Published : 17 Feb 2017 10:11 AM
Last Updated : 17 Feb 2017 10:11 AM

கவனகன் !

உங்களால் ஒரே நேரத்தில் உங்களைச் சுற்றி நிகழக்கூடிய பல்வேறு விஷ‌யங்களைக் கவனத்தில் வைத்துக்கொள்ள முடியுமா?

சிலர் முடியாது என்று சொல்லலாம், சிலர் கடினம் என்று சொல்லலாம். ஆனால் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வரும் திலீபனால் இது முடியும். ஏனென்றால், அவர் ஒரு கவனகர்!

அவரால் சாதராணமாகத் தன்னைச் சுற்றி நிகழும் பதினாறு விஷ‌யங்களைக் கவனத்தில் வைத்திருக்க முடியும். அவற்றைத் திருப்பிச் சொல்லவும் முடியும். உண்மையில் இவ்வாறு செய்வது ஒரு கலை. நம் பண்டைய தமிழரிடம் இருந்த கலை. இதைத்தான் கவனகம் என்கிறார்கள். அந்தக் கலைஞர்களைக் கவனகர் என்கிறார்கள்.

கவனகம் என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ‘அவதானம்’ என்று பொருள்படும். கவனகக் கலைஞர்களை அவதானி (அஷ்டாவதானி, தசாவதானி, சதாவதானி) என்றும் அழைக்கின்றனர்.

நினைவாற்றலின் உயர்ந்த வடிவமான இந்தக் கலைத்திறன் பண்டைய தமிழர்களிடம் வெகு சாதாரணமாகப் புழங்கிவந்தது. அதிகபட்சமாக நூறு விஷ‌யங்கள் வரை நமது முன்னோர்கள் கவனகம் செய்துள்ளனர். அதில் முக்கியமானவர் செய்கு தம்பிப் பாவலர். ஆனால் இன்றைய இளைஞர்கள் பலர், இரண்டு வரி திருக்குறளைக்கூட நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் இல்லாதவர்களாக உள்ளனர்.

இந்நிலையில், இந்தக் கலையில் சாதனைகள் பல‌ நிகழ்த்திவரும் 22 வயதேயான திலீபனைச் சந்தித்தோம்.

“த‌மிழர்களின் கிராமியக் கலைகள் பல, எவ்வாறு மெல்ல மெல்ல அழிந்து வருகிறதோ அதேபோலத்தான் கவனகக் கலையும் அழிந்து வருகிறது. இப்படி ஒரு கலை இருப்பதே நிறைய பேருக்குத் தெரியாது. கவனகக் கலை மதிநுட்பம் சார்ந்தது. நமது நினைவாற்றலை அதிகரிக்கக்கூடியது. என்னால் பதினாறு கவனகங்களைச் செய்ய முடியும்.

கவனக‌க் கலையைக் கற்றுக்கொள்வதன் மூலமாக நமது அன்றாட வாழ்க்கையின் பல்வேறு விஷ‌யங்களில், ஒரே சமயத்தில் கவனம் செலுத்த முடியும். அவற்றைத் திறம்படச் செய்யவும் முடியும்!” என்கிறார் திலீபன்.

தமிழகத்தில் தற்போது கவனகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் அந்தக் கலையைப் பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லை. அதனால் கவனகக் கலையானது அழியும் நிலையில் இருக்கிறது. இந்தச் சூழலில் கவனகம் மீதான ஆர்வத்தில் இவரைத் தேடி வருபவர்களுக்கு கவனகக் கலையைச் சொல்லித்தருகிறார் திலீபன்.

இதுவரை 140-க்கும் மேற்பட்ட மேடைகளில் தனது திறமையைப் பறைசாற்றியுள்ள திலீபன் கவனகக் கலையைத் தனது சொந்த முயற்சியில் கற்றுக்கொண்டுள்ளார். இவரது மானசீக குரு ‘கவனகக் கலையின் தந்தை’ என அறியப்படும் இராம.கனக சுப்புரத்தினம். அவரது நிகழ்ச்சிகளைக் குறுந்தகடுகளில் பார்த்தே, தான் கவனகக் கலையைக் கற்றுக்கொண்டதாக கூறுகிறார் இவர்.

“முயற்சியும் பயிற்சியும் ஆர்வமும் இருந்தால் கவனகக் கலையை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். முறையாக கவனகக் கலையைக் கற்றுக் கொள்ள ஆறு மாதங்கள் வரை ஆகும். ஒவ்வொரு கவனக‌மாகக் கூட்டிக்கொண்டே செல்ல வேண்டும். அதற்குப் பல‌ ஆண்டுகள் பிடிக்கும். 9-ம் வகுப்பில் 4 கவனகங்களில் ஆரம்பித்த நான் 16 கவனகங்களைக் கற்றுக் கொள்ள 8 ஆண்டுகள் ஆனது. எனவே இந்தக் கலையைக் கற்றுக்கொள்வதில் மிகவும் பொறுமை தேவை!” என்கிறார் இவர்.

திலீபன் வெறுமனே கவனகம் மட்டுமே செய்வதில்லை. அதனுடன் திருக்குறளையும் மக்களிடையே எடுத்துச் செல்கிறார். 1330 குறள்களையும் மனப்பாடமாகச் சொல்லக்கூடிய திறன் பெற்றவர் இவர்.

குறளின் எந்த வார்த்தையைச் சொன்னாலும் அந்தக் குறளைச் சொல்லக் கூடியவர். இவரது திருக்குறள் புலமையை அறிந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், திலீபனுக்குப் பாராட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். நாடாளுமன்றத்திலும் திருக்குறளை ஒப்புவித்துப் பலரால் பாராட்டப்பட்டிருக்கிறார் திலீபன்.

இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவைக் கொண்ட இவர்தான், கடந்த‌ 2013-ல் ஈழத்துக்கு ஆதரவாக லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட‌ எட்டு மாணவர்களில் ஒருவர் இவர். தமிழர்களிடம் தோன்றிய இந்தக் கலையையும் குறளையும் உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் தன் லட்சியம் என்கிறார் திலீபன்.

லட்சியம் வெல்லட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x