Published : 07 Apr 2017 09:37 AM
Last Updated : 07 Apr 2017 09:37 AM

முயற்சி புதிது: ஆறு கதைகள்... ஒரு திரைப்படம்!

“நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கு முதல் ‘ஆந்தாலஜி’ திரைப்படத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். பக்கத்து வீடான கேரளத்தில், மம்முட்டி, திலீப், சுரேஷ்கோபி, ஸ்ரீநினிவாசன் உட்பட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து 2009-ல் வெளியான ‘கேரளா கஃபே’, தென்னிந்தியாவின் முதல் அசலான ஆந்தாலஜி திரைப்பட முயற்சி. தற்போது தமிழுக்கு ‘6 அத்தியாயங்கள்’தான் முதல் முயற்சி” என்று உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார் ‘6 அத்தியாயங்கள்’ திரைப்படத் தொகுப்பை தயாரித்து அதில் ஒரு படத்தை இயக்கியிருக்கும் சங்கர் தியாகராஜன்.

பெஞ்ச் பிளிக்ஸ் குறும்படத் தொகுப்புகள் தற்போது பிரபலமாகியிருக்கின்றன. அவற்றுக்கும் நீங்கள் குறிப்பிடும் ஆந்தாலஜி வகைக்கும் என்ன வேறுபாடு?

யூடியூபில் ஹிட்டடிக்கும் குறும்படங்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து ஒரு முழுத் திரைப்படத்துக்கான கால அவகாசத்தில் குறும்படங்களின் திரட்டாக வெளியிடுவது ‘பெஞ்ச் டாக்கீஸ்’ வகை. ஆனால் ஆந்தாலஜி என்பது ஒரே வகையிலான கதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை வெவ்வேறு இயக்குநர்கள் தங்கள் தனித்த பாணியில் இயக்கி அனைத்துப் படங்களுக்கும் ஒரு ஆத்மார்த்தமான பிணைப்பை உருவாக்குவது. இதுவரை தமிழில் இப்படியொரு முயற்சி இல்லை, சரியான பிரேக் கிடைக்காமல் போராடிக்கொண்டிருக்கும் திறமையாளர்களை அமர்த்தி இந்த முயற்சியைச் செய்து முடித்திருக்கிறோம்.

வேறு எந்த வகையில் குறும்படங்களின் தொகுப்பிலிருந்து உங்கள் படம் வேறுபடுகிறது?

அமானுஷ்யம் என்ற ஒரே வகையில் கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். சமரசங்கள் ஏதுமின்றி ஆந்தாலஜியை சரியாகவும் தரமாகவும் செய்ய வேண்டும் என முடிவு செய்து சுமார் 100 கதைகளைக் கேட்டு அதிலிருந்து 30 கதைகளைத் தேர்தெடுத்து பின்னர் அதிலிருந்து ஆறு கதைகளைத் தேர்ந்தெடுத்தோம். ஆறு கதைகளையும் ஆறு இயக்குநர்கள் இயக்கி ஒரே திரைப்படமாக ஆக்கியிருக்கிறார்கள்.

ஆறு கதைகளுக்கான முடிவையும் படத்தின் இறுதியில் இடம்பெறும் கிளைமாக்ஸ் ‘கட்’டில் தனித்தனியே காட்டுகிறோம். கிளைமாக்ஸுக்காக ரசிகர்களைக் கடைசிவரை இருத்தி வைக்கும் இந்த முயற்சி இந்தியாவில் மட்டுமல்ல; உலகில் வேறு எங்கும் செய்யப்படவில்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒவ்வொரு கதையின் முடிவையும் அறிய இப்படிக் காத்திருப்பது ரசிகர்களைக் கோபப்படுத்தும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

இங்கேதான் கதைத் தேர்வு எங்களுக்குக் கைகொடுத்திருக்கிறது. ஒவ்வொரு கதையும் ஒரே வகையில் அமைந்த வெவ்வேறு களங்கள். கிளைமாக்ஸ் நிகழ்வதற்கு முன்பு நிகழும் முக்கிய திருப்பம் ரசிகர்களை இருக்கையை விட்டு எழும்பவிடாத அளவுக்கு சுவாரஸ்யமும் திகிலும் கொண்டது. தவிர, கடைசியில் நாங்கள் கிளைமாக்ஸை காட்டும்போது ஒவ்வொரு படத்தையும் 30 வினாடிகளுக்கு ப்ளாஷ் கட்களில் ரீகால் செய்து கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியின் அரை நிமிடத்தை முழுமையாகக் காட்டி கிளைமாக்ஸுக்குள் அழைத்துச் செல்கிறோம்.

அப்போது ரசிகர்கள் படத்துடனான தொடர்பைச் சட்டென்று புதுப்பித்துக் கொள்வார்கள். முழுப்படத்தையும் நண்பர்கள் ஆர்வலர்களுக்குப் போட்டுக்காட்டியபோது “ சூப்பர்” என்றார்கள். ட்ரையல் அண்ட் எரர் முறையில் இது ரசிகர்களை எப்படி கடைசிவரை இருத்தி வைக்கிறது என்பதையும் தெரிந்துகொண்டோம்.

’6 அத்தியாயங்கள்’ என்ற தலைப்புடன் 'ஹெக்ஸா' என்ற துணைத்தலைப்பு ஒட்டிக்கொண்டிருக்கிறதே?

’ஹெக்ஸா’ என்றால் கிரேக்க மொழியில் எண் 6 –ஐக்குறிக்கும். ஆறு கதைகள் என்றாலும் முழுப்படம் பார்த்த திருப்தியை இந்தப் படம் வழங்கும். நிஜமான அன்தாலஜி அனுபவம் கிடைக்கும்.

யாரெல்லாம் இயக்குநர்கள்?

எழுத்தாளரும், ‘தொட்டால் தொடரும்’ பட இயக்குநருமான கேபிள் சங்கர் ஒரு அத்தியாயத்தை எழுதி இயக்கியிருக்கிறார். படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். அடுத்து அஜயன் பாலா. ‘மனிதன்’, ‘சென்னையில் ஒரு நாள்’, தொடங்கி விரைவில் வெளியாகவிருக்கும் ‘வனமகன்’ வரை பல படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் இவர் நல்ல எழுத்தாளரும் கூட. இவர் ஓர் அத்தியாயத்தை எழுதி முதல் முறையாய் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இவர்களுடன் மர்ம தேசம் முதல் ஜீபூம்பா வரை குழந்தை நட்சத்திரமாக நடித்த லோகேஷ், ‘லைட்ஸ் ஆன் மீடியா’சுரேஷ், குறும்பட உலகின் பிரபலமான ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோரும் ஒவ்வொரு அத்தியாயத்தை இயக்கியுள்ளார்கள். நான் ஒரு அத்தியாயத்தை இயக்கியிருக்கிறேன். ஒவ்வொரு அத்தியாயத்திலும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர்களையே நடிக்க வைத்திருக்கிறோம்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்?

சீனியர் கலைஞர்களான சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாயங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரபல ஒளிப்படக் கலைஞர் பொன். காசிராஜன் ஆறு கதைகளில் ஓர் அத்தியாயத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகக் களம் இறங்குறார். இவர்களைத் தவிர புதியவர்களான அருண் மணி பழனி, அருண்மொழி சோழன் மற்றும் மனோ ராஜா ஒளிப்பதிவாளர்களாய் பணியாற்றியுள்ளனர்.

இசையைப் பொறுத்தவரை தாஜ்நூர், சாம், ஆகியோருடன் ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் போன்ற வளரும் இசைக் கலைஞர்கள் சிலரும் அறிமுகமாகியுள்ளனர்.

- சங்கர் தியாகராஜன்.

உங்களைப் பற்றி...

எனக்குச் சேலம்தான் சொந்த ஊர். அடிப்படையில் நான் மென்பொருள் பொறியாளர். அமெரிக்காவில் நீண்ட காலமாகப் பணியாற்றி வந்ததில் சொந்த ஊர் பற்றிய ஏக்கமே அதிகமாக இருந்தது. அங்கே செய்யும் வேலையைச் சொந்த ஊரில் செய்வோம் என்று வந்து சொந்த நிறுவனம் தொடங்கிவிட்டேன். ஆப்பிள், ஆண்டிராய்ட் போன்களில் பிரபலமான ‘ப்ளாஷ் கார்ட்ஸ் தமிழ் லெசன்ஸ்’ எனும் ஆப்- பை வடிவமைத்தது நான்தான். தமிழில் இதுவரை செய்யப்படாத திரைமுயற்சிகளை சரியான முன் தயாரிப்புடன் திட்டமிட்டுச் செய்ய வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. அதற்காக அமெரிக்காவின் நியுஜெர்ஸி பிலிம் ஸ்கூலில் திரைப்பட உருவாக்கம் குறித்து படித்துவிட்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டு ‘ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் மூலம் இந்த ஆந்தாலஜியைத் தயாரித்திருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x