Published : 30 Dec 2013 12:00 AM
Last Updated : 30 Dec 2013 12:00 AM

கற்பனை வளம் மிக்கவர்களுக்கு கேம் டிசைன் படிப்புகள்

கற்பனை வளம் மிக்கவர்களுக்கான ஒரு சிறந்த படிப்பாக பி.எஸ்சி., கேம் டிசைன் அண்டு டெவலப்மென்ட் மற்றும் கேம் புரோகிராம் ஆகிய படிப்புகள் உள்ளன. பிளஸ் 2 வகுப்பில் எந்த குரூப் எடுத்த மாணவர்களும் இந்த படிப்பை எடுத்து படிக்கலாம். விளையாட்டு ஆர்வம் மிக்கவர்களுக்கான வித்தியாசமான படிப்பாக உள்ளது.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசம் பாராமல் அலைபேசியில் பல்வேறு கேம்களை விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர். உலக அளவில் கேண்டிகிராஸ், ஆங்கரிபேட், டெம்பிள் ரன் உள்பட பிரபலமான அலைபேசி விளையாட்டில் பலர் மூழ்கி உள்ளனர்.

உலகச் சந்தையில் அலைபேசியின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காலக்கட்டத்தில், புதுப் புது விளையாட்டு களையும் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. எனவே, பி.எஸ்சி., கேம் டிசைன் அண்டு டெவலப்மென்ட், பி.எஸ்சி., கேம் புரோ கிராம் படித்து முடிப்பவர்களுக்கு, தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிக்க காத்திருக்கின்றன. வரும் 2015-ம் ஆண்டு களில் அலைபேசியின் பயன்பாடு மிகுதியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அலைபேசி மூலம் கார் வாங்குவது முதல் வீட்டு உபயோகப் பொருட்களை கொள்முதல் செய்வது வரையில் மக்கள் பயன்படுத்தவுள்ளனர்.

அலைபேசியின் பயன்பாடு மிகப்பெரும் வளர்ச்சி காணும் நிலையில் பலருக்கும் அறிமுகம் இல்லாத இப்படிப்பை வெகு சிலரே படிப்பதால், இவர்களின் எதிர்காலம் சிறப்புற்று இருக்கும். பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயன்ஸ், பி.சி.ஏ., பி.இ., கம்ப்யூட்டர் சயன்ஸ் என கணினி சார்ந்த பட்டப்படிப்பு படிப்பவர்கள், வார இறுதி நாள்களில் கேம் டிசைன் அண்டு டெவலப்மென்ட் படிப்பை தனியாக எடுத்து படிக்க முடியும். இப் படிப்புக்கு ஆங்கில அறிவு தேவை.

அண்ணாமலை பல்கலைக்கழகம், சிக்கிம், மணிபால் உள்ளிட்ட பல்கலைக்கழங்களுடன் இணைந்து தனியார் கல்லூரிகளிலும் இப்படிப்பை வழங்குகிறது. இதில் போஸ்டர் மேக்கிங், கேம் கிரியேஷன், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், கேம் போர்டு, கேம் இன்ஜினீயரிங் ஆர்க்கிடெக்சர், ஃபிளாஸ், ஜாவா மற்றும் 2-டி, 3-டி மொபைல் கேம் உள்ளிட்டனவும் கற்பிக்கப்படுகிறது. பட்டப்படிப்பு படித்து முடித்தவர்கள் கேம் டிசைன் அண்டு டெவலப்மென்ட் படிப்பில், பி.ஜி., டிப்ளமோ கோர்ஸ் எடுத்து படிப்பது சிறந்ததாக இருக்கும்.

வசதி படைத்தவர்கள் லண்டனில் உள்ள கல்லூரியில் ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் செலவு செய்து படிக்க முடியும். பி.ஜி., டிப்ளமோ ஓராண்டு படிப்பு முடித்தவுடன், வெளிநாடுகளில் பணியாற்ற வாய் ப்பு பெறலாம். சென்னையில் இமேஜ் குரூப் நடத்தும் ஐ-கேட் மீடியா கல்லூரி, பெங்களூருவில் ஆசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கேமிங் அண்டு அனிமேஷன் கல்லூரிகளில் படிக்கலாம். கல் லூரியில் இப் படிப்புக்கான வசதி வாய்ப்பு, வேலைவாய்ப்பு, உள் கட்டமைப்பு வசதி உள்ளனவா என சம்பந்தப்பட்ட கல்லூரியில் பயிலும் மாணவர்களிடம் கலந்தாலோசனை செய்த பின், சேருவது நலம்.

அரசுத் துறையை காட்டிலும் தனியார் துறைகளிலேயே இப்படிப் புக்கான பணி வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, கற்பனை குதிரையை ஓட விட்டு, விரும்பும் விளையாட்டுகளை நிஜமாக்க விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க கூடிய படிப்பு. பெண்கள் அதிகளவு ஆர்வமுடன் இப்படிப்பை எடுத்து பயின்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x