Last Updated : 29 Apr, 2014 09:37 AM

 

Published : 29 Apr 2014 09:37 AM
Last Updated : 29 Apr 2014 09:37 AM

நலம் தானா?- கோடை சரும நோய்களை தடுப்பது எப்படி?

அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துவிட்டதுபோல், இப்போதே வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலின் கொடுமை தாங்காமல் உடலில் வெப்ப நோய்களும் வரத் தொடங்கிவிட்டன. கொடூரமாகக் கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்தால், சரும நோய்கள் வருவது அதிகமாகிவிட்டது. வேனல்கட்டியில் தொடங்கி வெப்பப் புண் வரை பல நோய்கள் சருமத்தைப் பாதிக்கின்றன. என்றாலும், நம் உணவிலும் உடையிலும் சில மாற்றங்களைச் செய்துகொண்டால், இவற்றை வரவிடாமல் தடுப்பதும் எளிது.

சருமம் கறுப்பாகிறது, ஏன்?

சருமத்துக்குப் போதிய பாதுகாப்பு இல்லாமல் வெயிலில் அதிக நேரம் அலைகிறவர்களுக்குச் சருமம் கறுப்பாகிவிடுவதைக் கவனித்திருப்பீர்கள். இதற்குக் காரணம், சூரியக் கதிர்கள் அதிக வெப்பத்துடன் நேரடியாகச் சருமத்தைத் தாக்கும்போது, அதிலுள்ள பி வகை புறஊதாக் கதிர்கள் சருமத்தின் செல்களிலுள்ள டி.என்.ஏ.க்களை அழிக்கின்றன. அந்த அழிவை ஈடுகட்டுவதற்காகச் சருமத்துக்குக் கறுப்பு நிறம் தருகின்ற மெலனின் நிறமிகள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. இதன் விளைவால், சருமம் கறுத்துவிடுகிறது.

சருமம் தன்னைத்தானே சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக எடுத்துக்கொள்கிற தற்காப்பு நடவடிக்கை என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்.

சருமம் கறுப்பாவதைத் தடுக்கக் கடுமையான வெயிலில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் அலையக் கூடாது, உச்சி வெயிலில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் என்பதால், பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பதுதான் சருமத்துக்கு நாம் தருகின்ற பாதுகாப்பு. இந்த நேரத்தில் அவசியம் வெளியில் செல்ல வேண்டுமென்றால், எஸ்.பி.எஃப். 25 ( Sun protecting factor 25) என்றுள்ள சன்ஸ்கிரீன் லோஷனை உடலின் வெளிப்பகுதிகளில் தடவிக்கொண்டு செல்லலாம்.

சருமத்தில் எரிச்சல்

அக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது 42 டிகிரி சென்டிகிரேடுக்கு மேல் வெயில் கொளுத்தும். அப்போது புற ஊதாக் கதிர்களின் உக்கிரத்தைத் தாங்கமுடியாமல், சருமமும் அதைச் சார்ந்த ரத்தக்குழாய்களும் விரிந்து சிவந்துவிடும். அந்தவேளையில், CXCL5 எனும் புரதம் சருமத்தில் உற்பத்தியாகும். இது அருகிலுள்ள நரம்புகளைத் தூண்டும். இதன் விளைவால் சருமத்தில் எரிச்சலும் வலியும் ஏற்படும். இந்தப் பாதிப்புள்ளவர்கள், மருத்துவரை அணுகி வலிநிவாரணி மாத்திரைகள், எரிச்சலைக்குறைக்கும் களிம்புகளைப் பயன்படுத்திப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம்.

‘வெப்பப் புண்’ ( Sun Burn) என்று அழைக்கப்படுகின்ற இந்தப் பிரச்சினையை எளிதில் தடுத்துவிடவும் முடியும். வெயிலில் செல்வதற்கு முன்பாக, உடலில் வெளியே தெரியும் பகுதிகளில் ஏற்கெனவே சொன்ன சன்ஸ்கிரீன் லோஷனைத் தடவி, அரை மணி நேரம் கழித்துச் செல்வது, புறஊதாக் கதிர்வீச்சிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க எளிய வழி.

மேலும், பருத்தி ஆடைகளை அணிவதும், சருமத்தை முழுமையாக மறைக்கக்கூடிய குளோஸ் நெக் மற்றும் முழுக்கை ஆடைகளை அணிவதும் சரு மத்துக்குப் பாதுகாப்பு தரும். கருப்பு நிற ஆடைகளை அணிந்தால், அவை சூரிய ஒளிக் கதிர்களை அதிகமாக உறிஞ்சும். இது சரும எரிச்சலை அதிகப்படுத்தும். ஆகவே, கோடையில் வெள்ளை நிற ஆடைகளை அணிவதே நல்லது.

சரும வறட்சி

கோடையில் நமக்கு வியர்வை அதிகமாகச் சுரந்து வெளியேறுகிறது. இதனால் சருமத்திலுள்ள நீர்தன்மை வற்றிவிடுகிறது. அதை ஈடுகட்டுமளவுக்கு அடிக்கடி நாம் தண்ணீர் அருந்த வேண்டும். அப்படி அருந்தாதபோது, சருமம் வறண்டுவிடும். அடுத்து, சருமத்தில் சீபம் எனும் எண்ணெய்ப் பசையுள்ள ஒரு கொழுப்புப் பொருள் சுரக்கிறது. இதுதான் சருமத்தை வறட்சி அடையாமல் பார்த்துக்கொள்கிறது. கோடையில் நாம் குளிக்கும்போது அழுக்கு போகக் குளிக்க வேண்டும் என்று கருதி, சருமத்தை மிக அழுத்தமாகத் தேய்த்துக் குளிப்போம். இது சருமத்தில் உள்ள எண்ணெய்ப் படலத்தை அகற்றிவிடும். இதனாலும் சருமம் வறண்டுவிடுகிறது.

கோடையில் தினமும் இரண்டு முறை அழுக்கு போகக் குளிக்க வேண்டும் என்பது சரிதான். அதற்காகச் சருமத்தை அழுத்தி அழுத்தித் தேய்க்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. குளிர்ந்த நீரில்தான் குளிக்க வேண்டும் என்பதுமில்லை. சாதாரணத் தண்ணீரில் குளித்தால் போதும். வெந்நீர் அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சருமம் வறட்சி அடையாமலிருக்கத் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். பழங்கள், பழச்சாறுகள், இளநீர், மோர், பானகம், சர்பத் போன்றவற்றை அதிகமாகக் குடிக்க வேண்டும். வறண்ட சருமத்தில் பாரஃபின் எண்ணெய் அல்லது தரமான மாய்ஸ்சுரைசர் களிம்பைப் பூசிக்கொண்டால் பிரச்சினை தீரும்.

தலைமுடி வறண்டுபோனால் ?

கோடையில் சருமத்துக்கு அடுத்தபடியாகக் கூந்தலும் அடிக்கடி வறண்டுபோகும். குளிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் கலந்து தடவித் தலைக்குக் குளிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தடுக்கலாம். வாரத்துக்கு ஒருமுறை தரமான கண்டிஷனர் ஷாம்புவையும் பயன்படுத்தலாம். வெளியில் செல்லும்போது குடை அல்லது தொப்பி அணிந்து செல்வது நல்லது. தலையில் அதிகமாக வியர்த்தால், அழுக்கு சேர்ந்து அரிப்பு ஏற்படும். அப்போது சாதாரணமாக நாம் குளிக்கப் பயன்படுத்தும் சோப்பைக் கொண்டு தலைக்குக் குளித்தாலே அரிப்பு குறைந்துவிடும். இதற்கெனச் சிறப்பு ஷாம்பு எதுவும் தேவையில்லை. தலையில் பொடுகு, பூஞ்சைத் தொற்று பாதிப்புள்ளவர்கள் மருத்துவர் யோசனைப்படி கீட்டகெனசோல் மருந்து கலந்த ஷாம்புவைப் பயன்படுத்தித் தலைக்குக் குளித்தால் பலன் கிடைக்கும்.

பாதங்களில் வெடிப்பு

கோடையில் ஏற்படுகின்ற சரும வறட்சி காரணமாகப் பாதங்களில் வெடிப்பு தோன்றுவது அடுத்த பிரச்சினை. இதைத் தவிர்க்கத் தினமும் இரவில் பாதங்களைக் கழுவிச் சுத்தப்படுத்திவிட்டு, தரமான மாய்ஸ்சுரைசர் களிம்பைப் பூசிக்கொள்ள வேண்டும். கோடைக் காலத்தில் ஷூ அணிவதைத் தவிர்க்கவும். ஷூ அணிந்தால், காலுறைக்குள் அதிகமாக வியர்வை தேங்கி, விரல்களுக்கு இடையில் புண் உண்டாக்கும். பிளாஸ்டிக் செருப்புகளை அணிந்தால், பாதச் சருமத்தில் வெப்பம் அதிகரித்து வெடிப்புகளை அதிகப்படுத்திவிடும்.

சூரிய ஒளி ஒவ்வாமை

உணவு ஒவ்வாமை, மருந்து ஒவ்வாமை என்று இருப்பதுபோல், ஒரு சிலருக்குச் சூரிய ஒளியே ஒவ்வாமையை உண்டாக்கும். இவர்கள் வெயிலுக்குச் சென்றுவிட்டால் போதும், உடலெங்கும் அரிக்கத் தொடங்கிவிடும். சருமம் சிவந்து வட்ட வட்டமாகத் தடிப்புகள் தோன்றும். அவற்றில் நீர் கோத்துக்கொள்ளும். இதைத் தொடர்ந்து சருமம் உரியும். ‘சோலார் அர்ட்டிகேரியா’ ( Solar Urticaria ) என்று அழைக்கப்படும் இந்தத் தொல்லையைத் தடுக்க வேண்டுமானால், கோடையில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். உடல் முழுவதையும் மறைக்கின்ற வகையில் ஆடை அணிய வேண்டும். ‘சன் பிளாக்’ லோஷன்களைப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். இந்தப் பிரச்சினைக்குத் தகுந்த மருத்துவச் சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள வேண்டியதும் முக்கியம்.

- கு. கணேசன், பொது நல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x