Last Updated : 02 Aug, 2016 11:24 AM

Published : 02 Aug 2016 11:24 AM
Last Updated : 02 Aug 2016 11:24 AM

சூரியக் குடும்பத்தின் சுற்றுலாப் பயணிகள்

ஜூலை மாதத் தொடக்கத்தில் நாஸாவின் விண்வெளி துழாவியான ஜூனோ (Juno space probe) வியாழன் கோளின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. ஐந்தாண்டுப் பயணத்தை, அதாவது 180 கோடி மைல் தூரத்தை, அப்போது நிறைவுசெய்தது. இதன் காரணமாக நாஸாவின் மற்ற விண்வெளித் திட்டங்களுக்கும் நீட்டிப்பு கிடைத்திருக்கிறது. இந்தத் தருணத்தில், சூரியக் குடும்பத்தைத் துழாவுவதற்கு நாஸா அனுப்பியிருக்கும் விண்கலங்களைப் பற்றிய ஒரு பார்வை:

செவ்வாய்த் தேடல்கள்

செவ்வாயின் மணல் மேடுகளிலும் பள்ளங்களிலும் திரிந்துகொண்டிருப்பது வேறு எதுவுமல்ல, ‘ஆப்பர்சூனிட்டி’, ‘கியூரியாசிட்டி’ ஆகிய உலாவிகள்தான் (Rovers). இந்த இரண்டு உலாவிகளிலும் மூத்தது ‘ஆப்பர்சூனிட்டி’தான். இது 2004-லிருந்து செவ்வாயில் உலவிக்கொண்டிருக்கிறது. மூன்று மாதங்கள் மட்டும்தான் அது நீடிக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவோ 12 ஆண்டுகள் தாக்குப்பிடித்திருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் புழுதிச் சூறாவளிகளையும், தொன்மையான அமில ஏரிகளையும் அங்கே கண்டுபிடித்திருக்கிறது. 2012-ல் அங்கே தரையிறங்கிய ‘கியூரியாசிட்டி’ உலாவி செவ்வாயின் தரையைத் துளையிட்டுப் பார்த்து உயிர் வாழ்க்கைக்கு அவசியமான உயிர்ம வேதிப் பொருட்களை அங்கே கண்டறிந்தது.

தரையில் இந்த உலாவிகளின் ஆட்சி என்றால் செவ்வாயின் சுற்றுப்பாதையிலோ ‘மார்ஸ் ரிகானிஸன்ஸ் ஆர்பிட்டர்’, ‘மார்ஸ் ஒடிஸி’, ‘மேவன்’ ஆகியவை சுற்றிக்கொண்டிருக்கின்றன. இந்தத் துழாவுகலங்கள் (Probes) எல்லாமே செவ்வாயின் மிகத் தொன்மையான காலத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்கு ஏதுவாக அதன் தரையிலும் காற்று மண்டலத்திலும் ஏதாவது வேதிப் பொருட்களின் தடயங்கள் கிடைக்கின்றனவா என்று தேடிக்கொண்டிருக்கின்றன. நாஸா அனுப்பிய இந்தச் சிப்பாய்கள் எல்லாம் தேடிக் கண்டுபிடித்த தகவல்கள் மூலம் முன்பு ஈரப்பதத்துடன் இருந்த செவ்வாய் பிற்பாடு எப்படி வறண்டும் வெறிச்சோடியும் போனது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.

செவ்வாயில் பிற நாடுகள்

செவ்வாயில் தேடல் வேட்டை நடத்துவதென்பது ஏதோ அமெரிக்காவுக்கு மட்டும் ஏகபோகம் அல்ல. அந்த செங்கோளுக்கு மேலே இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ‘மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்’ (MOM) கலம் சுற்றிக்கொண்டிருக்கிறது. 2013-ல் ஏவப்பட்ட இந்தக் கலம் 2014-லிருந்து செவ்வாயைச் சுற்றிக்கொண்டிக்கிறது. இந்த ஆண்டின் இறுதியில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் ரஷ்ய ஃபெடரல் விண்வெளி நிறுவனமும் இணைந்து தங்களுக்கென ஒரு துழாவியை அனுப்ப முடிவெடுத்திருக்கின்றன.

இன்றும் அதே நிலா

நிலவுக்கு மனிதர்களை அமெரிக்கா அனுப்பிப் பல தசாப்தங்கள் ஆகின்றன. என்றாலும் நிலவின் மீது வைத்த கண்ணை நாஸா எடுத்துவிடவில்லை. நாஸாவின் ‘லூனார் ரிகானிஸன்ஸ் ஆர்பிட்டர்’ சில சமயங்களில் நிலவின் தரைப் பகுதியிலிருந்து வெறும் 12 மைல்கள் உயரத்தில் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது. 2009-ல் செலுத்தப்பட்ட கலம் அது. அதுமுதல் தனது லேஸர் கருவிகள், தொலைநோக்கிகள், உணர்மானிகள் போன்றவற்றைக் கொண்டு நிலவின் துருவங்கள், பள்ளங்கள், மலையுச்சிகள் போன்றவற்றில் பனிக்கட்டிகளைத் தேடிக்கொண்டிருக்கிறது இந்தத் துழாவி.

2013-லிருந்து சீன விண்வெளி நிறுவனத்தின் ‘சாங்-ஈ 3 யூட்டு’ (Chang'e 3 Yutu) உலாவி நிலவின் தரையில் குறுக்கும் நெடுக்குமாக உலவிக்கொண்டிருக்கிறது. தனது உலாவலில் நிலவின் எரிமலைப் பாறைகளை அது கண்டறிந்திருக்கிறது.

சின்ன கல்லு பெத்த அபாயம்…

நியோவைஸ் விண்வெளித் தொலைநோக்கிதான் நாஸாவின் விண்கல் வேட்டை நாய். 300 அடிகளுக்கு மேல் சுற்றளவு கொண்ட விண்கற்கள் பூமியின் சுற்றுப் பாதையில் 50 லட்சம் மைல் தூரத்துக்குள் வருமென்றால் அவற்றை இந்தத் தொலைநோக்கி கண்டறிந்துவிடும். அதுபோன்ற விண்கற்கள் பூமியுடன் மோதினால் மிகமிக மோசமான அழிவை நாம் சந்திக்க நேரிடும்.

வைஸ் மிஷனின் ஒரு பகுதியாக 2009-ல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் ஒட்டுமொத்த வானத்தையும் நோட்டமிட்டு 20 லட்சம் அகச்சிவப்பு ஒளிப்படங்களை அது எடுத்தது. 2011-ல் இந்தத் தொலைநோக்கியின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. செயல்பட்ட காலத்தில் 11 நொடிகளுக்கு ஒரு படம் என்ற வீதத்தில் வைஸ் எடுத்திருந்தது. இரண்டாண்டுகள் உறக்கத்துக்குப் பிறகு 2013-ல் மீண்டும் நியோவைஸ் என்ற பெயரில் அது உசுப்பிவிடப்பட்டது. இந்தத் தொலைநோக்கி அளித்த தரவுகளை வைத்துப் பார்க்கும்போது பூமிக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய விண்கற்கள் குத்துமதிப்பாக 4,500 இருக்கலாம். இதில் 1,350 விண்கற்களை நியோவைஸ் கண்டறிந்திருந்தது.

ஹப்பிள் (Hubble) எடுத்த குளோஸ்-அப் படங்கள்

வானத்தில் எந்நேரமும் விழித்திருக்கும் கழுகுக் கண் எதுவென்று பலருக்கும் தெரியும். ஆம், ஹப்பிள் தொலைநோக்கிதான் அது. வியாழனின் ஒளிக்கோலம் (Aurora), செவ்வாய்த் துருவங்களின் உறைபனி, நெப்டியூனின் கருஞ்சூறாவளிகள் என்று சூரியக் குடும்பத்துக்குள் தன் பார்வையை ஓட்டி எண்ணற்ற ஒளிப்படங்களை ஹப்பிள் நமக்கு அனுப்பியிருக்கிறது.

1990-ல் செலுத்தப்பட்டதிலிருந்து அண்டவெளியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விஷயங்களைக் கண்டறிந்து நமக்குச் சொல்லியிருக்கிறது. நமது சூரியக் குடும்பத்தைத் தாண்டி அது எடுத்த குதிரைத்தலை நெபுலா, ஜனனத்தின் தூண்கள் போன்ற புகைப்படங்கள் மிகவும் புகழ்பெற்றவை. ஹப்பிள் தொலைநோக்கி கண்டறிந்த விஷயங்களை வைத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

ஹப்பிளை இயக்குவதற்கான ஒப்பந்தத்தை நாஸா மேலும் ஐந்தாண்டுகள் நீட்டித்திருக்கிறது.

நெப்டியூன்

விண்கற்களின் சர்வேயர்கள்

செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடைப்பட்ட பிராந்தியத்தில் உள்ள விண்கற்கள் பட்டையில் (Asteroid belt) கோடிக்கணக்கான பாறைகள் மிதக்கின்றன. இந்தப் பிராந்தியத்துக்கு நாஸாவின் ‘டான்’ (Dawn) விண்கலம் வருகை புரிந்திருக்கிறது. இந்தப் பட்டையின் மிகப் பெரிய இரண்டு பொருட்களான சியரீஸ் குறுங்கோளையும் (Dwarf planet Ceres) வெஸ்டா குழந்தைக்கோளையும் (Protoplanet Vesta) டான் துழாவிப் பார்த்திருக்கிறது.

2011-ல் தொடங்கி 2012 வரை 14 மாதங்கள் வெஸ்டாவைச் சுற்றியதுதான் டானின் முதல் பணி. இப்போது அது சியரீஸைச் சுற்றுகிறது.

இந்த விண்கல் பட்டையை நோக்கி ஜப்பானிய விண்வெளி மையத்தின் ஹயபுஸா (Hayabusa) 2 வந்துகொண்டிருக்கிறது. ஜூலை 2018-ல் 1621173 என்ற பெயருடைய விண்பாறையை அது சந்திக்கவிருக்கிறது. அங்கிருந்து ஆய்வு மாதிரிகளைச் சேகரித்துக்கொண்டு பூமிக்கு அந்தக் கலம் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போய்வருகிறேன் சனியே

2004-லிருந்து சனிக்கோளைச் சுற்றிக்கொண்டிருப்பது கஸீனி (Cassini) விண்கலம். 1997-ல் ஏவப்பட்ட இந்தக் கலம் சனிக் கோளைப் பற்றியும் அதன் நிலவுகளைப் பற்றியும் நாஸா கொண்டிருந்த புரிதலை விரிவுபடுத்தியது. சனியின் வளையங்கள் தொடர்ந்து உருமாறிக்கொண்டிருப்பது ஏன் என்றும் கஸீனியால் தெளிவானது.

கஸீனி சனியின் நிலவுகளுக்கு அருகே பலமுறை பறந்ததன் மூலம் என்செலடஸ் நிலவில் பீய்ச்சிடும் பனிக்குழம்பு, டைட்டன் நிலவின் மீத்தேன் கடல்கள் போன்றவற்றைப் பற்றி நமக்குத் தெரியவந்தது. 2005-ல் டைட்டன் நிலவில் ஹைகன்ஸ் விண்துழாவியை கஸீனி வெற்றிகரமாகத் தரையிறக்கியது.

தற்போது, தனது இறுதிப் பயணத்துக்காகத் தன்னை முடுக்கிக்கொண்டிருக்கிறது. அந்தப் பயணத்தின் இறுதியில் சனிக் கோளுக்குள் அது மூழ்கி ஆவியாகிவிடும்.

வெள்ளி வீதியில் ஒரு நீண்ட பயணம்

சூரியக் குடும்பத்தின் இரண்டாவது கோளான வெள்ளியைச் சுற்றிவரச் செய்வதற்காக 2010-ல் ஏவப்பட்ட ஜப்பானின் அகட்சுகி (Akatsuki) விண்துழாவி வெள்ளியைத் தவறவிட்டது. அது மட்டுமல்லாமல் சூரியனை ஐந்தாண்டுகளாகச் சுற்றியது. ஒருவழியாகக் கடந்த ஆண்டு சரியான பாதைக்கு அது திருப்பப்பட்டது. வெள்ளியின் வளிமண்டலத்திலிருந்தபடி அந்தக் கோளை ஒளிப்படம் எடுத்தும் அகட்சுகி அனுப்பியது.

புளூட்டோவுக்கும் அப்பால்…

கடந்த ஜூலை மாதத்தில் வியாழனைக் குறித்து குதூகலத்தில் இருந்தது நாஸா. கடந்த ஆண்டோ புளூட்டோவை முன்னிட்டு குதூகலித்தது. 2015-ல் ‘நியூ ஹொரைசான்ஸ் விண்கலம்’ குறுங்கோளான புளூட்டோவைக் கடந்த வரலாற்றுச் சம்பவம் நிகழ்ந்தது. ஒன்பது ஆண்டுகள், 300 கோடி மைல்கள் கடந்து அந்தத் துழாவுகலம் புளூட்டோ என்ற உறைந்துபோன உலகத்தின் மேல் தன் பார்வையை ஓட்டியது. புளூட்டோவைக் கடந்தபோது நியூ ஹொரைசான்ஸ் எடுத்த ஒளிப்படங்களைப் பார்த்தபோது புளூட்டோவில் இதய வடிவில் ஒரு தழும்பு தெரிந்தது. உறைபனி மலைகளையும் புளூட்டோவில் அது கண்டறிந்தது. புளூட்டோவின் நிலவான கேரனையும் ஒளிப்படங்கள் எடுத்தது.

கால நீட்டிப்பு வழங்கப்பட்ட நாஸாவின் திட்டங்களில் நியூ ஹொரைசான்ஸும் ஒன்று. சூரியக் குடும்பத்தின் ‘புறநகர்ப் பகுதி’களில் பனிக்கிடங்காகவும் விண்கற்களின் களஞ்சியமாகவும் இருக்கும் கைப்பர் பட்டை (Kuiper Belt) பகுதியை நோக்கி நியூ ஹொரைசான்ஸ் தற்போது விரைந்துகொண்டிருக்கிறது. கைப்பர் பட்டைப் பிராந்தியத்தின் பொருள்களுள் ஒன்றான 2014 எம்.யூ.69 என்ற சிறிய, குளிர்ந்த பாறையை 2019-ல் நியூ ஹொரைசான்ஸ் ஒளிப்படம் எடுக்கும்.

© நியூயார்க் டைம்ஸ்,
சுருக்கமாகத் தமிழில்: ஆசை

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x