Published : 30 Aug 2016 10:20 AM
Last Updated : 30 Aug 2016 10:20 AM

வேலை வேண்டுமா?- சென்னை மெட்ரோ ரயிலில் இன்ஜினீயர் ஆகலாம்

சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் சேவை தற்போது கோயம்பேடு - ஆலந்தூர் இடையே இயக்கப்படுகிறது. அடுத்த கட்டமாக ஆலந்தூர் - விமானம் நிலையம் இடையேயும், அதன்பிறகு சின்னமலை - விமான நிலையம் இடையேயும் அதைத்தொடர்ந்து மற்ற வழித்தடங்களிலும் படிப்படியாகச் சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது.

மத்திய அரசு - தமிழக அரசின் கூட்டு நிறுவனமான சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பணியாளர்களையும் அலுவலர்களையும் அவ்வப்போது தேர்வுகள் நடத்திப் பணியமர்த்தி வருகிறது. அந்த வகையில், தற்போது, ஜுனியர் இன்ஜினீயர் (கிரேடு-2) பதவியில் 41 இடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.

இந்தப் பணிக்கு, மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமா பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் அவசியம். எ.ஸ்சி., எஸ்.டி. வகுப்பினர் எனில் 45 சதவீத மதிப்பெண் போதுமானது. மிக முக்கியத் தகுதி என்னவெனில் கண்டிப்பாகத் தமிழில் பேச, எழுத, வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இந்தப் பணிக்குப் பி.இ., பி.டெக். பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியாது.

வயது வரம்பு 28 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனினும், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், எம்.பி.சி., டி.என்.சி. (சீர்மரபினர்) பிரிவினருக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும். தகுதியான நபர்கள் எழுத்துத்தேர்வு, உளவியல் தேர்வு (Psychometric Test ), தமிழ் தேர்வு (proficiency in Tamil ) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைனில் நடத்தப்படும் எழுத்துத்தேர்வில் நுண்ணறிவு (40 சதவீதம்), பொறியியல் பாடம் (60 சதவீதம்) தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். வங்கிப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளைப் போலத் தவறான விடைகளுக்கு மைனஸ் மதிப்பெண் எதுவும் அளிக்கப்படாது.'

ஜுனியர் என்ஜினியர் (கிரேடு-2) பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் ரூ.8000-14,140 என்ற ஊதிய விகிதத்தில் பணியமர்த்தப்படுவர். அதோடு அகவிலைப்படி, வீட்டுவாடகைப்படி, மருத்துவப்படி, இ.பி.எஃப், கிராஜுவிட்டி, காப்பீடு எனப் பல்வேறு படிகளும், சலுகைகளும் உண்டு. பயிற்சிக் காலத்தில் அடிப்படைச் சம்பளமும், அதற்குரிய அகவிலைப்படியும் மட்டும் வழங்கப் படும். பயிற்சி முடிந்த பிறகு அனைத்துப் படிகளும் சலுகைகளும் கிடைக்கும்.

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி செய்வது குறித்த உறுதிமொழி அளிக்க வேண்டியது அவசியம். உரிய கல்வித்தகுதியும், வயது வரம்புத் தகுதியும் உடைய டிப்ளமா பட்டதாரிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணையதளத்தின் ( >www.chennaimetrorail.org) மூலம் செப்டம்பர் மாதம் 23-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் வசதிக்காக மாதிரி ஆன்லைன் தேர்வு (Mock online Test) விரைவில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உள்ளது. கூடுதல் விவரங்களைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x