

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 2015-16-ம் ஆண்டுகளுக்கான தொகுதி IV பணிகளின் கீழ் அடங்கிய பதவிகளுக்கான காலிப் பணியிடங்களில் நேரடியான நியமனம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்கான 5,451 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. உரிய தகுதி கொண்ட விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 08 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த 9 அன்று முதல் தயார்நிலையில் உள்ளன.
வயதுத் தகுதி: 01.07.2016 அன்று குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சி அருந்ததியர், எஸ்டி, கணவரை இழந்தவர்கள் ஆகியோர் 35 வயதுக்குட்பட்டோராக இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், முஸ்லிம்கள் ஆகியோர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்தப் பிரிவுகளைத் தவிரப் பிறர் 30 வயதுக்குட்பட்டோராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி
பத்தாம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான கல்வியில் தேர்ச்சிபெற்று மேல்நிலைப் பள்ளியில் சேரவோ கல்லூரியில் சேரவோ தகுதி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சர் பதவிக்குப் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் தமிழ், ஆங்கிலத் தட்டச்சுத் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்துத் தட்டச்சர் பதவிக்குப் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் தட்டச்சர், சுருக்கெழுத்துத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்
நிரந்தரப் பதிவு (One time registration) செய்திருப்பவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.75 செலுத்த வேண்டும். பிறர் தேர்வுக் கட்டணத்துடன் நிரந்தரப் பதிவுக்கு ரூ.50 சேர்த்துச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சி அருந்ததியர், எஸ்டி ஆகிய பிரிவினருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் கணவரை இழந்தவர்களுக்கும் கட்டண விலக்கு உண்டு. கட்டணத்தை ஆன்லைனிலோ வங்கி, அஞ்சல் செல்லான் மூலமாகவோ கட்டலாம்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் >www.tnpscexams.net / >www.tnpscexams.in என்னும் இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நவம்பர் 6 அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களின் சில நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் நடைபெறும். எழுத்துத் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முக்கிய நாள்கள்:
விண்ணப்பிக்க இறுதி நாள்: 08.09.2016
வங்கி அல்லது அஞ்சலகம் வழியே கட்டணம் செலுத்த இறுதி நாள்: 11.09.2016
எழுத்துத் தேர்வு: 06.11.2016
கூடுதல் விவரங்களுக்கு: >http://www.tnpsc.gov.in