Last Updated : 19 Nov, 2013 09:08 PM

 

Published : 19 Nov 2013 09:08 PM
Last Updated : 19 Nov 2013 09:08 PM

சத்தம் செய்யும் யுத்தம்

மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட சத்த அளவான 50 60 டெசிபல், சென்னையில் நடுஇரவில்கூட பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. விழா இல்லாத மற்ற நேரங்களில் சராசரியாக 90-95 டெசிபலும், திருமணம், அரசியல் கூட்டம், கோவில் திருவிழா நேரங்களில் 110-120 டெசிபலும், தீபாவளி நேரத்தில் 130-140 டெசிபல் வரையிலும் அதிகரிக்கும் இரைச்சல், நமக்கு ஏற்படுத்தும் தீய விளைவுகளை இனிமேலாவது புரிந்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து 60-70 டெசிபல் அளவுக்கு அதிகமான சத்தத்தைக் கேட்கும்போது, நமது செவிப்பறை கொஞ்சங்கொஞ்சமாகச் செயலிழக்கிறது. இதனால் நம் மூளைக்குக்கொண்டு செல்லப்படும் ஒலியின் வேகமும் தொனியும் குறைவதால், அதற்கு மறுமொழி சொல்லும் நம் குரலின் தொனியின் அளவும் அதிகமாகிறது. இதனால்தான், அதிக சத்தம் உள்ள இடங்களில் பேசும் மனிதர்கள், தேவையைவிட அதிக சத்தமாக பேசுவது அனிச்சையாக நடைபெறுகிறது.

உடல்நல பாதிப்புகள்

நமது இதயத்திலிருந்து உடலெங்கும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகள் என்ற மெல்லிய நரம்புகள் அதிக சத்தம் மூலம் தளர்வடைந்து விரிகின்றன. இந்தத் தளர்ச்சி இதயத்தின் வேலைகளை கடினமாக்கி, நாளடைவில் அதன் செயல்திறனை பாதிக்கிறது. இதயம் பழுதடைவதால், அதைச் சார்ந்துள்ள நுரையீரல், மூளை, சிறுநீரகம் ஆகிய முக்கிய உறுப்புகள் அனைத்துக்கும் மறைமுகமாக கேடு ஏற்படுவதை சமீபத்திய ஆய்வுகள் உறுதி செய்கின்றன. லொபார்டி என்ற பெயரில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஒலி மாசுபாட்டால் உயர் ரத்தஅழுத்தம், படபடப்பு, காது கேட்கும்தன்மை போன்ற எல்லோரும் அறிந்த உடனடி பாதிப்புகள் மட்டுமில்லாமல் இன்சோம்னியா என்ற தூக்கமின்மை, குடல் அழற்சி, சிறுநீரகக் கோளாறுகள் போன்ற நீண்டகால உடல் உபாதைகளும் நமக்கு ஏற்படலாம்.

மும்பையில் ஆவாஸ்

‘நாட்டிலேயே அதிக சத்தம் உள்ள நகரம்’ என்று முன்பு கருதப்பட்ட மும்பை இப்போது மாறியிருக்கிறது. கடந்த மூன்று வருடங்களாக அங்கு கடைப்பிடிக்கப்படும் ஒலி மாசு கட்டுப்பாடுகள் தினசரி ஒலி அளவை மட்டுமின்றி, இரைச்சல் மிகுந்த கணேஷ் சதுர்த்தி, தாண்டியா என்ற கோலாட்ட விழா ஆகியவற்றின் சத்த அளவுகளையும் குறைத்திருக்கிறது.

மும்பையின் ஒலி மாசு கட்டுப்பாட்டு நெறி முறைகளுக்கு உந்துசக்தியாக விளங்கு வது Awaaz Foundation என்ற தன்னார்வு அமைப்பு. சுமைரா அப்துல் அலி 2006இல் தொடங்கிய இந்த அமைப்பு, மும்பையின் ஒலி மாசை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி இருக்கிறது.

1996இல் மீனவர்களின் நலனுக்காக ஒரு நிறுவனத்தை எதிர்த்து, உயர் நீதிமன்றம் வரை சென்று சாதகமான தீர்ப்பைப் பெற்ற இவர், மணல் கொள்ளை தடுப்பு, கட்டடத் தொழிலாளர் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

தொடர் பிரசாரம், நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தல் என்று ஒலி மாசுக்கு எதிராக சுமைரா தொடர்ந்து பணிபுரிந்தார். ஒலி மாசு கட்டுப்பாடு பிரசாரம் மக்கள் இயக்கமாக மாறி ஆரம்பித்தது. ஊடக ஆதரவு, மக்கள் பங்கேற்பு, ஸ்மார்ட் போன் போன்ற நவீன கருவிகளின் உதவியுடன் ஒலி மாசு அத்துமீறல் பதிவுகள் நிரூபிக்கப்பட்டன. இவற்றின் துணையுடன் அதிக சத்தத்துக்கு எதிரான கடுமையான சட்டங்கள் மும்பையில் இயற்றப்பட்டுள்ளன.

ஐந்து வருட சிறைவாசம் அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் என்ற அளவுக்கு ஒலி மாசுக்கு எதிரான சட்டங்கள் அங்கு உள்ளன. இதே நடைமுறைகள் தமிழகத்துக்கு என்றைக்கு வருமோ?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x