Last Updated : 13 Jan, 2017 10:24 AM

 

Published : 13 Jan 2017 10:24 AM
Last Updated : 13 Jan 2017 10:24 AM

திரையிசைப் பயணம்: தமிழ் சினிமாவில் நாட்டுப்புற இசையின் தாக்கம்

சினிமா பேசத் தொடங்கிய பிறகு செவ்வியல் இசைதான் திரையின் இசையானது. அதன் விற்பன்னர்கள் சினிமாவுக்குப் பாடினால் ‘தீட்டு’ என்று கருதினார்கள். செவ்வியல் இசைக்கே இந்த நிலை என்றால், ‘பாமரப் பாடல்கள்’ என்று அழைக்கப்பட்ட நாட்டுப்புற இசை திரையில் நுழைந்தபோது, எப்பேர்ப்பட்ட எதிர்ப்பு இருந்திருக்கும்? செவ்வியல் இசையின் செல்வாக்கைத் துளைத்துக்கொண்டுதான் நாட்டுப்புற இசை திரையில் நுழைந்தது. திரையிசையில் நாட்டார் இசைக்கருவிகளும் நுழைந்த பிறகு அதன் பரிமாணமும் முகமும் மாறத் தொடங்கின. இதைப் பற்றிக் கலையுலகின் பிதாமகர்களில் ஒருவரான கலைஞர் மு. கருணாநிதியிடம் பத்தாண்டுகளுக்கு முன்பு பேசிக்கொண்டிருந்தபோது கேட்டேன்.

“மவுனத் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கிய கால கட்டத்திலேயே நாட்டார் இசை திரைக்கு வந்துவிட்டது” என்று கூறி ஆச்சரியப்படுத்தினார். “நான் சிறுவனாக இருக்கும்போது, மவுனத் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். திரையில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, திரையின் முன்னால் தெருக்கூத்து இசைக்கலைஞர்கள் உட்கார்ந்துகொண்டு ஆர்மோனியம், தாள வாத்தியங்களை வைத்துக்கொண்டு திரையில் வரும் ஒவ்வொரு வேடத்துக்கும் ஏற்பப் பாடிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் வித்வான்கள் அல்ல. மக்களிடமிருந்து தங்களுக்கான இசையை எடுத்துக்கொண்ட நாட்டார் கலைஞர்கள்தான்” என்று கூறினார். உண்மையும் அதுதான்.

கிராமியம் செலுத்திய ஆதிக்கம்

இசைமேதை ஜி. ராமநாதன் நாட்டார் இசையின் கலவை திரையிசைக்குத் தேவை என்பதை உணர்ந்துகொண்டு ராகக் கட்டுக்கோப்புக்குள் நாட்டார் இசைக்குத் திரையில் வடிவம் தந்தார். அன்றைய பரதநாட்டிய ஆசான்களில் ஒருவரான ‘தண்டாயுதபாணிப் பிள்ளையும் “நம்ம சினிமால நாட்டியம் எங்கேயிருக்கு? எல்லாம் டம்பாங்குத்துதான்”: என்று கடிந்து எழுதியிருக்கிறார். ஆக, நாட்டார் பாடல்களின் தாக்கத்தால் உருவான துள்ளலான திரையிசைப் பாடல்களின் பயணம் நாற்பதுகளின் ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டது. அன்றைய திரையிசையில் ஆதிக்கம் செலுத்திய எஸ்.வி. வெங்கட்ராமன், கே.வி. மகாதேவன் தொடங்கிப் பெரும்பாலானவர்கள் கிளாசிக்கல் பரம்பரையிலிருந்து வந்தவர்கள்.


ஜி.ராமநாதன்

அவர்கள் திரையிசையைச் செவ்வியல் இசையாக மட்டுமே கொடுத்தார்கள். அதில் கலப்பு ஏற்படாமல் தூய்மை பேணப்பட வேண்டும் என்று பார்த்துக்கொண்டார்கள். ஆனால், அப்படிப்பட்ட தூய்மையில் இருந்த பாண்டியத்தியமும் மேதமையும் பாமர மக்களுக்கு அந்த இசையைக் கொண்டு சேர்க்கவில்லை. மகிழ்வூட்டக்கூடிய, ரசிக்கக்கூடிய இசையாகப் பாமர மக்களின் புரிதலில் செவ்வியல் இசை இருக்கவில்லை. உயர்ந்த தரமும் நுட்பமான ராக சங்கதிகளும் ஆலாபனைகளும் நிறைந்த கலையான கிளாசிக்கல் பாமர மக்களைச் சென்றடைய அவையே தடையாக இருந்தன.

பெரும்பான்மையான சாமானிய மக்கள் கிராமங்களில் வசிப்பவர்கள். குலவையும் கோலாட்டமும் கும்மியும் தாலாட்டும் ஒப்பாரியும் லாவணியும் எசப்பாட்டும் தெம்மாங்கும் காவடிச்சிந்தும் பாடி ஆடுகிறவர்கள் என்பதை கிளாசிக்கல் திரையிசை மேதைகள் உணர்ந்துகொண்டார்கள். நாட்டார் கலைகளையும் அதனோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்கத் தெரியாத கிராமியம்தான் அவர்களது வாழ்வில் கலந்திருந்தது; எனவே, அவர்களது அன்றாட வாழ்வில் வழிந்தோடுகிற இசையையும் அதன் வடிவங்களையும் வரிகளையும் ஏன் திரையிசையில் பயன்படுத்தக் கூடாது என்று நினைத்தார்கள்.

ஆகவே, தனி இசைத்தட்டுக்களாக, பாமரப் பாடல்கள் என்று அன்று அழைக்கப்பட்ட நாட்டார் பாடல்கள் மக்கள் மத்தியில் ஒலிக்கத் தொடங்கின. அப்படி முதலில் ஒலித்த குரல் ஒரு பெண்ணுடையது. எனக்குத் தெரிந்து அப்படித் திரையிசையில் முதன்முதலில் ஒலித்த “வண்ணான் வந்தானே வண்ணாரச் சின்னான் வந்தானே” என்ற பாடலைக் குறிப்பிடலாம். உழைக்கும் மக்களின் பாடல்களை பி.எஸ்.சிவபாக்கியம் அம்மாள் பாடி தனி கிராமஃபோன் ஒலித்தட்டுகளாக வெளிவந்தன. கிளாசிக்கல் இசைக்கு நேர் எதிரிடையாக 1930-களில் இசைத்தட்டுகளில் வெளியாகிப் பிரபலமானது இந்த மக்களின் இசை. எதிர்ப்புகளை மீறி அன்று சிவபாக்கியம் அம்மாளின் பாமரப் பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பாலும் புகழாலும் அவரது பல பாடல்கள் திரையிலும் இடம்பெறத் தொடங்கின. அதுமட்டுமல்ல; அவரும் திரையில் நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார்.

துக்கடாக்களின் வருகை

மக்களின் இசையைத் திரையிசைக்கு இடம்பெயர்த்த ஆரம்பகாலக் கலைஞர்களில் கலைவாணருக்கு முன் அடையாளம் பெற்றவர் காளி என். ரத்னம். ராஜா சாண்டோவால் வளர்க்கப்பட்ட ரத்னம் சாமானிய மக்களின் வாழ்க்கையிலிருந்து நகைச்சுவையை எடுத்து அதைத் திரை வழியாகவும் நாடகம் வழியாகவும் பரிமாறியவர். திரையுலகில் சாஸ்த்ரீய சங்கீதம் ஆட்சிய செலுத்திய 40-களில் சங்கீதப் பாடல்களுக்கு மத்தியில் பாமர மக்கள் படத்தைத் திரும்பத் திரும்ப வந்து பார்க்க வேண்டும் என்பதற்காக ‘துக்கடா’ஒன்றை இடம்பெறச் செய்வார்கள்.


காளி.என்.ரத்னம்

துக்கடா என்பது வேறொன்றும் அல்ல; பாமர மக்களின் பாடல்கள்தான். 1947-ல் வெளியான ‘கன்னிகா’ படத்தில் காளி கோவில் பூசாரியாக காளி என். ரத்னம் உடுக்கையைக் கையில் பிடித்துக்கொண்டு உடுக்கடிப் பாடலாகவும் காவடிச் சிந்தாகவும் கன்னிச் சிந்தாகவும் பாடிய பாடல் அப்படியே படத்தில் இடம்பெற்றது. அவருடன் பல படங்களில் பாடி நடித்த சி.டி.ராஜகாந்தமும் மக்கள் பாடல்களைப் பாடுவதில் புகழ்பெற்றார்.

காவடிச் சிந்து, கன்னிகள், தெம்மாங்கு போன்ற வடிவங்கள் எல்லாம் மக்கள் இட்டுக்கட்டிக் கண்டறிந்த பாமரப் பாட்டு வடிவங்கள். பாரதி எழுதிய பல பாடல்கள் மக்களின் இசைமெட்டான காவடிச் சிந்தில் எழுதப்பட்டிருப்பதைக் காண முடியும்.

‘தன்னன்ன தானினம் தன்னானே –தர

தன்னன்ன தானினம் தன்னானே’

- என்ற காவடிச் சிந்தில்தான்

‘செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே’

என்று பாரதி பாடினார். பாரதி மட்டுமல்ல; அவரது வழியில் வந்த அருணாசலக் கவிராயர் உள்ளிட்ட முக்கிய கவிகள் பலர் அதை முயன்று சாமானிய மக்களை எளிதில் சென்றடைந்தார்கள்.

உண்மையின் தரிசனம்

மகாகவிகளே உணர்ந்து வைத்திருந்த இந்த உண்மையின் தரிசனம் அன்றைய திரையிசை ஜாம்பவான்களையும் எட்டியதில் ஆச்சரியமில்லை. திரையிசையைப் பொருத்தவரை அன்று பிராமணர்களைத் தவிர யாரும் நுழைய முடியாது என்று எண்ணும்விதமாக அதுவொரு கோட்டையாகத்தான் இருந்தது. ஆனால், மக்களின் இசை, அந்தக் கோட்டையை அசைத்துப் பார்த்தது. காரணம் சாமானிய மக்களையும் நமது மெட்டுக்கள் சென்றடைய வேண்டும், அவர்கள் மத்தியில் நமது பாடல்கள் பிரபலமாக வேண்டும் என்று நினைத்தார்கள்.

அதற்கு அந்த எளிய பாமரப் பாடல் மெட்டுக்களின் சாயலைத் தங்கள் திரையிசையில் கலப்பது தவறில்லை என்று அவர்கள் மனமாற்றம் அடைந்தார்கள். அதன் பிறகு சாஸ்த்ரீய சங்கீதமாக இருந்த திரையிசையுடன் நாட்டார் இசையும் மெல்லத் தன் பயணத்தைத் தொடங்கியது. இதற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த ‘வள்ளித் திருமணம்’ போன்ற நாடகங்களில் இருந்த நாட்டார் பாடல்களை முதலில் திரையிசைக்குக் கொண்டுவந்தார்கள்.

“ தாகம் தீர்ந்ததடி அன்னமே…-எந்தன்

மோகம் தணியவில்லை சொர்ணமே”

போன்ற காவடிச் சிந்து பாடல் மெட்டில் வள்ளித் திருமணம் நாடகத்தில் இருந்த கிண்டல், கேலி, பாடல்கள் எல்லாமே நாட்டார் பாடல்கள்தான். இப்படிக் காவடி சிந்து பாடல் மெட்டின் துணையோடு தொடங்கிய நாட்டார் பாடல்களின் பயணம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. அந்தப் பயணத்தை அடுத்தவாரம் பார்க்கலாம்.

படங்கள் உதவி: ஞானம்
( ‘தி இந்து பொங்கல் மலர்’ 2017-ல் இடம்பெற்ற கட்டுரையின் முதல் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x