Published : 04 Feb 2014 13:12 pm

Updated : 06 Jun 2017 19:09 pm

 

Published : 04 Feb 2014 01:12 PM
Last Updated : 06 Jun 2017 07:09 PM

கொல்வதுதான் இறுதித் தீர்வா?

ஊட்டியில் தொட்டபெட்டாவை அடுத்துள்ள கிராமங்களில் தனது இருப்பிடம் மாறி, ஊனமுற்றதன் காரணமாக (ஊனத்துக்கான சரியான காரணம் இப்போது வரை அறிவிக்கப்படவில்லை) ஆட்கொல்லி வேங்கை புலி சுட்டு கொல்லப்பட்டதன் தொடர்ச்சியாய் `தி இந்து’ நாளிதழில் இரு காட்டுயிர் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

ஒருவர் ஆட்கொல்லிப் புலிகள் பரம்பரையாகவே ஆட்கொல்லியாக மாறும், அதனால் அவற்றைக் கொல்வதில் தவறில்லை என்று கூறியிருந்தார். மற்றவர், ஜிம் கார் பெட்டை மேற்கோள் காட்டி, புலி காட்டில் வாழும் தகுதியை இழந்து விட்டதால் சுட்டதில் தவறில்லை என்று எழுதியிருந்தார்.


இவற்றை எல்லாம் வைத்து யோசிக் கும்பொழுது, பழைய காட்டுயிர் ஆர்வலர்-ஆராய்ச்சியாளர்களின் பல அறிவுபூர்வமான கூற்றுகளை நமது கருத்துக்கேற்ப மாற்றிப் பயன்படுத்துவது புலப்படுகிறது.

ஜிம் கார்பெட் தனது வாழ்நாளில் ஆட்கொல்லிப் புலிகளை வேட்டையாடிய அனுபவங்களைப் படித்த எவரும், ஊட்டியில் புலி சுட்டுக் கொல்லப்பட்ட விதத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நூற்றுக்கணக்கான மக்கள், ஐம்பது அறுபது வனக்காவல் மற்றும் அதிரடிப் படை வீரர்களுடன் புலியைக் கிளப்பிவிட்டு, 36 குண்டுகள் துளைக்கக் கொன்றிருக்கிறார்கள் (தாரை தப்பட்டை பேண்டு முழங்காததுதான் குறை!).

கார்பெட்டைப் போலத் தனியனாய், தடமறிந்து, நடந்து சென்று கொல்லவில்லை. கார்பெட்டைப் போல இது தான் ஆட்கொல்லிப் புலியா என்று கணித்தும் பார்க்கவில்லை. காரணம், காட்டில் தடமறிதல் என்ற கலை அற்றுப்போனதுதான். தடமறிதலில் இன்னும் சில காட்டுவாசிகளே சிறந்து விளங்குகின்றனர். அவர்களது திறனும் அடுத்த தலைமுறைக்குப் போகாமல் வீணாகிறது.

ஏனெனில், அவர்களும் ஒரு கூலியைப் போல நடத்தப்படுவதுதான். ஆனால் பல காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், ஆர்வலர்கள் இன்றும் அவர்களது உதவியையே நாடிவருகின்றனர். ஆனால், அவர்களுக்கு ஸ்பெஷலிஸ்ட் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை! இன்னும் அடித்தட்டு ஊழியர்தான்!

ஊட்டியிலும் பொம்மன் என்ற பழங் குடியின நண்பரின் உதவியோடுதான் இந்தப் புலியைச் சுட்டிருக்கின்றனர். ஆனால், அவரது பங்களிப்பு பற்றி எந்தப் பத்திரிகையும் எழுதவில்லை, காட்டிலாகாவும் கூறவில்லை.

மற்றொரு விஷயம் - ஆட்கொல்லியைக் கொல்வதுதான் நல்லது என்ற கருத்தின் அடிநாதம் - மனிதன்தான் உயர்ந்தவன், அவனே இங்கு வாழப் பிறந்தவன், மற்றவை எல்லாம் அவனுக்குப் பின்னர்தான் என்ற சித்தாந்தம்! அது சரியென்றால், நாம் பல யானைகளைக் கொல்ல வேண்டி வரும். ஏனெனில் அவை பல உயிர்களைச் சிதைக்கின்றன. சிறுத்தைகளைக் காவு வாங்க வேண்டும். ஏனெனில், அவை ஊரில் நுழைந்து உபத்திரவம் தருகின்றன!

காட்டுயிர் மருத்துவர் டாக்டர் கே எனப்படும் கிருஷ்ணமூர்த்தியின் வரலாற்றை அறிந்தவர்கள் அல்லது அவருடன் இருந்தவர்கள் அவர் எவ்வாறு மயக்க மருந்து குண்டை (Tranquiliser dart) பயன்படுத்தினார் என்பதை அறிவர். அவரைப் போல ஒருவர் இருந்திருந்தால், இதைப் போன்ற சம்பவம் நடந்திருக்குமா என்பது சந்தேகமே. இவை எல்லா வற்றுக்கும் காட்டுயிர்கள், இயற்கை யின் பால் அவரைப் போன்ற ஈடுபாடு இல்லாததும் அவரைப் போன்றவர் களை ஊக்குவிக்காததும்தான் காரணம்.

எனவே, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமெனில், இதன் மூலக் காரணமான காடுகள், இரை விலங்குகள் சுருங்குவதைத் தடுக்க வேண்டும். மேலும் காடுகளுக்கு அடுத்துள்ள இடைப்படு பகுதிகளில் (Buffer) மனிதன் வாழிடமாக இல்லாமல் இருக்க வேண்டும். இதைப் போன்ற ஆட்கொல்லிகளைக் குறைந்தபட்சம் கருணைக் கொலையாவது (Mercy killing) செய்ய வேண்டும்-வேறு வித மான மறுவாழ்வு முறைகள் சாத்திய மில்லாதபோது. சுட்டுப் பிடிப்பது என்பது ஒரு நல்ல தீர்வு ஆகாது.

ஏனென்றால், 1995ல் சிக்மகளூரில் மனிதர்களை சிறுத்தை தாக்க ஆரம்பித்தபோது 17 சிறுத்தைகள் கொல்லப்பட்டன. ஆனால்

பிரச்சினைக்குக் காரணம் ஒரேயொரு சிறுத்தைதான்.

என்றுமே மனித இனம் மாறுபட்ட கருத்துகளையும் கொள்கைகளையுமே கண்டு வந்துள்ளது. உதாரணமாக, "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்ற வள்ளலாரும், "மனிதனே மிருகம் போலத்தான், அதனால் புலால் உண்பதுதான் சரி யான வழி" என்ற பெரியாரும் இந்த நாட்டில்தான் வாழ்ந்தனர். யார் சரி, யார் தவறு என்ற பேச்சு வாக்கு வாதத்தை வேண்டுமானால் வளர்க்கும். தீர்வு கிடைக்காது.

- கட்டுரை ஆசிரியர் காட்டுயிர் ஆர்வலர்
தொடர்புக்கு: hkinneri@gmail.com


ஜிம் கார்பெட்எதிர்வினைதொட்டபெட்டாஆட்கொல்லிப் புலிகள்புலி வேட்டைசுட்டுக் கொலை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x