் பருவம் அழகான பருவம். அந்தப் பருவத்தில் அழகோடு அறிவையும் ஏற்றி வையுங்கள்” என்ற அறிவுரையோடு பேச்சைத் தொடங்கினார்.

தூக்கத்தைக் குறையுங்கள்

“எதிர்காலத்தில் என்னவாகப் போகிறோம் என்பதைத் தீர்மானிப்பது பிளஸ் 2 பொதுத்தேர்வுதான்” என்று குறிப்பிட்ட அவர், “மாணவர்களாகிய நீங்கள் பிளஸ் 2 தேர்வில் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்தால் இந்த அகிலமே உங்களை வணங்கும்” என்றார். படித்தால் பணம் உங்களைத் தேடித் தேடி வரும் என்று அவர் குறிப்பிட்டபோது மாணவர்களின் கரவோலி அரங்கை அதிரச் செய்தது. மனதை ஒருமுகப்படுத்த முடிந்தால் மாணவர்கள் மிக எளிதாக நல்ல மதிப்பெண் பெறலாம் என்ற சீமான், பல வாழ்வியல் உண்மைகளையும் எடுத்துரைத்தார்.

“தூக்கத்தைக் குறையுங்கள். அதிகாலை 3 மணிக்கு எழுந்தால் முனிவன், 4 மணிக்கு எழுந்தால் எல்லாம் தெரிந்தவன், 5 மணிக்கு எழுந்தால் அறிவாளி, 6 மணிக்கு எழுந்தால் பிழைக்கத் தெரிந்தவன்” என்ற அவரது கருத்து, மாணவர்களைச் சிரிக்கச் செய்ததுடன் சிந்திக்கவும் வைத்தது.

“தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கும் முன்பும், தூங்கி எழுந்த பின் 2 மணி நேரத்துக்கும் மூளை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். அந்த நேரத்தில் படித்தால் படிக்கும், பாடங்கள் அப்படியே மனதில் பதியும்” என்ற மருத்துவ, உளவியல் ரீதியிலான அறிவுரைகளையும் வழங்கினார் சீமான். சினிமா, டிவி, செல்போன்-இந்த மூன்றையும் தியாகம் செய்யுங்கள் என்ற வேண்டுகோளுடன் தனது உரையை நிறைவு செய்தார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திருவள்ளூர் கலால் உதவி ஆணையர் வி.முத்துசாமி கடினமாக உழைத்தால் வெற்றி உறுதி என்று தனது பேச்சைத் தொடங்கினார். வெறுமனே டாக்டர், இன்ஜினியர் ஆவது மட்டுமே சாதனை அல்ல, அதையும் தாண்டி நிறையப் படிப்புகள் உள்ளன என்று குறிப்பிட்டார்.

“முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம், இதில் சந்தேகமே இல்லை” என்று மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையூட்டினார்.

செவிக்கு உணவு

பிளஸ் 2 தேர்வில் கேட்கப்படும் வினாத்தாள் முறை, தேர்வில் 200-க்கு 200 மதிப்பெண் பெறுவதற்கான உத்திகள் குறித்து உயிரியல் ஆசிரியர் என்.குமாரவேல், இயற்பியல் ஆசிரியர் ஏ.திருமாறன், வேதியியல் பேராசிரியர் ஏ.பரீத் அஸ்லாம், கணித ஆசிரியர் ஆர்.மணிமாறன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். எஸ்கேஆர் பொறியியல் கல்லூரியின் தலைவர் கே.ராமதாஸ், இயக்குநர் சுகந்தி ராமதாஸ், தகவல் தொழில்நுட்பத்துறையின் தலைவர் பேராசிரியர் பி.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, கல்லூரியின் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறையின் தலைவரான பேராசிரியர் ஆர்.சங்கர் தங்கள் கல்லூரியில் அளிக்கப்படும் பல்வேறு சிறப்புப் பயிற்சிகளையும், வசதிகளையும் எடுத்துரைத்தார். தகவல்தொழில்நுட்பத்துறை உதவிப் பேராசிரியை பூரணி, எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்டரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை உதவிப் பேராசிரியை அர்ச்சனா ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். கல்லூரியின் செயலாளர் எஸ்.சுரேஷ்பாபு நன்றி நவில விழா இனிதே நிறைவுற்றது.

விழா தொடங்கியது முதல் மாணவ-மாணவிகளிடையே காணப்பட்ட உற்சாகம் நிகழ்ச்சி நிறைவடையும் நேரம் வரை குறையவே இல்லை. அனைவரும் ஒவ்வொரு பாட ஆசிரியர்கள் வழங்கிய ஆலோசனைகளைக் கவனத்தோடு குறிப்பெடுத்துக் கொண்டதைப் பார்க்க முடிந்தது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பிளஸ் 2 கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாட ஃபார்முலா புத்தகம், முக்கிய வினாக்களை உள்ளடக்கிய கையேடு ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன‌. செவிக்கு மட்டுமின்றி வயிற்றுக்கும் உணவும் வழங்கப்பட்டது. இந்த வழிகாட்டி நிகழ்ச்சியை ‘தி இந்து’ தமிழ் நாளிதழ், எஸ்கேஆர் பொறியியல் கல்லூரியுடன் ‘சென்னை அகாடமி ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்ட் டிசைன்’ நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தின.

கடந்த ஆண்டு பிளஸ் -2 தேர்வில் சாதனை படைத்த மாணவிகள் பவித்ரா, சங்கீதா, மாரியம்மாள் ஆகியோர் விழாவில் கவுரவிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் தேர்வு அனுபவங்களை மாணவ-மாணவிகளிடம் பகிர்ந்து கொண்டனர்.

பவித்ரா (மாநில அளவில் 2-ம் இடம், மாவட்ட அளவில் முதலிடம்)

> படித்த பாடங்களைத் திரும்பத் திரும்ப எழுதிப் பாருங்கள். படங்கள், சூத்திரங்கள், சமன்பாடுகளை எழுதி எழுதிப் பாருங்கள்

> உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவை. தேர்வுக்கு முந்தைய நாள் இரவு நீண்ட நேரம் விழித்திருந்து படிக்காதீர்கள்

> தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு படிக்க வேண்டாம்

> ஒரு தேர்வு முடிந்ததும் அந்தத் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் குறித்து நண்பர்களிடம் விவாதிக்க வேண்டாம்

> வினாத்தாள் வாங்கியதும் பொறுமையோடு கேள்விகளைப் படியுங்கள்

> விடைகளை நல்ல கையெழுத்துடன் எழுதுங்கள். முக்கியமான வார்த்தைகளுக்கு அடிக்கோடிடுங்கள்

சங்கீதா (மாவட்ட அளவில் 3-ம் இடம்)

> கைடுகளைப் படிப்பதை விட பாடப் புத்தகங்களில் அதிக கவனம் செலுத்துங்கள்

> கடின உழைப்பு போல அறிவார்ந்த உழைப்பு மிகவும் முக்கியம்

> உடல் நலனில் அதிக அக்கறை செலுத்துங்கள்

> தன்னம்பிக்கையோடு இருங்கள். பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் என அனைவரும் உங்களை ஊக்குவிப்பார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக உங்களை நீங்களை ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

மாரியம்மாள் (நகராட்சிப் பள்ளிகள் அளவில் மாவட்டத்தில் முதலிடம்)

> படிக்கும்போதும் சரி, தேர்வெழுதும்போது சரி முதல் 10 நிமிடம் நிதானம் முக்கியம். 10 நிமிடங்கள் தியானம் செய்துவிட்டு எழுதலாம்.

> எப்போதும் படிப்பு, படிப்பு என்று இருந்துவிட்டு, உடல்நலத்தில் கோட்டை விட்டுவிடாதீர்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

> நேரம் ஒதுக்கிப் பாடங்களைப் படியுங்கள். இத்தனை நிமிடத்தில் இந்தக் கேள்வியை முடித்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டுப் படியுங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in