Last Updated : 23 Sep, 2016 11:22 AM

 

Published : 23 Sep 2016 11:22 AM
Last Updated : 23 Sep 2016 11:22 AM

கோல் போடப்போகும் சென்னை!

சென்னையின் கால்பந்து காதலர்களுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ‘கிக் - ஆஃப்’ என்ற தெரு கால்பந்து அரங்கம் ‘ஈசிஆர் ஸ்பீட்வே’யில் செயல்பட்டு வருகிறது. கால்பந்தை நேசிக்கும் சென்னைவாசிகளின் ‘ஃபேவரிட் ஸ்பாட்’டாக இந்த இடம் விளங்குகிறது. சமீபத்தில், ‘கிக் ஆஃப்’-ன் இன்னொரு கால்பந்து அரங்கம் நந்தனம் சேமியர்ஸ் சாலையில் திறக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டாடும் விதமாகவும், இளைஞர்களிடம் கால்பந்து விளையாட்டை ஊக்கப்படுத்தும்விதமாகவும் ‘டைட்டன்ஸ் கப்’ என்ற போட்டியை ‘கிக் - ஆஃப்’ கால்பந்து அரங்கம் அறிவித்திருக்கிறது. இந்தப் போட்டி செப்டம்பர் 24, 25 தேதிகளில் சேமியர்ஸ் சாலையில் இருக்கும் ‘கிக் - ஆஃப்’ அரங்கத்தில் நடக்கவிருக்கிறது.

“சென்னை நகருக்குள்ளேயே ஒரு கால்பந்து அரங்கத்தை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு நீண்ட நாட்களாக இருந்துவந்தது. ஒரு கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகனாக இந்த அரங்கத்தை உருவாக்குவதின் முக்கியத்துவம் எனக்குத் தெரியும். ஈசிஆரில் கடந்த 2014-ல் எங்களுடைய கால்பந்து அரங்கம் உருவானபிறகு, எப்படியாவது மாதத்துக்கு ஒருமுறை ஒரு போட்டியை நடத்திவிடுவோம். அப்படி நடத்தும்போது, கால்பந்து விளையாட்டில் ஆர்வமிருக்கும் நிறைய இளைஞர்களைச் சந்தித்திருக்கிறேன். இவர்களைப் பெரிய அளவில் ஊக்கப்படுத்தும் முயற்சியாகத்தான் இப்போது இந்த ‘டைட்டன்ஸ் கோப்பை’ (Titans Cup) போட்டியை நடத்துகிறோம். இந்தப் போட்டி சேமியர்ஸ் சாலை ‘கிக் ஆஃப் அரங்கத்தில் நடக்கும் முதல் போட்டி” என்று சொல்கிறார் ‘கிக் - ஆஃப்’ அரங்கத்தின் நிர்வாகி ரோஹித் ரவீந்திரன்.

இந்த ‘டைட்டன்ஸ் கோப்பை’ போட்டி இரண்டு பிரிவுகளாக பதினேழு வயதுக்குட்பட்டவர்கள் (Under-17), இருபது வயதுக்குட்பட்டவர்கள் (Under-20) என நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி ஐந்து விளையாட்டு வீரர்களைக் கொண்ட ‘5 a Side' போட்டியாக இருக்கும்.

பதினேழு வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் 32 அணிகளும், இருபது வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் 24 அணிகளும் இடம்பெறவிருக்கின்றன. இதில், பதினேழு வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்குக் கோப்பையும், ஒரு மணி நேரம் ‘கிக் ஆஃப்’ அரங்கத்தில் விளையாடுவதற்கான இலவச நுழைவுச்சீட்டும் வழங்கப்படும்.

இருபது வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் வெற்றிபெறும் அணிக்குக் கோப்பையும் பரிசுத்தொகையாக 12,500 ரூபாயும் கிடைக்கும். ‘ரன்னர் அப்’ அணிக்கும் கோப்பையும் 7,500 ரூபாய் பரிசுத்தொகையும் நிர்ணயம்செய்யப்பட்டிருக்கிறது. இது தவிர ‘மோஸ்ட் வேல்யுபல் பிளேயர்’ (Most Valuable Player) விருதும் வழங்கப்படவிருக்கிறது.

“கால்பந்து விளையாட்டை சென்னை இளைஞர்களிடம் இன்னும் தீவிரமாகக் கொண்டுசெல்வதற்காக ஒரு கால்பந்து பயிற்சி மையத்தை அமைக்கும் திட்டமும் எங்களுக்கு இருக்கிறது. விரைவில் சென்னைக்குள் சிறுவர்கள், இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் ஒரு கால்பந்து அகாடமியை எதிர்பார்க்கலாம்” என்கிறார் ரோஹித்.

இந்த ‘டைட்டன்ஸ் கோப்பை’ போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் அணியினர் செப்டம்பர் 23-ம் தேதி பதிவுசெய்துகொள்ளலாம். அதுதான் கடைசித் தேதி என்பதை நினைவில் கொள்க. பதினேழு வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் கலந்துகொள்ளும் அணிக்கு பதிவுக் கட்டணமாக 2,000 ரூபாயும், இருபது வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் கலந்துகொள்ளும் அணிக்கு 2,500 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு: ரோஹித் ரவீந்திரன் 7397 577 677

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x