Last Updated : 17 Nov, 2014 10:50 AM

 

Published : 17 Nov 2014 10:50 AM
Last Updated : 17 Nov 2014 10:50 AM

ஒரு பிட்சுவின் நெடும் பயணம்

மெகஸ்தனிஸ் இந்தியாவுக்கு வந்துவிட்டுச் சென்ற 700 ஆண்டுகள் கழித்து, ஃபாஹியான் என்ற பவுத்த பிட்சு சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்தார். ‘பவுத்த ராஜ்ஜியங்களின் குறிப்பு' என்ற நூலை 1,500 ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதினார். இந்தியாவின் அன்றைய நிலை பற்றி, அதில் ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன.

இந்தியாவுக்கு வந்த பிரபலமான முதல் சீன யாத்ரீகரான அவருடைய வரலாறு சுவாரசியமானது. தங்களுடைய கடைசி மகனான ஃபாஹியானை பவுத்த பிட்சுவாக்க வேண்டும் என்று, அவருடைய பெற்றோர் இளம் வயதிலேயே பவுத்த மடாலயத்துக்கு அனுப்பிவிட்டனர். அவருக்கு 10 வயதானபோது, பெற்றோர் இறந்துவிட்டனர். ஆனாலும், தொடர்ந்து மடாலயத்தில் பயிற்சி பெறுவது என்று ஃபாஹியான் தீர்மானித்தார்.

தொடங்கியது பயணம்

ஃபாஹியான், இருபதாவது வயதில் முழுமையான பயிற்சி பெற்ற பவுத்த பிட்சுவானார். ஐந்தாண்டுகளுக்குப் பின் கி.பி. 399-ல் இந்தியா செல்ல அவர் தீர்மானித்தார். மலைகளையும் கடல்களையும் கடந்து ஆயிரக்கணக்கான கி.மீ. அவர் பயணம் செய்தார். தாய்நாட்டைவிட்டு வெளியேறி 14 ஆண்டுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில்

ஆறு ஆண்டுகள் பயணத்திலும், ஆறு ஆண்டுகள் இந்தியாவிலும், இரண்டு ஆண்டுகள் இலங்கையிலும் கழித்தார். பவுத்த மதத்தை உண்மையாகப் பின்பற்றுபவர் என்ற முறையில் பவுத்த புனிதத் தலங்களுக்குச் சென்று தரிசிப்பது, பவுத்த மத நூல்களையும் சின்னங்களையும் சேகரிப்பதே அவரது பயணத்தின் முதன்மை நோக்கமாக இருந்தது.

பரவிய பவுத்தம்

மவுரியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு மத்திய ஆசியாவில் இருந்து மதுரா வரை, ஒரு மாபெரும் பேரரசை நிறுவினார் குஷான அரசர் கனிஷ்கர் . அவர் புத்த மதத்தைத் தழுவினார். தனது பேரரசெங்கும் அம்மதத்தைப் பரப்பினார்.

அங்கிருந்து சீனாவிலும் வேறு பல நாடுகளிலும் அது பரவியது. ஃபாஹியான் யாத்திரை புறப்படுவதற்கு வெகு காலத்துக்கு முன்பே குஷான பேரரசு மறைந்துவிட்டது. ஆனால், அதன் மூலம் பரவிச் செல்வாக்குப் பெற ஆரம்பித்திருந்த புத்த மதம், சம்பந்தப்பட்ட நாடுகளில் இன்னமும் தழைத்திருந்தது.

புத்தரைத் தேடி

சீனாவில் பவுத்த மதம் செல்வாக்குப் பெற ஆரம்பித்த பின்னர், பல மடாலயங்கள் நிறுவப்பட்டிருந்தன. மத நூல்கள் சிலவும் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. இருந்தாலும் சீனப் பவுத்த பிட்சுகள் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய மதச் சடங்குகளைத் தெளிவாக அறிந்திருக்கவில்லை.

அது மட்டுமல்லாமல், புத்தருடைய உபதேசத்தின் மெய்ப்பொருளை அறிந்துகொள்ள அவர்கள் விரும்பினார்கள். அந்த ஆவலில் ஏராளமான பவுத்தத் துறவிகளும் அறிஞர்களும் புத்தர் வாழ்ந்த, புத்த மதம் தழைத்திருந்த இந்தியாவுக்குத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தனர். மெகஸ்தனிஸ் காலத்துக்குப் பிந்தைய இந்தியாவின் நிலைமை பற்றி ஃபாஹியானின் எழுத்து பல முக்கியக் குறிப்புகளைத் தருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x