Last Updated : 18 Sep, 2016 11:49 AM

 

Published : 18 Sep 2016 11:49 AM
Last Updated : 18 Sep 2016 11:49 AM

மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! - வாணி ஜெயராம் நேர்காணல்

இன்றய வைஃபை சூழ் வையகத்தில் இப்போதும் மாறாமல் இருப்பது இசை ரசனைதான். இன்னமும் இவர் பாடிய ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை’ பாடலும், ‘ஆடி வெள்ளி தேடி உன்னை’யும் நம் மனதில் தோரணம் கட்டிக்கொண்டே இருக்கின்றன. தமிழ்ப் பின்னணிப் பாடகிகளில் கர்னாடக இசையும் ஹிந்துஸ்தானியும் கஜலும் அறிந்தவர் இவர் ஒருவர்தான். 19 மொழிகளில் பாடியிருப்பவர். பெரும்பாலும் அங்காடிக் கூச்சல்களாகவும், வாகன ஹாரன் ஒலிகளாகவும் திரையிசை மாறிவிட்ட சூழலில், சந்தோஷங்களின் குரலாக இருக்கும் வாணி ஜெயராம் அவர்களுடன் ஓர் உரையாடல்:

பல நுண்கலைகளில் முதன்மையானது இசைக் கலை. இதில் நீங்களும் ஒரு பங்களிப்பாளர் என்பதில் உங்களுக்குள்ள உணர்வு என்ன?

`அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்று நமது அவ்வைப் பாட்டி சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. இப்படி அரிதாகக் கிடைத்திருக்கிற இந்த மனிதப் பிறவியில் மனிதநேயத்தோடு வாழ்வதுதான் மிக உன்னதமான விஷயம். சமூகத்தில் எல்லோருக்கும் நல்லவராக வாழ்கிற வாழ்க்கையைத்தான் நம் முன்னோர்கள் ‘இசைபட வாழ்தல்’ என்றழைத்தார்கள். இசை என்பது சமூகத்தை இணைக்கிற நல்லதொரு பாலம். அத்தகைய இசைத் துறையில் நானும் ஒரு பங்களிப்பாளராக, பார்வையாளராக இருப்பதை எண்ணி கர்வப்படவில்லை. பெருமைப்படுகிறேன். பெருமைப்படலாம்; கர்வப்படக் கூடாது.

உங்கள் இசை ஆற்றலின் ஆரம்பப் பல்லவி...

எனது இசையின் தொட்டில், அகரம், பல்லவி எல்லாமே என் குடும்பம்தான். இசையால் ஆனது என் வீடு. என் தாயார் பத்மாவதி வீணை இசைக் கலைஞர். ரங்கராமனுஜ அய்யங்காருடைய சிஷ்யை என் தாயார். ஒரு விளக்கால் இன்னொரு விளக்கை ஏற்றலாம் என்பார்கள் அல்லவா? அது போல என் அம்மாவிடம் இருந்துதான் எனக்கும் அந்த ஒளி கடத்தப்பட்டது. மூன்று வயதிலேயே எனக்கு இசை நாட்டம் வந்துவிட்டதாகப் பின்னாட்களில் என் தாய் சொல்லக் கேட்டிருக்கிறேன். எனது ஐந்தாவது வயதில் வேலூரில் முறைப்படி இசை கற்க ஆரம்பித்தேன். அந்த ஒலி ஊர்வலம் இன்னமும் தொடர்கிறது. இதைத் தொடர்ந்து மும்பையில் ஹிந்துஸ்தானியை முறைப்படி கற்றுக்கொண்டேன். கஜலும் அத்துப்படியானது. இவை எல்லாம் எனக்கு வெவ்வேறு பரிமாணங்களில் பயணிக்கப் பெரிதும் பயன்பட்டன.

செவ்விசை அறிந்தவர் நீங்கள். நாட்டார் பாடல்களைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன?

இசையின் பல பரிமாணங்களில் ஒன்று நாட்டார் பாடல்கள். மக்கள் இசை அது. எனக்கும் பிடிக்கும். இன்னும் சொல்லப்போனால் திரையிசைக்கு மிக நெருக்கமாக கிராமியப் பாடலும் இருக்க வேண்டும். பிரபல இசையமைப்பாளர் நவுஸத் உத்தரப் பிரதேச கிராமியப் பாடல்களையும், எஸ்.டி.பர்மன் வங்காள மொழி கிராமியப் பாடல்களையும் எடுத்துத் திரையிசையில் கலந்திருக்கிறார்கள். நம் தமிழ்த் திரையிசையிலும் நாட்டார் பாடல்கள் கவனிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.

அங்கீகாரத்தின் அடையாளம்தான் விருதுகள். இந்த விருதுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

குழந்தைக்குக்கூடப் பாராட்டுவது பிடிக்கும். விருதுகள் இன்னும் இன்னும் உற்சாகத்தைக் கூட்டும். 1977-ல் `அபூர்வ ராகங்கள்’ படத்தில் எம்.எஸ்.வி. சார் இசையில் பாடிய ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்?’ பாடலுக்கு தேசிய விருது தொடங்கி ஏகப்பட்ட விருதுகள் வாங்கியிருக்கிறேன். சமீபக் காலங்களில் 2014-ல் ‘1983’ என்ற மலையாளப் படத்தில் நான் பாடிய ‘நலன் ஞாலி குருவி’ என்ற பாடலுக்கும் இந்த வருஷத்தில் ‘ஆக்‌ஷன் ஹீரோ பீஜு’ என்ற நிவின் பாலி நடித்த படத்தில் நான் பாடிய ‘பூக்கள் பன்னீர் பூக்கள்’ பாடலுக்கும் விருதுகள் கொடுத்திருக்கிறார்கள். இந்த அங்கீகாரங்கள், தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கான டானிக். இதில் இன்னொரு விஷயம் விருது நம்மைத் தேடி வரணும். நாம் தேடிப் போகக் கூடாது.

ஞாபக அலமாரியில் பத்திரமாக இருக்கும் உங்கள் முதல் திரையிசைப் பயணம்?

1970-ல் ‘குட்டி’ என்ற இந்திப் படத்தில் என்னை முதன்முதலாக வசந்த் தேசாய் பின்னணிப் பாடகியாக அறிமுகம் செய்தார். தமிழில் 1973-ல் எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ‘தாயும் சேயும்’ என்ற படத்தில் அறிமுகம் செய்தார். அந்தப் படம் வெளிவரவே இல்லை. அதே வருஷத்தில் சங்கர்-கணேஷ் இசையில் `வீட்டுக்கு வந்த மருமகள்’ படத்தில் ‘ஓரிடம்…’ என்ற ஒரு டூயட் பாடலை டி.எம்.எஸ். அவர்களுடன் இணைந்து பாடினேன். அதே வருஷத்தில் எம்.எஸ்.வி. சார் இசையில், எனக்குப் பெரிய பேர் வாங்கித் தந்த ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடலைப் பாடினேன். என்னை உச்சத்துக்குக் கொண்டு சென்றுவிட்டது அந்தப் பாடல்.

ஹிந்துஸ்தானியும், கஜலும் நீங்கள், இத்தகைய இசைப் படிமங்களைக் கொண்ட ‘மேகமே மேகமே’, ‘யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது’ போன்ற ஒரு சில பாடல்களை மட்டுமே தந்திருக்கிறீர்கள்...

நீங்கள் தமிழில் மட்டும் விரல் விட்டு எண்ணுகிறீர்கள். இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் இத்தகைய நுட்பங்களைக் கொண்ட பாடல்களைப் பாடியிருக்கிறேன்.

உங்களுக்கே உங்களுக்கென்று பிடித்த ராகம்?

‘த்விஜாவந்தி’ என்ற ராகம் ரொம்பப் பிடிக்கும். ஒரு பாட்டு சொல்றேன். உங்களுக்கும் பிடிக்கும். இந்த ராகத்தின் அடிப்படையை வைத்துக்கொண்டு எம்.எஸ்.வி. சார் ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்தில் ‘அமுதத் தமிழில் கவிதை எழுதும் புதுமைப் புலவன் நீ’ என ஒரு பாடல் போட்டிருப்பார். உண்மையிலேயே இசையும் தமிழும் அமுதம்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x