Last Updated : 14 Aug, 2016 04:04 PM

 

Published : 14 Aug 2016 04:04 PM
Last Updated : 14 Aug 2016 04:04 PM

நிழலாய்த் தொடரும் வன்முறை

‘பிறன்மனை நோக்காப் பேராண்மை’ என்று அந்தக் காலப் பெண் நிலையைத் தெளிவாகச் சொல்லிச் செல்கிறார் வள்ளுவர். அத்து மீறல்கள், அடுத்தவர் மனைவியைக் கவர்ந்து செல்லுதல் போன்றவை திருக்குறளிலும் பிரதிபலித்திருக்கின்றன. ராமாயணத்திலும், அகலிகையை அடைவதற்கு இந்திரன், கௌதம முனியின் வேடமேற்று வரவில்லையா? ஆனால் அதன் பலனைப் பல யுகங்களுக்குக் கல்லாகக் கிடந்து அனுபவித்தவள் அகலிகைதானே.

காலங்கள் மாறினாலும் அதற்கேற்ப வன்முறையின் வடிவங்களை மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது ஆதிக்க ஆண் மனம். பெண்ணுக்கு விருப்பமில்லாவிடினும் அவளை விரட்டி விரட்டிக் காதலிப்பது, பின் தன் வலையில் விழவைப்பது போன்றவை பெண் கவர்தலின் நவீன வடிவம்தான்.

சட்டம் அனைவருக்கும் சமமா?

மாணவி சரிகா ஷா ஈவ் டீஸிங்குக்குப் பலியான பின்னரே, அதற்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. ஈவ் டீஸிங் குற்றம் என்று சட்டம் இயற்றப்பட்டது. இருந்தும் என்ன பலன்? ஈவ் டீஸிங் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கிறது. சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும் அதை மீறுவது வாடிக்கை என்பது போல்தான் அவர்களின் செயல்பாடு இருக்கிறது. அதிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சட்டங்கள் மீது எந்த மரியாதையும் இல்லை. ஏனென்றால் பெண்கள் சட்டங்கள் அந்த அளவுக்கு கறாராக அமல்படுத்தப்படுவதில்லை. இதுவே அந்தச் சட்டங்களை மதிக்காமல் அத்துமீறவும் வைக்கிறது. நம் நாட்டின் அரசியலமைப்பு சாசனம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சொன்னாலும் நடைமுறை அப்படி இல்லை.

பெண்ணின் விருப்பத்துடன் உறவு கொண்டாலும், பின் எளிதாகக் கைவிட்டுச் செல்வது, அவளை நிராகரிப்பது போன்றவை ஒருபுறம். சம்பந்தப்பட்ட பெண்ணும் சட்டத்தின் துணையோடு ‘கற்பின்’ பெயரால் அவனையே கைப்பிடித்த சம்பவங்களையும் கண்ணாரக் கண்டிருக்கிறோம்.

ஆனால், இப்போது பெண் தெளிவாகி இருக்கிறாள். பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண் அவனையே தேடிப்பிடித்துத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற மனப்பாங்கிலிருந்து இப்போது விடுபட்டுவிட்டாள். வல்லுறவின் பலனாகக் கரு உருவானாலும், அதை அழிக்கவும் பெண் தயங்குவதில்லை. கருக்கலைப்புச் சட்டம் அவளுக்கு ஆபத்பாந்தவனாகக் கைகொடுத்தது. இதுபோல் ஒரு சில சட்டங்களாவது பென்களுக்கு அனுசரணையாக இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் கல்வி, பெண்ணுரிமை சார்ந்த கருத்தியல்களைப் பெண்ணின் பொதுப் புத்தியாக்கியுள்ளது.

தெளிந்த சிந்தையும் நேர்கொண்ட பார்வையும்

பாலியல் வல்லுறவு குறித்தும், தான் அதற்கு பலியாக்கப்பட்டோம் என்பதையும் வெளியில் சொல்லத் தயங்கிய, பயந்த காலங்கள் மலையேறிவிட்டன. சட்டப்படி தண்டனை கிடைக்கும் என்ற நிலை உருவான பின் பெண்கள் துணிச்சலுடன் வெளியில் சொல்லவும், போலீஸில் புகார் செய்யவும் முன்வந்தார்கள்.

ஆனால் ஆண் திமிர் மேலும் குற்ற உணர்வு கொண்டு வன்முறையைத் தீவிரப்படுத்தத்தொடங்கியிருக்கிறது. ‘உயிருடன் விட்டால்தானே வெளியில் சொல்வாய்?’ என்ற மனப்பாங்கில் பெண்ணைக் கொன்று வீசவும் தயங்காத நிலைக்கு ஆண் மனம் வக்கரித்துப் போயிருக்கிறது. கூட்டுப் பாலியல் வல்லுறவுகள் அதன் உச்சம். பின் அந்தப் பெண்ணின் உடல் அறுவை சிகிச்சை இல்லாமலே நைந்த துணியைப் போன்று துண்டு துண்டாகக் கிழித்து வீசப்படுவது கோரத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல, கோணல் புத்திக்காரர்களின் மனத்திரிபே. நிர்பயா, ஜிஷா, கலைச்செல்விவரை அது தொடர்கிறது.

வெளியே மட்டுமல்ல, வீட்டுக்குள்ளேயும் தொடர்கின்றன பெண்ணின் இடையறாத போராட்டங்கள். குடும்ப வன்முறை பற்றி சமூகம் பெரிதாக அக்கறை கொள்வதில்லை. திருமணம் என்றால் என்ன என்று அறியாத பருவத்திலேயே திருமணம் செய்துவைக்கப்பட்டு, பொம்மைக் கல்யாண நிலையிலேயே கைம்பெண் கோலம், சாரதா சட்டத்தின் வழி அதற்கோர் விடுதலை. ஆனா ஆவன்னாகூட தெரியாத நிலையிலிருந்து கல்வி கற்கப் படி தாண்டி பள்ளி, கல்லூரி நோக்கிய பயணம். வீடு என்ற நான்கு சுவர் சிறைக்குள்ளிருந்து சுதந்திரக் காற்றை சுவாசித்தபடி வீதியில் இறங்கி, வெளி உலகைத் தரிசிக்க ஆரம்பித்தபோது தெருவெல்லாம் சில்மிஷம் என்ற பெயரில் தொடர்ந்த வன்முறை அவளை மீண்டும் வீட்டுக்குள்ளேயே இழுத்து வந்து அடைத்தது.

புது வடிவமெடுக்கும் வன்முறை

பணியிடங்களில் மென்னுணர்வுடன் புன்னகை தவழ வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல வார்த்தைகளால் குதறப்படும்போது படித்த பெண்ணாக இருந்தாலும் அவமானத்தால் உள்ளுக்குள் கூனிக் குறுகிப் போனாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அதே புன்னகையைப் பதிலுக்குத் தர வேண்டியிருக்கிறது. மீறும்போது ஆசிட் வீச்சு போன்ற தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடுகிறது.

வீட்டுக்குள்ளும் குறைந்துவிடாத வன்முறை வேறு வடிவம் கொள்ளும். பெண்களுக்கு எதிரான வன்மம் என்பது நுண்ணுணர்வுகளில் வெளிப்படுகிறது. ஆணும் பெண்ணும் ஊதியம் ஈட்டுவதால் நேரடியாக வன்முறையைப் பாய்ச்சத் தயங்கும் கணவன்மார்கள் மனைவி மீது கொண்டுள்ள வன்மம் அவ்வப்போது வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படுவதும், பிற ஆண்களுடன் தொடர்புபடுத்திப் பேசுவதும் தொடர்கதைகள். ‘உன்னைவிட நான் குறைவானவள்தான்’ என்பதை ஆணின் முன் மண்டியிட்டுக் கூறாத வரைக்கும் இந்த ஆண் வன்மமும் வக்கிரமும் தீர்வதில்லை.

சதி என்ற உடன்கட்டையிலிருந்து மீண்டு, ஸ்டவ், காஸ் வெடித்து செத்த பெண்கள் எண்ணிக்கைக்கு கணக்கு உண்டா? சிசுக்கொலையிலிருந்து மீண்டு ஸ்கேன் ராட்சசர்களின் பசிக்குக் கருக்கொலையாக பலியானவை எத்தனை லட்சம், கோடி உயிர்கள்? புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் என எத்தனை வந்தாலும் அதன் மூலம் எவ்வாறு பெண்கள் மீது வன்முறையை ஏவலாம், தாக்குதல் தொடுக்கலாம் என்பதே மதிப்புக்கூட்டு கண்டுபிடிப்பாக இங்கு இருக்கிறது.

பழுக்கக் காய்ச்சிய கரண்டிக் காம்பால் சூடு போட்டவர்கள், சிகரெட்டால் சூட்டுப் புள்ளிகளைப் பொட்டுகளாக உடலெங்கும் வைத்தார்கள். இஸ்திரிப் பெட்டியால் அடையாளமிட்டதையும் பார்த்தோம். தொலைபேசியைப் பெண்களுக்கு எதிரான கிசுகிசுகளைப் பரப்பப் பயன்படுத்தினர். செல்பேசி, இணையம் அனைத்தும் அடுத்த கட்டப் புதிய பாய்ச்சலாகப் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைப் புதிய புதிய வடிவங்களில் ஏவப் புறப்பட்டுள்ளன. சமீபத்திய உதாரணம் வினுப்ரியா.

மாற்றத்துக்கு இடமில்லாத ஆண் மனம்

இப்படி ஓராயிரம் கோடி வன்முறைகளை எதிர்கொண்டுதான் பெண் எனும் மானுடம் ஜீவித்துவருகிறது. வன்முறைகளுக்குக் கட்டுப்பட மறுத்து அடங்காமல் திமிறி எழும் பெண், புதிய வெளிகளுக்குள் புகுந்துகொண்டே இருக்கிறாள். புதிய வெளிகள், புதிய அமைப்புகள். அதனால் வன்முறைகளும் புதிய வடிவங்களில் நிழல்போல் அவளைத் தொடர்கின்றன.

இங்கு உடன்போக்கு என்பது இலக்கியத்தில் மட்டுமே அனுமதிக்கப்படும். அதுவே நடைமுறையில் நிகழ்ந்தால் ஆணவக் கொலைக்கு ஆளாக்கும் அதீத நடைமுறை கைக்கொள்ளப்படும் என்பது இப்போது எழுதப்படாத விதி.

பெண் ஒரு பொருள், பண்டம் என்ற நிலையில் வைத்துப் பார்ப்பதால், பெண்ணாகிய பொருளைச் சொந்தமாக்கிக்கொள்ள நினைக்கிறது ஆண் மனம். அவளுக்கும் மனம் என்பது உண்டு, அதில் தனக்கென்று தனித்த ஆசைகள், தனி விருப்பங்கள் உண்டு என்பதை எப்போதுமே ஏற்றுக் கொள்ளாத சமூகத்தின் ஒரு அங்கமான ஆண் மனம் தன் விருப்பத்தையும் ஆசையையும் மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது.

சமீப காலங்களில் தொடர்ச்சியாகப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு பலியாவதும், கண்மூடித்தனமான ஒருதலைக் காதலுக்கு இணங்காவிடில் பெண்ணைக் கொல்வதும் இதன் வெளிப்பாடுகள்தாம். இவை ஆண் மனதின் ஆதிக்கத் திமிரையும் வக்கிரத்தையுமே வெளிப்படுத்துகின்றன.

பெண் ஆரம்ப கால நடைமுறைகளிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு, தடைகளைத் தாண்டி அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி எப்போதும் முன்னேறியே வந்திருக்கிறாள். ஆனால், ஆண் எவ்வளவு படித்தபோதும், அறிவியல் ரீதியான முன்னேற்றங்களை அடைந்தபோதும், மனதளவில் ஆரம்பப் புள்ளியில் நின்று கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. ஆதிக்க மனோபாவத்திலிருந்து முற்றிலும் விடுபடத் தயாராக இல்லை. அதனாலேயே, தன்னைவிட மேலானவளாகப் பெண் மாறும்போது அவளைக் கீழே தள்ளச் சற்றும் தயங்குவதில்லை.

கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: asixjeeko@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x