Last Updated : 16 Jul, 2016 12:12 PM

 

Published : 16 Jul 2016 12:12 PM
Last Updated : 16 Jul 2016 12:12 PM

பாதுகாக்கப்படுமா சென்னையின் பாரம்பரியக் கட்டிடங்கள்?

இந்தியாவின் மற்ற பெருநகரங்களை விட, பாரம்பரியக் கட்டிடங்களைப் பராமரிப்பது தொடர்பான கொள்கைகள் வகுப்பதிலும் விதிமுறைகளை உருவாக்குவதிலும் சென்னை மிகவும் பின்தங்கியுள்ளது.

பாரம்பரியக் கட்டிடங்களை நிர்வகிப்பதில் கடந்த பல ஆண்டுகளாக சென்னையில் சிக்கல்கள் நீடித்துவருகின்றன. சட்ட ரீதியான தடைகள், பொதுமக்களிடம் நிலவும் அலட்சியம், அரசு தலையிடாதது போன்ற காரணங்களால் சென்னையின் பாரம்பரியக் கட்டிடங்கள் பாழ்பட்டு வருகின்றன.

இந்தியாவின் பெருநகரங்களான மும்பை, டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா மற்றும் பாண்டிச்சேரியில் பாரம்பரியக் கட்டிடங்களைப் பாதுகாப்பது தொடர்பாக அரசிடமும் மக்களிடமும் இருக்கும் விழிப்புணர்வை ஒப்பிடும்போது சென்னை மிகவும் பினதங்கியேயுள்ளது.

எப்படிப் பாரம்பரியக் கட்டிடங்கள் பராமரிக்கப்படுகின்றன?

இந்தியாவின் பெருநகரங்களில் பாரம்பரியக் கட்டிடங்களை நிர்வகிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் அரசுக் கொள்கைகள் இருப்பதோடு, கலை மற்றும் கலாசாரப் பாரம்பரியத்துக்கான தேசிய அறக்கட்டளை நிறுவனமான இன்டாக்-கும் பாதுகாப்புப் பணிகளில் பங்கேற்கிறது. அத்துடன் கட்டிடப் பாதுகாப்பு நிறுவனங்களும் இப்பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களைப் புனரமைப்பதிலும் மறுசீரமைப்பு செய்வதிலும் ஈடுபடுகின்றன.

உடனடியாகச் சீரமைப்பு தேவைப்படும் பாரம்பரியக் கட்டிடங்களைப் பொறுத்தவரை முதலில் வரலாற்று ஆய்வும் அந்தக் கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்கள் குறித்த தகவல்களைத் திரட்டுவதும் அவசியம். கட்டுமானப் பொருட்கள் மற்றும் அவற்றின் இன்றைய விலையைத் தெரிந்துகொள்வதற்கு இந்த ஆய்வு அவசியம்.

அதன்பின்னர் ஒரு ஒப்பந்ததாரர் அமர்த்தப்பட்டு பாரம்பரியக் கட்டிட வடிவமைப்பாளரின் மேற்பார்வையில் புனரமைப்போ சீரமைப்போ செய்யப்படும். அந்தக் கட்டிடத்தின் மொத்தப் பணிகளும் அந்தக் கட்டிட வடிவமைப்பாளரிடமே ஒப்படைக்கப்படும்.

சுண்ணாம்புச் சாந்துக்கலவை, தச்சுவேலை, பாரம்பரிய தரைத்தள அமைப்பு, கூரை, சிற்ப மற்றும் வண்ணம் பூசுதலில் பிரத்யேகத் திறன் பெற்ற ஒப்பந்ததாரர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். ஆனால் பாரம்பரியக் கட்டிடங்களைப் பாதுகாப்பதற்கும் புனரமைப்பு செய்வதற்கும் தமிழகத்தில் சட்டவிதிமுறைகள் கூட இல்லை

“ பாரம்பரியக் கட்டிடங்களைப் பராமரிப்பதைப் பொறுத்தவரை, வரலாற்றின் மீதான ஆர்வமும் பிரியமும் அவசியம்.” என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டிடவியல் பேராசிரியரான ராணி வேதமுத்து. அத்துடன் பெரும்பாலான கட்டிடவியலாளர்கள் பாரம்பரியக் கட்டிடங்களைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபடுவது முழுக்க முழுக்க ஆர்வத்தினால்தான், பணம் இரண்டாம்பட்சம் தான் என்கிறார்.

“ஒரு கட்டிடம் எத்தனை ஆண்டுகள் பழமையானதோ அந்தளவுக்கு புனரமைப்பு மற்றும் சீரமைப்பதற்கான தொழில்நுட்ப, பொருளாதார ரீதியான சிக்கல்கள் அதிகம். அரசு மற்றும் நிறுவனங்களின் சொந்தப் பாரம்பரியக் கட்டிடங்களைப் பொறுத்தவரை, அவர்களது புனரமைப்பு அணுகுமுறைகள் பெரும்பாலும் தவறாகவே உள்ளன. உள்ளூர் பொறியாளர்களை வைத்து வெளிப்படையாகத் தெரியும் பழுதுகளையே சரிசெய்ய முடியும்.” என்கிறார் சென்னையைச் சேர்ந்த பாரம்பரியக் கட்டிடவியல் வல்லுனரான கே. கல்பனா.

ஒரு பாரம்பரியக் கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய பாணி கட்டுமானப் பொருட்கள் பற்றிய முழுமையான புரிதல் இருந்தால் தான் புனரமைப்பு பணி வெற்றிபெறும். புதிய கட்டுமானப் பொருட்களைக் கொண்டு சரிசெய்வது அபாயகரமாகவே முடியும் என்கிறார் கல்பனா.

சென்னையில் இருக்கும் பாரம்பரியக் கட்டிடங்களில் பல, அரசு அலுவலகங்களாக இருக்கின்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இடங்களாக இருப்பதால், அக்கட்டிடங்களைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வை உருவாக்குவதும் சிரமம். கிண்டியியில் உள்ள பொறியியல் கல்லூரி கட்டிடம் ஒரு உதாரணம். அக்கட்டிடத்தில் அக்காலத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும் யூனிட் ஒன்று செயல்பட்டது.

பொறியியலைப் பொறுத்தவரை இது ஒரு பாரம்பரியக் கட்டிடம். ஆனால் தற்போது அக்கட்டிடம் சிதிலமாகும் நிலையில் உள்ளது. இந்தக் கட்டிடத்திற்குள்ளேயிருந்து பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு இந்தக் கட்டிடத்தின் முக்கியத்துவம் தெரியாது.

அண்ணா சாலையில் அதிகமான பாரம்பரியக் கட்டிடங்கள் உள்ளன. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் உள்ள சாலை என்றே வகைப்படுத்தும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சாலை இது. வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டு, சைக்கிள் சவாரி ஊக்குவிக்கப்பட வேண்டிய சாலையாக இதை ஆக்கிவிடலாம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர் சேவியர் பெனடிக்ட்.

மறு உபயோகம் அவசியம்

பாரம்பரியக் கட்டிடங்களை வெறுமனே காட்சிப் பொருளாக்குவதாக புனரமைப்போ மறுசீரமைப்போ இருக்க வேண்டிய அவசியமில்லை. அவற்றைத் தொடர்ந்து சீர்குலைக்காமல் பயன்படுத்தலாம். இந்தியாவிலேயே அதற்கு உதாரணங்கள் உள்ளன. துணி ஆலைகளாக இருந்த கட்டிடங்கள் அலுவலகங்களாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்டாக்கின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சுஜாதா சங்கர், ஒவ்வொரு பாரம்பரியக் கட்டிடத்தின் இட அமைப்பை ஆய்வு செய்து, அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்று தெரிந்துகொள்வது அவசியம் என்கிறார்.

பாதசாரிகளுக்கு இசைவான இடங்களாக, வாகனங்களை விடும் இடங்களாகக் கூடுதல் வசதிகளுடன் பாரம்பரியக் கட்டிடங்களைப் புதுப்பிக்க முடியும். பாரம்பரியக் கட்டிடங்களின் தனி உரிமையாளர்கள் அவற்றைப் புனரமைப்பதற்குச் சில விதிமுறைகளை வகுக்கலாம். முறையான பயன்பாடும் முறையான பராமரிப்புமே பாரம்பரியக் கட்டிடங்களின் ஆயுளை நீட்டிக்கும்.

பாரம்பரியக் கட்டிடங்கள் தொடர்பான சட்டங்கள்

தமிழ்நாடு பாரம்பரிய ஆணையச் சட்ட அமலாக்கம் தொடர்பாக தொடர்ந்து பேச்சுகள் இருந்துவருகிறது. ஆனால் அது எப்போது அமலாகும் என்பது கேள்விக்கு யாரிடமும் பதிலே இல்லை. சென்னை தனது பாரம்பரியக் கட்டிடங்களைப் பாதுகாக்கும் பணிகளைச் சீக்கிரமே தொடங்க வேண்டும்.

திஇந்து (ஆங்கிலம்) | சுருக்கமாகத் தமிழில்: ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x